மீண்டும் மீண்டும் - காதல் நினைவுகள்

மீண்டும் மீண்டும்
மனம் விழைவது...
மீண்டு வர மறுப்பது...

காதல் அரும்பிய
கணநேரத் துளிகள்...

விரும்பியே தொலைத்த
மனதைத் தேடாத
விருப்பங்கள்...

இதயம் தொலைந்த இடம்
இதுதான் என்றறியாத என்
அறியாமை மிகுந்த நொடிகள்...

கண்களில் தொலைத்த
காதலை இதயத்தில் தேடிய
வெகுளித்தனங்கள்...

உயிர் குடிக்கும் பார்வை கொண்டே
உயிர் கொடுக்கும் காதலின்
முரண்பாட்டுத் துளிகள்...

இணை பிரியா
இதழ் விரிகையில்
இடைநின்ற
புன்னகை வரிகள்...

இதுபோதும் எனக்கு என்று
எப்போதும் கூறாத
தாகங்கள்...
தவிப்புகள்...

இதயம் தன்னை
இடம் மாற்றி
இளைப்பாறிய
பொழுதுகள்...

மறுமுறை வர(ம்) ஏ(வா)ங்கிய
மனக்களவுகள்...
மன்மதக் கனவுகள்...

இதழ் வியர்க்கும் வரை
இதயத்தில் காதல் நிலைக்க
விழையும் வேட்கைகள்...

கடைவிழி வழி மடை திறந்த
காதல் வெள்ளத்தில்
கரைசேர முயலும்
என் காளைத்தனமும்...
உன் கோழைத்தனமும்...

கண்கள் வழி பேசிய
முரண்பாட்டு மௌனங்கள் -
காதல் புதினங்கள்;புனிதங்கள்...

விழி ஈர்ப்பும் இதழ் நீர்ப்பும்
விளையாடிய தருணங்கள்...

படிக்கப் படிக்கப் புரியாத
இதழ் கொண்ட வரிகள்...

தேகப்பிழையில் தோய்த்த
தேடலில் வாய்த்த
அந்திப் பிழைகள்...

தேக மோகத்தில்
வேக வைத்த
வெண்ணிற இரவுகள்...

கற்றைக் கூந்தல்
ஒற்றி எடுத்த
கார்கால நீர்த்துளிகள்...

காலடித் தடங்களைக்
களவாடிய
கடல் அலைகள்...

காதல் பற்றிய தருணம்
காதலைப் பற்றி
காகிதம் தாண்டி எழுதிய
பாத வரிப்பள்ளங்கள்...

நிறைவாக...
நிகழ்வுகள் சுமந்த நினைவுகள்
நின்றாடும் நிகழ்காலம்
நிகழ்ந்த வண்ணமே நீள
யாசித்த பொழுதுகள்...

- பா.வெ.

எழுதியவர் : பா.வெங்கடேசன் (16-Nov-15, 9:03 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 359

மேலே