தாயை கவனிக்காத மகன்கள் மீது சட்டப்படி நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted Date : 19:26 (20/11/2015)

மதுரை: தாயை கவனிக்காத மகன்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் பொன் தேவகி (70). இவருக்கு இளங்கோவன், ராஜ்குமார் என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரை மகன்கள் கவனிகாததையடுத்து, தற்போது தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனக்கு மகன்கள் மற்றும் மகள் பராமரிப்பு செலவு தர உத்தரவிடக்கோரி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதி, இரு மகன்களும் மாதம் தலா ரூ.2 ஆயிரமும், மகள் மாதந்தோறும் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி, பொன்தேவகியின் மகன் இளங்கோவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''என் தாயார் தனது கடமைகளை சரிவர செய்யவில்லை. ஒரு தாய் என்பவர் குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்றால் மட்டும் போதாது. அந்த குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். அதை என் தாயார் செய்யவில்லை. மேலும், எனது தந்தையின் சொந்தையும் அபகரிக்க முயன்றார். எனவே, அவருக்கு பராமரிப்பு செலவு வழங்க வேண்டியதில்லை'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்பு இன்று (20-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது, ''எனது மகன் சொல்வது உண்மையல்ல. எனது மகன்கள் இருவரையும் நல்லபடியாக வளர்த்திருக்கிறேன். தற்போது எனது மகள் வீட்டில் வசித்து வருகிறேன். எனவே, எனது வீட்டை அவளுக்கு வழங்கினேன்'' எனக் கூறினார்.

இதையடுத்து நீதிபதி எஸ்.விமலா, ''ஒரு தாய் எனது பிள்ளைகளிடம் பராமரிப்பு செலவு கேட்டு நீதிமன்றத்துக்கு வந்தது துரதிருஷ்டவசமானது. பிள்ளைகள் தங்களது பெற்றோரை கவனிக்க வேண்டியது தாமீர்க, இயற்கையான மற்றும் மனித உரிமையம் ஆகும். மேலும், இது சட்டரீதியான, அடிப்படை உரிமையும் கூட. தர்மப்படி பெற்றோரை காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை. அந்த கடமையில் இருந்து தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இந்த மனுதாரர் தனது தாயின் கடமைகளை கூறுகிறார். ஆனால், அவரது கடமையை நினைத்து பார்க்கவில்லை.

எனவ, மனுதாரர் தனது தாயாருக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். 2-வது மகன் வெளிநாட்டில் வேலை செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிப்பதால், அவர் மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். மகள் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க சம்மதித்துள்ளார். இருப்பினும், அவரது கணவர் இறந்துவிட்டதால், அவர் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும்'' என உத்தரவிட்டார்.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (21-Nov-15, 1:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 240

மேலே