மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்புக்காக 2 ஆண்டுகள் விடுமுறை
மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்புக்காக 2 ஆண்டுகள் விடுமுறை!'
புதுடெல்லி: குழந்தை பராமரிப்புக்காக, மனைவி இல்லாத ஆண் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 2 ஆண்டு விடுமுறை அளிக்க 7–வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க அமைக்கப்பட்ட 7–வது சம்பள கமிஷனின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் ஆண் ஊழியர்களுக்கும் முதல்முறையாக குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 6–வது சம்பள கமிஷன்தான், பெண் ஊழியர்களுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் (730 நாட்கள்) குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க முதல்முறையாக சிபாரிசு செய்தது. அது அப்படியே அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, பெண் ஊழியர்கள், 18 வயது வரையிலான தங்கள் மைனர் குழந்தைகளைப் பராமரிக்க தங்கள் ஒட்டுமொத்த பணிக்காலத்தில் 2 ஆண்டுகள்வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில், 7–வது சம்பள கமிஷன், ஆண் ஊழியர்களுக்கும் முதல்முறையாக குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்துள்ளது. மனைவி இல்லாத நிலையில், குழந்தைகளை பராமரித்து வரும் ஆண் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை அளிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து 7–வது சம்பள கமிஷன் அறிக்கையில், ''மத்திய அரசு ஆண் ஊழியர், மனைவி இல்லாமல் வாழ்பவராக இருந்தால், குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு, அவரது தோள் மீது விழுகிறது. ஆகவே, அவருக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை அளிக்க சிபாரிசு செய்கிறோம்.
இதில், முதல் 365 நாட்கள், 100 சதவீத சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். மீதி 365 நாட்கள், 80 சதவீத சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். உண்மையிலேயே பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டும் பலன்அடையும் வகையில், இதில் ஏதேனும் அளவுகோலை அறிமுகப்படுத்தலாம்" என்று கூறப்பட்டுள்ளது.