நடவண்டி 3 - அறிவியல் சார்

அடிக்காம கொள்ளாம சந்தோசமா வச்சிருந்தார்ன்னா அன்னைக்கி அவரு அறிவியல் சாரு. ஏதாவது கோவத்துல வெளுத்துவிட்டாருன்னா வேட்டகார சாரு. இப்பிடித்தா நாங்க அறிவியல் சாருன்னு கூப்புடுற அவரு எங்களுக்குள்ள வெதச்சிக்கிட்டாரு...

பொன்வண்டப் புடிச்சி... நூலுகட்டிச் சுத்துறது அதுக்கே முடியலைன்னாலும் கொன்னஎல கொழுந்தப் பிச்சி வாயில வச்சி ஊட்டிவிடுறம்ன்னு திணிக்கிறது.. நாலு நாளு காவலுக்குப் பொறவு..... வண்டப் பிதுக்கியாவது முட்டைய எடுத்து நல்லெண்ண தடவி நாங்களும் அதோட சேந்து வெயில்ல காயிறது..... கொள்ள வெயிலு முதுகச்சுட.. “என்னடா இது.... இந்த முட்டையில குஞ்சையே காணும்ன்னு நசுக்கி ஒடைக்கிறப்பவே .... என்னத்துக்கோ அர்த்தம் வெளங்கி.. கூட்டமா சிரிக்கிறது... இப்படித்தாம் எங்களுக்கு வேட்டை... பழக்கம்....

இம்புட்டு சொல்ற நீ.. ஏம்ப்பா ஓணான விட்டுட்டான்னு நீங்க கேட்டியள்ன்னா.... அது நாங்க இப்பத்தான மூணாப்பு..அந்த வேலையெல்லா எங்க அண்ணம்மாருக பாப்பாய்ங்க.. கொஞ்சம் வளந்தாப்ல அதுக்கும் அப்பறம்..வாறன்.

சரி. சம்பவத்துக்கு வருவம். இப்படியா வேட்டைய வெளையாட்டா பண்ணிக்கிருந்த பயலுகளப் புடிச்சி “ டேய். பயலுகளா..யாரு யாரெல்லாம் சாரு கூட வாறதுக்கு விருப்பப்படுறீய”ன்னு கேப்பாரு..முந்திக்கிட்டு கையத்தூக்குன நாலுபேருதா அந்த வாரத்துக்கு அவருக்குப் பேச்சுத்தொணை. அவரு எப்படா கூப்புடுவாருங்குறத்துக்காகவே கையத் தூக்க ஒரு மாதிரி கையத் தூக்குனாப்புலையே வச்சிக்கிருப்பம். வேட்டைன்னு சொன்னவொடனே புலிவேட்ட சிங்கவேட்டன்னு எல்லாம் பெருசா கற்பன பண்ணி வக்காதிய. கொக்கு.. காட... நார..காட்டு மொயலு.. இந்த மாதிரிதா....

எங்க ஊருல ஒரு பெரியகொளம் இருக்கு… அந்தக் காலத்துல அரசாரங்கம் போட்ட எதோ ஒரு திட்டத்துல கொளத்து உள்ளாற இருந்த வெப்பல்ல கருவேல மரமா நட்டுவச்சதுல அது யாரும் வளக்காமலேயே வந்து கருவக்காடா ஆயிருச்சி. கோடையில எங்களுக்கு அது கருவக்காடு. மழை.. குளுரு காலத்துல எங்களுக்கு அது கொளம்... ஆடி மாச வாக்குல புதுத்தண்ணி வந்து நெறயிறப்ப.. பரவலா மொழங் காலு அளவுதே தண்ணி கெடக்கும். எங்க வயசுப்பயலுகளுக்கு அது.. அவனவன் வளத்திக்கிக்கித் தகுந்தாப்புல இடுப்பளவோ.. தொடையளவோ இருக்கும். அதுதா எங்க வேட்டக்களம்.

அறிவியல் சாரு ஒரு துப்பாக்கி வச்சிருந்தாரு. வெள்ளக்காரந்த் துப்பாக்கி.. அதுக்கு அவரு பொழங்குற குண்டு என்னன்னா.. நம்ம சைக்கிளு ரிம் பேரிங்குல பால்ரசு குண்டு இருக்குமே அதுதா..! நாங்க புடிக்கப்போற கொக்கு குருவிகளுக்கு அது போதுமே..... இடக்கால நாங்களும் ஒரு ஒரச்சாக்க எடுத்துக்கிட்டுப் போயிருவம். புதுத்தண்ணிங்கிறதுனால நத்தை நண்டு எல்லா காலளவு தண்ணிக்குள்ள எளைஞ்சிகிட்டுக் கெடக்கும்.. அதுகளையும் புடிச்சிப் போட்டுக்கிருவம். எத்தன பேருக்கு தெரிஞ்சிருக்குன்னு தெரியல. நத்தைக்கறி மாதிரி வயித்துப்புண்ணுக்கு ஒரு கைகண்ட மருந்து வராது. அம்புட்டு நல்லது.

இப்பிடியாப் பரிவாரங்களோட கொளத்துக்குள்ள எறங்கி மெதுவா... சளக்..சளக்...ன்னு போறப்ப அறிவியல் சாரப் பாக்கணும்.... கட்டம் போட்ட கயிலி..ஒடம்ப ஒட்டுனாப்ல ஒரு பனியன்...தலையில ஒரு உருமாக் கட்டு தோள்ல நாட்டுத் துப்பாக்கி... கூடவே நாங்க நாலு அஞ்சி பேரு..சட்டையோடவோ..அது இல்லாமலோ.....

இப்ப இருக்குற மாதிரி செல்பில்லாம் எடுத்துருந்தா இப்ப இதச் சொல்லையில இம்புட்டு சந்தோசம் இருந்திருக்குமான்னு தெரியலைங்க....

அவருக்கு கொக்கு குருவி கெடைக்குதோ இல்லையோ... எங்களுக்கு நண்டு நத்தை நெறையாக் கெடைக்கும்..புதுத்தண்ணி வேறயா....சளக்..புளக்.ன்னு ஒரே ஆட்டம்... கொக்குக்கு குறிவச்சி காத்துக்கிட்டே இருப்பாரு சாரு... அப்பம் பாத்து ஒருத்தம் "டேய்ய்ய்....... ஊளக்காதா.....ன்னு புதுத்தண்ணிக்கு ஊறுன சாணியஅள்ளி எறிய... ஊளக்காதன்னு சொன்னவம் வெலக.... சாணி சத்துன்னு தண்ணில விழுந்து தெறிக்கும். அப்பயில வந்து உக்காந்த கொக்கு சுருக்குன்னு திரும்பிப் பறந்திரும்....
குறிவச்சிக் காத்துக் கெடந்தவரு திரும்பி மொறப்பாருபாருங்க... மொறச்ச வாக்குலையே “ இவன் எந்த ஊருலடா வச்சிப் பெத்தாய்ங்க"..ன்னு சலிச்சிக்கிட்டே அடுத்த குறி வக்க ஆரம்பிச்சிருவாரு. ஒரு வழியா...ரெண்டு சாக்கு நண்டு நத்தையும் ..... ரெண்டோ மூணோ... குருவி கொக்கும் சேத்துக்கிட்டு வீடு திரும்புவம்....

மய்க்கா நாளுபள்ளிக்கொடம் வந்துட்டாருன்னா...அவ்வளவுதான்.. மொழங்கையிவரை மடிச்ச முழுக்கையிச்சட்டை.... வெள்ளவேட்டி..சிவாசி மாதிரி நெளிச்சி சுருட்டுன முடின்னு கம்பீரமா இருப்பாரு.மூணாப்பு படிக்கிறப்பதா எங்களுக்கு இங்கிலீசும் அறிவியலும் ஆரம்பிச்சுது. இங்கிலீசு எவ்வளவுக்கு ஏறலயோ.. அதுக்கு எதுத்துக்கிட்டு அறிவியலு எக்குத்தப்பா உள்ள ஏறுனிச்சின்னா அதுக்கு சாருதாங் காரணம். அப்பவே எங்களுக்கு லென்ச வச்சி பேப்பர எரிக்கிறது, ட்யூப்ல ஓட்டை போட்டு தண்ணி ஓட விட்டு அழுத்தம் பாக்க வைக்கிறது..மஞ்சள்ல சோப்புத் தண்ணி கலந்து செகப்பா மாத்தி வைக்கிறதுன்னு நெறையா செஞ்சி காட்டுவாரு. அது எதுனால அப்படி நடக்குதுன்னு வெளக்கமும் சொல்லிப்புடுவாரு. ஒரு மரத்தடிய ஆராய்ச்சிக் கூடமாவே பாவிச்சவைய்ங்க நாங்க....

ஒரு நா பரிச்சை வச்சாரு. எல்லா சரியா எழுதி முடிச்சி வேகமா நாந்தாம் பர்ஸ்ட்டுன்னு ஓடிப் போயி பேப்பரக் குடுத்தேன். பொளேர்ன்னு ஒரு அறை.... எனக்குப் பொறி கலங்கி தண்ணி பொங்குது...பேப்பரப் புடுங்கி வீசி “ இப்பம் போயி எடுத்துக்கிட்டு வா “ன்னாரு... நானும் போயி எடுத்துக்கிட்டு வந்து குடுக்க.. மறுபடியும் பொளேர்.... காரணம் என்னன்னு புரியாம நா கதறி அழுக ஆரம்பிச்சிட்டேன்..
நா அழுதது அவர ஒடச்சிருச்சோ என்னமோ... “ ஏண்டா... உங்கப்பா வாத்தியாரு... நல்லாப் படிக்கிறம்ங்கிற திமிராடா..? எந்தக்கையில பேப்பரக் குடுக்குறன்னு கேக்க... பயலுக எல்லாம் “ சார்... அவனுக்கு நொட்டாங்கையி சார் ன்னு சிரிச்சாய்ங்க... சாருக்கு ஒரு மாதிரி போயிருச்சி. நெஞ்சோட சேத்து அணைச்சி... கண்ணீரத் தொடச்சிவிட்டு அப்படியெல்லாம் செய்யக்கூடாது தம்பி ன்னு தட்டிக்குடுத்து இப்படிச் செய்யனும்ன்னு சொல்லி அனுப்பி வச்சவரு.... அன்னிக்கி சாயங்காலமே வீட்டுக்கு வந்து நின்னாரு..

அப்பாக்கிட்ட “ சார் தம்பிக்கி எடது கையிப்பழக்கமுன்னு தெரியாது.... அடிச்சிப்புட்டேன்... நல்லாப் படிக்கிற பயல்ல.. அதாங் மனசு கரகரன்னு இருக்கு.. நீங்க எதவும் தப்பா எடுக்குறாதீயன்னு சொல்லிட்டப்போக.. அப்பா என்னப் பாத்து சிரிச்சதுக்கு அன்னைக்கி எனக்கு அர்த்தம் வெளங்குற வயசு இல்ல...
சாரு ஒரே ஊருங்கிறதுனால... இப்பவும் எதுக்கால வாறப்ப நாங்க அம்புட்டு பேரும் எந்திரிச்சி நிப்பம்... வணக்கம் சொன்னா... பெருமையா தலைய ஆட்டிக்கிட்டே போவாரு... சாருக்கு சமீபமா மனசுல என்ன கவலன்னு தெரியல.. ரிடேர்டு ஆனதுக்குப் பொறவு ரொம்பக் குடிக்க ஆரம்பிச்சிட்டாரு. அதனாலயோ என்னமோ ஒரு நா மாரடைப்புல செத்தும் போயிட்டாரு. மனுசனோட சாவச் சாதரணமா எடுத்திக்கிட்டாலும் அவருக்கு சாவுற வயசு இல்லங்குறதுனால எங்களுக்குச் சாதரணமா எடுத்துக்குற முடியல.. எங்க ஊருல அவருக்கிட்ட படிச்சவைங்க ரெண்டு தலமொற ஆளுகன்னால.. அன்னைக்கு ஊரே அழுதிச்சி...

இன்னமும் பள்ளிக்கொடத்தத் தாண்டிப்போகையில மங்களமா நெனப்புல நெறஞ்சி வழியுவாரு.. எங்க அறிவியல் சாரு....!!

எழுதியவர் : கட்டாரி (சரவணா ) (25-Nov-15, 12:43 pm)
பார்வை : 353

மேலே