இவ்வளவுதானா - 4

ஏங்கியவை பலவென இவன் பகுத்துக் கூறிடுங்கால்
குரு புகன்றார்.. ஏ மனிதா.. குவலயத்தில் யாது சதம்
எவையல்ல வென்றுரைப்பென்..கேள் இதனை:
மகத்தான மண்ணும் விண்ணும் யாவும் மனத்தினில்தான்
புறத்தினில் இவையேதுமிலை வேரற்ற விருட்சத்திற்கு இலைகளுண்டோ
அதுபோல் முன் வாசனையின்றி ஒரு வாழ்வுமில்லை;
எனில் யாவும் முன் வாசனையால் நிரம்பி நிற்கும்
மாயைகளென்றே நீ அறிவாய் !
உன் சித்தத்தில் உள்ளே இச் சகமுண்டு காண்!

கண்டனவெல்லாம் கனவே என்றுணர்வாய் எதுவும் சத்தியமன்று
பாசவசத்தினாலும் உன் சுபாவத்தினாலும் வளர்ந்தேன் என்றும்
மிகுந்தேன் என்றும் வாழ்ந்தேன் என்றும் கூறுகின்றாய்..
நீ கண்டன வெவையும் கடுகளவாம் ; விண்டனவெல்லாம் அயலேயாம்
அலைந்து ழன்றதும் யாவுமோர் மாயையினால் அன்றி வேறுமுண்டோ
சேவகனாய், சேனைத் தலைவனுமாய் , வேதியனாய், விருத்தனாய் ,
காமுகனாய், காதலனாய், கீரனுமாய் , பக்தனுமாய் மாறி மாறி
புனைந்த பல வேடங்கள் விசித்திரமே உன்னை நீ அறியாததனால் !

இவன் அவன் நான் ஈது அது எனது என்றே
தன்னிலை முன்னிலை படர்க்கை யாவிலும்
உன்னிலை நீ அறியாது உழன்றதோர் வாழ்க்கையிலே
எவற்றையும் தனதாக ஏங்கி ஓங்கியும், உடைந்தும்
இடர்களில் மூழ்கியே கடந்து வந்தாய் நீ வந்த பாதையெல்லாம்..
அவனியாவுமே பரம்பொருளே யானும் அதுவே எனும் மெய்மை
அறிந்தவர் உழல்தலின்றி நின்றயரார்..துயருறார் ;
மதிமயக்கும் மாயையினால் கவருறார் ;
இன்பதுன்ப விலாச மையல்களில் சிக்கி மூழ்காதார்!

(இன்னும் வரும்)

எழுதியவர் : பாலகங்காதரன் (26-Nov-15, 5:33 pm)
பார்வை : 87

மேலே