ஒரு வயதான தம்பதிகள்

நான் தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு வயதான தம்பதிகள் இளநீர் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் இருவருமே என் role model என்று கூறலாம்.

அடிக்கடி சண்டை போட்டுகொள்வார்கள். அவர்கள் போட்டுக்கொள்ளும் சண்டையில் பாசம் தெரியும். ஒருவரை விட்டு ஒருவர் தனித்து இருந்தது இல்லை. அவர்கள் இருவரையும் கண்டு பல நாட்கள் பொறாமை பட்டிருக்கிறேன்.

அவர்கள் இருவருமே கடுமையான உழைப்பாளிகள். உடல் சுகமில்லை என்று ஒரு நாள் கூட அவர்கள் தொழிலுக்கு விடுப்பு கொடுத்தது இல்லை.. அவர்களை பார்த்து நான் என் வாழ்கையில் அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன். திடீர் என்று ஒருநாள் அவர்கள் இருவருமே தொழிலுக்கு வரவில்லை. ஏனென்று தெரியவில்லை. தொடர்ந்து ஒரு வாரம் அவர்கள் அங்கு வரவில்லை.

அவர்கள் இருவருக்கும் என்னவானதோ என்று என்ன மனம் துடித்துப்போனது. ஒவ்வொரு நாளும் என் இரவு நேரங்கள் தூக்கம் இன்றி கடந்தன. இன்றாவது அவர்கள் வந்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு அலுவலகம் புறப்படுவேன்.

ஒரு வாரம் கழிந்த பின் அங்கு இளநீர் கடை கண்ணில் தென்பட்டது. கடையை சிற்றுளும் கூட்டம். ஆர்வத்தோடு அவர்கள் இருவரையும் பார்க்க சென்ற எனக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. அங்கு அந்த பெரியவர் மட்டுமே இருந்தார். அவர் முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது. ஒரு சுத்து மெலிந்திருந்தார்.

என்ன தாத்தா என்ன ஆச்சு? பாட்டிமா எங்க? என்று கேட்டேன். பதில் வரும் முன் கண்ணீர் வந்தது அவர் கண்களில். என்ன ஆச்சு தாத்தா? என்று பதறிப்போய் கேட்டேன்.

ராத்திரி படுத்தவ காலைல எந்திரிக்கல மா.. என்ன இப்படி தனிய தவிக்கவிட்டு போய்ட்டா என்று என் கைகளை பிடித்துக்கொண்டு கதறி அழுதார்.

அவ இருந்த வர என்ன ராசா மாறி பாத்துகிட்டா.. நான் உழச்சதே அவளுக்காக தான்.. இப்ப நா யாருக்காக ஒழைகிறேன்னு எனக்கே தெரியல மா.. எனக்கு பிள்ளை இல்லாத குறைய அவ தான் தீத்தா இப்ப அவளும் இல்லாம போய்டாளே.. என்று மனம் கலங்கினார்.

ஒரு நாள் கூட என்ன அடுபங்கற பக்கம் விட்டதில்ல மா இப்ப நானே ஆக்கி சாபிடுற நிலைமை.

அவ என்னோட இருந்தவர நா அவளுக்கு ஒரு சுகத்தையும் குடுக்கல சதா சண்ட போடுகினே இருந்தேன். இப்ப அவ அருமை எனக்கு புரிஞ்சுருச்சு ஆனா அவ என்னோட இல்லையே..

வாழ்க்கையே முடியபோறப்பதான் மா நம்ம எதுக்காக வாழறோம்னு அர்த்தமே புரியுது என்றார்.

அந்த முதியவரின் வார்த்தைகளில் இருந்தும் வாழ்க்கையில் இருந்தும் அதிகம் கற்றுக்கொண்டேன் நான்.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (28-Nov-15, 9:30 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 576

மேலே