நவரச புதினம்

நவரச புதினம்

சிற்பி வடிக்கா ஓவியம் – அவள்
செந்நாப் புலவரின் காவியம்!
கற்றைக் குழலதில் மேகம்! – உழல்
கண்களால் கண்டால் யோகம்!

பிரம்மன் வரைந்தது பெண்ணுரு – கண்டு
பிரமித்து கரையுது என்னுரு!

மலரினும் மெல்லியதே பாதம் – வாய்
மழலை மொழி இனியதொரு கீதம்!
உலவிடும் நிலவே வதனம்! –
உண்மையில் நவரச புதினம்!

நாண்முகன் வரைந்தது பெண்ணுரு – கண்ட
நாள்முதல் கரையுது என்னுரு!

இடைதனில் ஒளிருமே மின்னல் – எழில்
இன்பமதோ ஊற்றில் இனிக்கும் கன்னல்!
நடைதனைப் பயிலுமே அன்னம்! – அவள்
நளினமதில் மயிலென்ன பண்ணும்!

பிரம்மன் வரைந்தது பெண்ணுரு – கண்டு
பிரமித்து கரையுது என்னுரு!

வெண்டைவிரல் மீட்டிடுமே வீணை! - அவள்
வெள்ளரி பிஞ்சுக்கே இணை!
தண்டைதனில் ஒலித்திடும் தாளநயம்! – அழகு
தமிழணங்கே இனிய பூபாளம்!

நாண்முகன் வரைந்தது பெண்ணுரு – கண்ட
நாள்முதல் கரையுது என்னுரு!

----கே. அசோகன்
நன்றி - பொன்னகரம்” சிற்றிதழ்
நவம்பா் 1983

எழுதியவர் : (2-Dec-15, 6:33 pm)
பார்வை : 76

மேலே