தமிழே தமிழே

அன்னை மொழியே அருந்தமிழே!
என்னை வளர்க்கும் ஏந்திழையே!
மங்கலத் தமிழே மணிவிளக்கே!
மலரின் மணமே மகரந்தமே!

பண்ணே பழமே பாயிரமே!
பதமாய் சுவைதரும் இளநீரே!
கன்னலில் கலந்த கற்கண்டே!
தென்றல் காற்றே தெள்ளமுதே!

திரவிய மலையே தீஞ்சுவையே!
தீர்ந்து விடாத மதுக்கடலே!
வரமே உரமே வண்டமிழே!
சுரமே சுகமே சுடரொளியே!

எண்ணே எழுத்தே ஏழிசையே!
எதுகையும் மோனையும் உன்னிசையே!
அகமாய் புறமாய் அருமருந்தாய்
அகத்தை வெளுக்கும் அருங்கருத்தே!

முல்லை மலரே முக்கனியே!
முதுமை இல்லாத முத்தமிழே!
உயிரில் உதட்டில் உறவாடும்
உன்னத ஒலியே வெண்மதியே!

விந்தைகள் நிறைந்த விரிவானே!
எந்திர விசையே எழில்மலையே!
மின்னலின் ஒளியே மிகுகனலே!
தென்னவர் போற்றும் தேன்ஊற்றே!

பண்பே பசிதீர் பழச்சுளையே!
பண்ணும் மயங்கும் பாசுவையே!
வண்டாடும் செண்டெ விளைநிலமே!
வாழ்த்துகள் கூறும் வலக்கரமே!

மத்தள இசையே மாங்குயிலே!
இத்தரை விரும்பும் இளநகையே!
வேதத்தின் ஊற்றே விரிகடலே!
வியப்பே விருந்தே விண்ணொளியே!

அரியா சனத்தில் நீயிருந்தால்
சரியார் உனக்கே யாருண்டு?
பாக்கள் நால்வகை நீகொண்டாய்
பூக்களின் மணத்தையும் நீவென்றாய்

முத்தாய் சொத்தாய் தித்திதிப்பாய்
வித்தாய் விளங்கும் ஒளிவிளக்கே
நித்தம் கத்தியே உனைப்பாட
பித்தம் தீர்ப்பாய் பறந்தோட

நெஞ்சின் துடிப்பே நித்திலமே!
நேர்பட நிற்கும் சத்தியமே!
பகையைப் போக்கும் பாசுரமே!
பரிவை வளர்த்திடும் பங்கயமே!

எழுத்தின் வடிவாய் எழுந்துவந்து
விழுதாய் தாங்கிடும் தமிழ்த்தாயே!
பழுதுகள் தாக்கிடும் காலத்திலே
பக்கத்துணை என்றும் நீதானே!

கதியாய் விளங்கும் கதிரொளியே!
மதியை வளர்க்கும் மாமருந்தே!
உன்னத இசையே ஊன்உரமே!
உலவிடும் காற்றில் உறைபவளே!

பிறந்தேன் வளர்ந்தேன் நீபார்க்க
பிறழேன் ஒருநாளும் பிறர்க்காக
எனைநான் இழப்பேன் தமிழ்க்காக
எந்நாளும் மறவேன் தமிழ்காக்க!

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்.

எழுதியவர் : சொ.பாஸ்கரன் (4-Dec-15, 1:53 pm)
பார்வை : 64

மேலே