நாங்கள் பாவப்பட்டவர்கள்

இந்த மழை வெள்ளத்தில்
வெளுத்துப் போனது
அரசியல் சாயம்...!

மார்தட்டி நிமிர்ந்தது
மறைந்திருந்த
இன மத மொழி கடந்த
மனித நேயம்...!

மண்நிலை பாராமல்
வீடுகளை அடுக்கிட
ஏரிகளின் குரல்வளைகளை
நெரித்துத் தள்ளி
இயற்கைத் தாயின்
கருவறை நீர்த்தேக்கங்களை
ஊழல்களுக்கு
தாரை வார்த்த
அரசியல்அற்புதர்களே...!

உங்களின் வாக்குகளுக்கு
மட்டுமல்ல,
அந்த ஊழலுக்கும்
நாங்கள்தான்
இப்போது பலிகடாவாய்
மாற்றப் பட்டோம்.

எங்களின்
ஒவ்வொரு அணு
மட்டுமல்ல...
நாங்கள் அவர்களுக்கு
அனுப்பிவரும்
எல்லா உதவிப்பொருட்களும்
மனிதநேயம்
சுமந்து நிற்கிறது.
அதற்கெதற்கு
அரசியல் சாயம்.?..

நாங்கள் என்றும்
பாவப்பட்டவர்கள்...
அதனால்தான்
எல்லாவற்றையும்
மறந்துபோகிறோம்.

வாழ்க ஒழிக என்ற
கோசங்களுக்குள்
எங்களின்
வாழ்க்கையையும்
முடித்துக் கொள்கிறோம்.

அரசியல் கலப்பின்றி
உண்மையாய் உதவுங்கள்.
இல்லையேல்
உபத்திரம் செய்யாமல்
மனித நேயம் என்ன என்று
ஒதுங்கி நின்றே பாருங்கள்.
ஒற்றைக் கையுடன்
நீந்தி உதவும்
எங்களில் ஒருவனை...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (6-Dec-15, 6:59 pm)
பார்வை : 98

மேலே