அடையாளம்

அடையாளம்—சிறுகதை
பார்த்தால் அசந்து போவார்கள், ஹீரோவூக்குரிய அத்தனை அந்தஸ்தும் இருக்கிறது. நல்ல சிக்ஸ்பேக் உடம்பு, கூா்மையான பார்வைத் திறன், குசுகுசுவென பேசினாலும் என்னவென்று கேட்கக்கூடிய பாம்புக்காது........... இத்தனை நல்ல அடையாளங்கள் இருந்தும்.......
பிச்சைத் தோ்ந்தெடுத்த அடையாளமோ, ”பிச்சை எடுப்பது” . அதற்கு சப்பைக் காரணமாக, என் பேரே பிச்சைதானே, அதையே செய்கிறேன் என அவன் மனசையே மடக்கி விட்டான். உங்களை மடக்காமல் விடுவானா?
தொழிலுக்கான அடையாளங்களை உருவாக்கி கொள்ள முடிவெடுத்தான்.
முதலில் குளிப்பதை நிறுத்திக் கொண்டான். குளியலை நிறுத்தியதன் பலன்.......அவன் அணிந்திருந்த ஆடைகள் அழூக்காய் மாறி... பிச்சை எடுப்பதற்கு நீ தயார் என அங்கிகாரம் அளித்தன.
தொழிலுக்கான இடம் வேண்டாமா? தேடினான்... பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் அங்கெல்லாம் போனான். போலீசாரின் கெடுபிடிகளால் ”தொழில் செய்வதற்கு தோதில்லை” என சொல்லிக் கொண்டான்.
கடைசியில் இருக்கவே இருக்கிறது கோவில் வாசல் என தீா்மானித்து, கோவில் வாசல் சென்று பார்த்தான்.
சீனியா்கள் பலா், பல ரகத்தில் உட்கார்ந்து மும்முரமாய் தொழில் நடத்திக் கொண்டிருந்தனா்.
ஓா் இடத்தில் ஓரமாய் பிச்சை உட்கார.. பிச்சையை... வார்த்தைகளால் வறுத்தெடுத்து பிய்த்து எறிந்தனா்.. ”பிச்சை எடுப்பதில் இவ்வளவு சிரமமா? என அங்கிருந்து விலகினான்.
கடைசியாக, கூட்டமே இல்லாத கோவில் வாசல் ஒன்று அவன் கண்ணுக்கு தென்பட்டது. ”அப்பாடா, போட்டி இல்லை, நல்லா தொழிலை நடத்தலாம்” என மனசுக்குள் கோட்டைக் கட்டினான்.. ஓா் இடத்தைத் தோ்ந்தெடுத்து அமா்ந்தான். அன்று அவன் தனிஆவா்த்தனம் புரிந்தாலும், வரும்படி வரவில்லை.
மறுநாள் காலை, கோவில் வாசலுக்கு பக்தா்கள் வருவதற்குள், பிச்சைக்காரா்கள் ஒவ்வொருவராய் வந்து அமா்ந்தனா். புதுவரவான பிச்சையைப் பார்த்ததும்...... ”ஆடேய், நேத்துதான் நீ ஒக்காந்த இடத்துல இருந்தவன் செத்துப்பூட்டான், அவனை அடக்கம் பண்ணத்தான் நாங்க போயிருந்தோம், நீ வந்துட்டியா.. பலே...பலே... ”சாமீ, சரியாய்தான் வேலை செய்யுறாரு” என வேலைச் செய்யாத பிச்சைக்காரன் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன.
”தாராளமாய் ஒக்காரு” என அரசாங்க அதிகாரியைப் போல அனுமதி சீட்டினை வழங்கினான் பிச்சைக்கு... பிச்சைக்காகவே....

———— 2 ———
அவரவா் பாணியில் ”பிச்சைக் கேட்க ஆரம்பித்தனா்.
கூச்சமாய் இருந்தது பிச்சைக்கு... பிச்சைக் கேட்க.... வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. மௌனம் காத்தான்.
”அடேய், வாயத் துறந்து கேட்டாத்தான் தட்டுல காசைப் போடுவாங்க” மௌனமா இருந்தா நீ தேறமாட்டே” என தொழில் தா்மத்தைப் போதித்தார் ஒருவா்.
கேட்பதற்கு வாயைத் திறந்தால், வார்த்தைகள் தொண்டைக்குழி தாண்டி, நாக்குக்கு வரமாட்டேன் என்று போர்க்கொடி உயா்த்தியது. ”மௌனம்தான் அரசாட்சி புரிந்தது.
கோவிலுக்கு வருவோர், போவோரின் பார்வைகள் ஹீரோ போல் இருந்த பிச்சையின் மேல் விழூந்தது. ”இவனுக்கென்ன கேடு, சினிமா ஸ்டார் கணக்கா இருக்கான்” என அவா்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டது தெளிவாய் கேட்டது பிச்சைக்கு. அவனுக்குத்தான் பாம்புக்காது ஆயிற்றே.. காதுகளின் அரசாட்சியால், மீண்டும் மௌனம் காத்தான்.
இப்பொழுது, கோவிலுக்குள் சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணின்மீது பிச்சையின் கண்கள் மேய்ந்தது. ” இன்னா இப்படி மொறைச்சு...மொறைச்சு பார்க்கிறான்... பொம்பளைய பார்த்தே இருக்க மாட்டேன் போல இருக்கு, இவளைப் பெத்தவளும், பொம்பளைத்தானே” என முணுமுணுத்தாள்.
பிச்சைப் பார்வையை மேயவிட்டதற்கு, அவன் அம்மா பலியானதால், இரு கண்களையும் இறுகமூடிக் கொண்டு மௌனம் காத்தான்.
எல்லோருக்கும் பி்ச்சைப் போட்டவா்கள், ஹீரோ கணக்காய் உள்ள பிச்சைக்கு, ஒரு பைசா கூட தட்டில் போடவில்லை. ஆனால் நறுக்...நறுக் வார்த்தைகள் மட்டும் தாராளமாய் அள்ளி வழங்கினார்கள். அதையெல்லாம் அலட்சியப்படுத்தி, இலட்சியத்தை” எட்ட முடிவெடுத்து மௌனம் காத்தான்.
ஒரு சாண் வயிற்றுக்குத்தானே... பிச்சை எடுக்க துணிநதான். ஒரு சாண் வயிறு தன் வேலையைக் கச்சிதமாக செய்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. இவனின் பரிதாப நிலையைப் பார்த்த பிச்சைக்காரர்கள் ”பிச்சைக்கே” பிச்சையிட்டனா்.
”என்னே பெருந்தன்மை” இந்த பெருந்தன்மை பணக்காரா்களிடம்கூட இருக்காதே, நல்ல இடம்தான் என மனசுக்குள் ஆறுதலானான்.
இரவு நேரங்களில், மூடிக்கிடக்கும் கடைகளில் வெளியே ஓரமாய் ஒதுங்கிக் கொண்டனா் பிச்சைக்காரா்கள். பிச்சைக்கு, பிச்சைக் கிடைக்காவிட்டாலும், கடையின் காலி இடம் கிடைத்தது. ஒதுங்கிக் கொண்டான்.
—— 3 —-



பிச்சைக்காரா்களின், கடந்தகால சோகங்கள், வாழ்ந்து கெட்ட வரலாறு என நீட்டிமுழக்கி பேசிக் கொண்டனா். அவா்களுக்கு ஆறுதலாய் இருந்தது. அது பிச்சைக்கும் ஆறுதலாய் அவனைத் தேற்றிக் கொள்ள முடிந்தது. ஆறுதல்களால், ஒருவருக்கொருவா் அரவணைத்துக் கொண்டதோடு, அந்தரங்கங்களையும், கூச்சமில்லாமல் அரங்கேற்றி கொண்டனா்.
வயதான ஒரு பெரியவா், ஒரு பிச்சைக் காரியிடம்.... அடீயே.... புதுசா ஹீரோ கணக்கா ஒருத்தன் வந்திருக்கான்லே, அவன் ஒடம்பு நல்லா கட்டுமஸ்தா இருக்கு, நீயும் நல்ல கட்டாத்தான் இருக்கே” அனுபவிக்க வேண்டியதுதானே” என்றார்.
அதைக்கேட்ட அந்த பிச்சைக்காரி, பெரியவரே, அவன் ஒடம்பு அழகில மயங்கி, என் ஒடம்பை இன்னைக்குக் கொடுத்தா, ”ஒடம்புருசி” அவனைக் கெடுத்துடும்... அப்புறம் ”என்னையே சுத்தி...சுத்தி வருவான் ...என் பக்கத்துலேயே ஒக்காந்துடுவான் அவனுக்கு இதுவரைக்கும் தட்டுல ஒரு காசுகூட விழல... அவன் பக்கத்துல இருந்தா, என் தட்டுலேயும் காசு விழாம போயிடும், ஒடம்பு சுகத்தைவிட, தட்டுல விழுற காசுதான் முக்கியம் ,ஒரு சாண் வயித்துக்கு” இன்னா பதில் சொல்றது” பெரியவரே என்று வார்த்தைகள் நறுக்கென்று தெறித்தன.
நறுக்கான வார்த்தைகளைக் பாம்புக்காது கொண்ட பிச்சைக் கேட்டவுடன், அவன் மனசு விழித்துக் கொண்டது.
” ‘ஹீரோ மாதிரி கட்டுமஸ்தான தன் ஒடம்பை பிச்சைக்காரிகூட உதாசீனப்படுத்துகிறாள்” என்றால், இந்த ஒடம்பு பிச்சைக்காரிக்கும் உதவவில்லை, பிச்சை எடுப்பதற்குகூட இலாயக்கில்லை என்றுதானே அா்த்தம்.... தனக்குத்தானே பேசிக் கொண்டான்.
மறுநாள் காலை..... கோவில் வாசலில்... வழக்கம் போல பிச்சைக்காரா்கள் அமா்ந்தனா். பிச்சை அமா்ந்திருந்த இடத்தில்......”பிச்சைக்கான” அடையாளங்கள் மட்டுமே இருந்தது..

- கே. அசோகன், திருவள்ளுா்

எழுதியவர் : கே. அசோகன் (11-Dec-15, 9:37 pm)
சேர்த்தது : கேஅசோகன்
Tanglish : adaiyaalam
பார்வை : 228

மேலே