முத்திரை

போரடிக்கும்போது ஷெல்ஃபிலிருந்து ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தைப் பிரித்துப் படிப்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. இன்றைக்கு அப்படிச் சிக்கியது, சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை.

மாதவியின் நாட்டிய அரங்கேற்றத்தைப்பற்றிப் பாடும் இளங்கோவடிகள், அவள் ஆடிய மேடை எப்படி இருந்தது என்று மிக விரிவாகப் பேசுகிறார். அதில் ஒரு வரி:

ஒருமுக எழினியும், பொருமுக எழினியும்,

கரந்துவரல் எழினியும்…

’எழினி’ என்ற பெயரில் சில பழைய அரசர்கள் உண்டு, கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும் அபூர்வமாகச் சிலர் அந்தப் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதாக அறிகிறேன். ஆனால் இந்த வரிகளைப் படித்தபோதுதான் ‘எழினி’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று தேடத் தோன்றியது.

தமிழில் ‘எழினி’ என்றால் திரை அல்லது திரைச்சீலை என்று அர்த்தமாம். இந்தப் பெயரைக் குழந்தைகளுக்குச் சூட்டும்போதும்கூட, ‘திரை போன்றவன்’, ‘திரை போன்றவள்’ என்றுதான் பொருளாம்.

இளங்கோவடிகள் வர்ணிக்கும் மாதவியின் நாட்டிய அரங்கில் மூன்றுவிதமான திரைகள் கட்டப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமாக இயங்குகிறவை:

ஒருமுக எழினி : அரங்கத்தின் இடதுபக்கத்தில் சுருக்கிக் கட்டப்பட்டிருக்கும், இதோடு இணைக்கப்பட்டுள்ள கயிறை இழுத்தால் இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் சென்று முழுவதுமாக மூடிவிடும், அல்லது திறந்துவிடும்
பொருமுக எழினி : அரங்கத்தின் இருபுறமும் சுருக்கிக் கட்டப்பட்டிருக்கும். இவற்றோடு இணைக்கப்பட்டுள்ள கயிறுகளை இழுத்தால், ஒவ்வொன்றும் அரங்கின் ஒரு பாதியை மூடும் (அதாவது, அரங்கத்தின் மையத்தில் ஒன்றாகச் சேர்ந்துகொள்ளும், பின்னர் எதிர்த் திசையில் பிரிந்து வரும்)
கரந்துவரல் எழினி : மேடைக்குமேலே சுருட்டிக் கட்டப்பட்டிருக்கும். கயிறை இழுத்தால் கீழே வந்து அரங்கை மூடும், அல்லது திறக்கும்

இந்த மூன்று வகைத் திரைகளையும் நாம் இப்போதும் பார்க்கிறோம், சிலப்பதிகாரம் எழுதப்பட்டபோதே இவை புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

குறிப்பாக, ‘கரந்துவரல் எழினி’ என்ற பெயர் மிக மிக அழகானது, பொருத்தமானது.

தமிழில் ‘கரத்தல்’ என்றால் மறைத்தல் அல்லது ஒளித்துவைத்தல் என்று அர்த்தம். ‘கரந்து’ என்றால் ‘ஒளிந்து’, ‘உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்’ என்று இறைவனைப் பாடுவார் நம்மாழ்வார்.

ஆக, ‘கரந்து வரல்’ என்றால் என்ன அர்த்தம்? ஒளிந்திருந்து திடீர் என்று நம்முன்னே வந்து தோன்றுதல். இல்லையா?

ஒரு மேடையில் மேலே இருந்து கீழே வரும் திரை அதைத்தானே செய்கிறது? நிகழ்ச்சி நடக்கும்வரை அப்படி ஒரு திரை இருப்பதே நம் கண்ணில் படுவதில்லை, சட்டென்று எங்கிருந்தோ ஒரு திரை கீழே வருகிறது, அரங்கை மூடிவிடுகிறது.

பின்னர், அடுத்த நிகழ்ச்சி தொடங்குமுன், திரை மீண்டும் சுருண்டு மேலே செல்கிறது, ஒளிந்துகொள்கிறது. இப்படிப்பட்ட ஒரு திரைக்குக் ‘கரந்து வரல் எழினி’ என்ற பெயர் எத்துணைப் பொருத்தம்!

***

என். சொக்கன் …
15 02 2013

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி-சொக்கன் (13-Dec-15, 2:15 pm)
Tanglish : muthtirai
பார்வை : 109

சிறந்த கட்டுரைகள்

மேலே