கலர் பர்பிள்- சினிமா கட்டுரை-கவிஜி

மீண்டும் ஒரு முறை பார்க்க அச்சப் படும் பயத்தை எனக்குள் விதைத்து விட்ட படம்...

படம் முழுக்க இழையோடும் தாழ்வு மனப்பான்மைக்குள் அப்படி ஆக்கி விட்ட பொருளுக்குள்.... அசந்து தூங்கி விடக் கூட ஆசைப் படும் வலி நிறைந்த கண்களுக்குள் மிகப் பெரிய சோகம் சிறியதாக மிக சிறியதாக ஒளிந்து கிடக்கும் இந்த படம்... எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை இங்கே முழுவதுமாக நிரப்பி விட முடியாது.......அது.... அரசு தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை ஒளிபரப்ப படும் படத்துக்காக டிவி இருக்கும் ஏதோ ஒரு வீட்டு வாசலில் வராத சிரிப்போடு நான் சிறுவயதில் நின்ற நாட்களை தூசுகளோடு நினைக்க செய்தது... நினைக்க நினைக்க பயத்தில் நடுங்க செய்தது.. மனிதனை மனிதன்.. அடிமைப்படுத்தும் வறுமையும்... வயிறும்.... இன்னும் உலகில் நிரம்பித்தான் கிடக்கிறது.. இன்னும் மண்ணில் ரொட்டி செய்து சாப்பிடும் சோமாலியா பஞ்சம் இருக்கத்தானே செய்கிறது....

14 வயது சிலியும், 12 வயது நட்டியும் அக்கா தங்கைகள்... அது மட்டுமல்ல இந்த உலக வாழ்க்கைக்கு அர்த்தம் தேடித் திரிந்தவர்கள்.. மாற்றி மாற்றி அன்பு வைத்துக் கொள்ளும் பாசக்காரிகள். பல போது அன்பு கூட வயிறை நிரப்பி விடும்... மனம் கொண்டவை... இருவருக்குமே தங்கள் மீது பாசம் காட்ட யாரும் இல்லை என்பதை உணர்ந்தவர்கள்...இருவருக்குமே இந்த உலகின் மீது ஒரு வகை பயம் உண்டு... எங்கு திரும்பினும் அச்சத்தால் விதைக்கபட்டே எல்லாம் நடப்பதாக தோன்றும் மனம் விதைக்கப் பட்டவர்கள்... சிலியோ தன் வளர்ப்பு தந்தையால் கெடுக்கப்பட்டு பிறக்கும் குழந்தையையும் தன் வளர்ப்பு தந்தையிடமே பரி கொடுத்து சுரண்டப் படுகிறாள்...சொல்ல முடியாத உறவுக்குள் பரிதவிக்கும் சிலியை மனைவியை இழந்த ஜான்சனுக்கு எல்லாவற்றையும் மறைத்து இரண்டாவதாக கட்டி வைக்கப் பட... அவனின் மிக சிறந்த அடிமையாக மாறுகிறாள் சிலி..

ஒரு கட்டத்தில் நட்டி மீது ஜான்சன் ஆசைப் பட... அவள் மறுக்கிறாள்.. அதனால் வெறுப்பு கொண்ட ஜான்சனோ நட்டியை அடித்து விரட்டுகிறான்..

அடித்து விரட்டுகிறான் என்றால் அந்தக் காட்சியை ஜஸ்ட் லைக் தட் கடந்து விட முடியாது.... அது பாசங்களின் வேர் அறுப்பு சம்பவம்.. அது உறவுகளின் பெரும் விரிசல் என நட்டி பேரழுகையேடு திரும்பி திரும்பி பார்த்தபடியே நிராதாரவாய்.. எங்கு போவது என்ன செய்வது எதுவுமே தெரியாத பயத்தில் அச்சத்தில் அழுது கொண்டே ஓடுகிறாள்....... கை அசைத்துக் கொண்டே கணவனின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவளை அனுப்ப வேண்டாம் என்பது போல கெஞ்சும் சிலி தரையில் இழுக்கப்பட்டுக் கொண்டே போகும் போது மனதுக்குள் ஏதோ அறுபடுகிறது....

பார்க்க கண்கள் வேண்டாம்... தீரா அழுகையை கொட்டிக் கொடுக்கும் காட்சியை இயக்குனர் தந்த விதம்... அது வெற்றிட வன் புணர்ச்சி போல.. தீராத காயத்தை இருவருக்குமே ஏற்படுத்துகிறது...

எங்கிருதோ வருகிறாள்...ஜான்சனின் பழைய காதலியான பாடகி.... அவளும் சிலியும் ஒரு வித உணர்வுக்குள் உறவுக்குள் இணைகிறார்கள்.... இருவருமே ஒடுக்கப்பட்ட பெண்கள் என்பதால் இந்த உறவு சாத்தியாமாகிறது.... .. இதுவரை தன்னை ஆசையோடு தன் கணவன் முத்தம் கூட இட்டதில்லை என்றும்.. பின் மற்றவை என்று கேட்டதற்கு அது கட்டில் ஆடும் மிக மோசமான பலவந்தமான ஆட்டத்திற்கான தருணம் அவ்வளவே என்பது போல சிலி சொல்லும் காட்சியில் பாடகி மெல்ல மெல்ல முத்தங்களால் சிலியை நிரப்பும் இடம்.. வறண்டு போன மனதுக்குள் நீர் பாய்ச்சும் அன்புத் தாகம் அது என்பதை காணும் நாமும் உணர்ந்து கொள்ள முடியும்.... கிட்டதட்ட இந்த இடத்தை ஒரு மெல்லிய நீரோடை போல நாம் கடந்தும் போகிறோம்.. எந்த வித ஆபாசமும் இல்லாத அகத்தின் முத்தங்களின் ஊடாகவே இந்த உடல் இணைப்பைக் காண்கிறோம்...

அது வரை தனக்கு நட்டியிடம் இருந்து வந்த அத்தனை கடிதங்களையும் தன் கணவன் தனக்கு தராமல் தெரியாமல் ஒளித்து வைத்திருப்பதை கண்டு மனம் வெதும்புகிறாள்....கண்கள் ததும்புகிறாள்...அத்தனை கடிதங்களையும் அழுது கொண்டே.. அழுகை அடக்கிக் கொண்டே... கனத்த முகம் கொண்டே... சிரித்த நினைவுகள் கொண்டே சமையல் அறையிலும்... தோட்டத்திலும்.. பின் வாசல்களிலும்... மரங்களின் ஊடாகவும் படிக்கிறாள்.. காலம் கடந்து படிக்கப்படும் கடிதங்கள் துக்கம் நிறைந்தவை...அது வேதனையின் விளிம்பு நிலையில் இருந்து கடந்த காலத்தின் இழப்புகளை தள்ளிக் கொண்டே இருக்கின்றது...... அதில் நட்டியின் வாழ்க்கை, காட்சிகளாலும் வரிகளாலும் விரிகின்றது... கண்ணீர் துடைக்க துடைக்க வரும் என்பதனால் துடைக்காமலே விடுகிறாள்.. இருந்தும் வருகிறது. அதுதான் கண்ணீரின் மகத்துவம்...அது தான் உறவுகளின் பிடிப்பு....அன்பு கிடைக்காமல் தானே மனிதன் தற்கொலை கூட செய்து கொள்கிறான்...

ஒரு கட்டத்தில் பொறுக்கவே முடியாத சிலி வெடித்து கிளம்புகிறாள்.. தன் முப்பது வருட அடிமை வாழ்வை தகர்த்தெரிகிறாள்.... இறந்து போன வளர்ப்பு தந்தையின் வீடு அவளுக்கு கிடைக்கிறது...ஒரு குழந்தையின் விடுதலையோடு குதித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடுகிறாள்... தன் இருப்பை உணர்தலே விடுதலை என்று உணரும் மிக நுண்ணிய இடம் இது.... பிரிந்து போன குழந்தைகள், உறவுகள் என்று எல்லாரும் வந்து சேர்கிறார்கள்... இப்போது முதிந்த விஷயம் தெரிந்த தான் அடிமை இல்லை என்று உணர்ந்த சிலி எல்லாம் கடந்த மனநிலையைக் காட்டுகிறாள்... அடிமையாய் இருப்பது எத்தனை வலி நிறைந்த ஒன்று என்பதையும்.... வேலை விஷயமாகவோ... இல்லை ஏதோ காரணத்துக்காக குடும்பத்தை பிரிந்து போவது என்பது

அத்தனை சீக்கிரம்... கடந்து போக கூடிய விஷயமல்ல....அதன் பின்னால் அத்தனை நடுக்கம் நிறைந்த உறைந்த கண்ணீர் துளிகள் இருக்கின்றன... நாம் மிகச் சரியாக கூறினால் அத்தனை பேருமே.. இந்த மனித இனமே.. பாசங்களின் மடிக்காக ஏங்குபவையே.... ...

அதே ஜான்சன் மூலமாக மீண்டும் நட்டி தன் அக்காவைத்தேடி வருகிறாள்.. அவளுக்கும் வயதாகி இருக்கிறது.... 30 வருடங்கள் ஓடி விட்டன... பிரிவின் வலி வழியெங்கும் சிந்துகிறது கண்ணீரால்.. நட்டியும் சிலியும் சந்திக்கும் இடம்.... அது ஓர் உன்னத தருணம்.. அதை முழுமையாக உள் வாங்க பிரிவை உணரந்தவர்களால்தான் முடியும்.. வழியை சுமந்தவர்களால்தான் முடியும்.. பேச்சற்ற மொழியில் அக்காவும் தங்கையும்..... கை தொட்டு கன்னம் தொட்டு.... இதழ் தொட்டு.... உனக்கு நான் இருக்கேன் என்பது போல வந்த கண்ணீரை அப்படியே சிரிப்பாக மாற்றிக் கொண்டு கட்டிக் கொள்ளும்

காட்சியில் திரை திறந்து காட்சிக்குள் ஓடி சென்று விடத் தோன்றியது...... அத்தனை நெகிழ்வின் வாசல்கள் திறந்து கொண்டே இருப்பது போல ஜான்சன் முகம் சுருங்கி, மனம் சுருங்கி அவன் போக்கில் போய்க் கொண்டே இருக்கிறான்... மாலை சூரியன் மெல்ல இறங்கிக் கொண்டிருக்கிறது....

நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்தில் உழலுவதோ.... பாரதியின் வரியோடு ஏனோ மனம் கனக்க முடிக்கிறேன்....

கலர் பர்பிள்

- கவிஜி

எழுதியவர் : கவிஜி (13-Dec-15, 2:59 pm)
பார்வை : 84

மேலே