சுப்பையாவும் குப்புவும் பாகம் 3 - உதயா

சுப்பையாவும் குப்புவும் பாகம் 3 - உதயா
---------------------------------------------------------------

விடிய விடிய தொடர்ந்த அந்த கூத்தில் விடியலும் , விடியலுக்கு துணையாக ஊர் மக்களின் தூக்கமும் மட்டுமே தொலைந்து இருந்தது. விடிந்தும் விடியாப் பொழுதிலே ஊரெங்கும் மணந்தது விதைத்த ராமசாமியின் புகழும் , முளைத்த சுப்பையாவின் புகழும். சுப்பையாவின் நடிப்பினை கண்டு அசந்து விட்ட மக்களோடு ,, கொஞ்சம் வெகுவாக மூழ்கி விட்டாள் அம்மாக்கண்ணு. அன்றைய நாட்பொழுதில் அவளது கண்ணீர் துளிகள் ஓய்வினை துறந்து இருந்தது. அது " நாம செத்து புட்டா தூக்கினு போயி அடக்கம் பண்ணுரத்துக்கு ரெண்டு ஆம்பள புள்ளைங்க இருக்கு , ஆனா தலமோட்டுல ஒக்காந்துனு ஓ......................................... னு ஒப்பாரி வெக்க ஒரு பொட்ட புள்ள கூட இல்லயே " என காரணமும் சொன்னது

சுப்பையாவின் தாத்தா சில வருடங்களுக்கு முன்பு நவாப்பாளையம் கிராமத்தில் உள்ள செல்வபுரம் ( இது குக்கிராமம் ) என்ற இடத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டு இருந்தார். அதனால் சுப்பையாவின் குடும்பம் மட்டும் அத்திமூரை விட்டு செல்வபுரத்திற்கு வந்துவிட்டது.
செல்வபுரத்தில் சில நாட்கள் கழிய , சுப்பையாவின் திருமணநாளும் நெருங்கிவிட்டது திருமணத்திற்கு முன் நாள், மணமகளுக்கு புதுசுத்து என ஒரு நிகழ்ச்சி செய்வது வழக்கம்

(( புதுசுத்து என்பது , மணப்பெண்ணை சிங்காரித்து , அந்த ஊரில் நன்றாக வாழ்ந்து, வாழ்ந்துக் கொண்டிருக்கும் முதுமை மங்கைகளை அழைத்து, மணப்பெண்ணிற்கு திலகம், பூ, வைத்துவிட்டு, சந்தனம் பூசி, மகராசியா நூறூ ஆண்டுகள் வாழனும் என்று வாழ்த்துவர் )))

அப்பொழுது

தன்னானான தானனன்னா
தன தன்னனனான தானன்னா ..
தன்னானான தானனன்னே
தன தன்னனனான தானனன்னே

பூவா எல்லாம் வெச்சிக்கினு
புது பொண்ணா ஆயிபுட்டா
மச்சான தான் பாத்ததுமே
மண்ண பாத்து வெக்கிகிரா ..

வாழ மரத்தையும் கட்டாச்சி
வாசலுல கோலம் போட்டாச்சி
வாழ போற வாழ்கையை நெனச்சிகின்னு
மனசுல ஆசைய பூட்டியாசா ...?

தன்னானான தானனன்னா
தன தன்னனனான தானன்னா ..
தன்னானான தானனன்னே
தன தன்னனனான தானனன்னே

புள்ளைய பத்து பெத்துகினும்
பக்குவமா வாழ கத்துக்கினும்
புது மனிஷன் உன் புருஷன் தான்
அவன முந்தானைல முடிச்சி வெச்சிகினும்

சாயந்திரம் ஆனப்பின்னே
கதவ சாத்திப் பூட்டிகினும்
கோழி கூவும் சாமத்தில
வாசல்ல கோலம் போட்டுடுனும்

தன்னானான தானனன்னா
தன தன்னனனான தானன்னா ..
தன்னானான தானனன்னே
தன தன்னனனான தானனன்னே .........,

இப்படியே இந்த பாடல் நீண்டுக்கொண்டே செல்லும். அகண்ட ஒரு குளத்தில் தனிமையில் பூத்த தாமரையைப் போல் அவள் சிவந்து , ஊர் மங்கையரின் பாடலை கேட்டு புன்னகையோடு அமர்ந்திருந்தாள்.தூரத்தில் சுப்பையா தன் உறவுகளுடன் வருவதைப் பார்த்து .வெட்கத்தில் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். அதை பார்த்ததும் அங்கு வந்திருத்த பெண்கள் .. " "ஐயோ ஆத்தாடி .. வெக்கத்த பாத்தியாடி இவளுக்கு " என கிண்டல் செய்ய, அம்மாக்கண்ணு வேகமாக ஓடிவந்து , குப்புவை அள்ளி முத்தமிட்டாள். " எவடி அவ என் மெருமொவல . கிண்டல் பண்றவ ... அடியே சிரிக்கிங்களா கொமட்டுலே குத்தி புடுவ ஆமா .. " என ஒரு மெரட்டு மெரட்ட " அய்யோ அத்த .... சீமையில இல்லாத சிங்காரி .. இவள நாங்க கிண்டல் பண்றமாக்கும் " என அந்த பெண்கள், பதிலுக்கு ஏதாவது சொல்ல அது அப்படியே போகும்...

மறுநாள் விடியும் வரை , உறவுகார்களின் கைவரிசை பலகாரத்தில் குவிந்த்துக்கொண்டிருக்கும்
. " முறுக்கு , அதிரசம் , மெல்லுவடை , பூந்தி , இலட்டு , ஜாங்கிரி , பொரிலா உருண்டை , எள்ளு உருண்டை , தோப்பம் , சோமாசம் , கடலைப் பருப்பு வடை , உளுந்து பருப்புவடை , சீடை ." என இன்னும் பட்டியல் நீளும் , எனக்கு தான் எல்லாம் மறந்துவிட்டது . இந்த மறதிதான் அடிக்கடி எனக்கு வயது ஆகிவிட்டதையும் நினைவு படுத்துகிறது.

உணவு பட்டியல் வரிசையில் " அவரைகாய் , பீக்கங்காய் , சுரகாய் , முருங்கக்காய் , கத்தரிகாய் , மாங்காய் , கோவக்காய் , பாவக்காய் , சேப்பங்கிழங்கு, பூசணிக்காய் ,முருங்கை கீரை , பொன்னாங்கன்னி கீரை , " என ஒரு புறமும் " கோழி , ஆடு , பன்றி " என மறுபுறமும் விருந்து தயாராகி காத்திருக்கம்

ம்ம்ம்ம்ம்ம்ம் ... " பந்தக்கால் நட்டு , நல்லா பெருசா பந்தல் போட்டு , ஊரே கூடி நிக்க வோரவு எல்லாம் சேர்ந்து நிக்க, கல்லாயணம் பண்ண போற பையனையும் , பொன்னையும் , தோளுமேல தூக்கினு வந்து தாலிகட்டி , பெருசு கிட்ட ஆசீர்வாதம் வாங்கி, பந்தலுல தலவாழை
இலைப் போட்டு , கண்ணு வேணா வேணான்னு சொல்ல , வயிறு வேணும் வேணும்னு சொல்ல ,மணக்க மணக்க பேசி , ரசிச்சி ரசிச்சி சாப்புட்டு , உங்க புள்ள குட்டில காலத்துக்கும் நல்லா இருக்கும் ." என வாழ்ந்து கரைந்துவிட்ட காலங்கள், என்னை போல பெரியவர்களின் நினைவிலும் , சில எழுத்தாளரின் எழுத்துளும் மட்டும் இருந்துவிட்டு போகணும் என்பது இன்றைய நவீன காலத்தின் சாபமா ....? இல்லை இல்லை வரமாக இருந்துவிட்டே போகட்டும்.

கல்யாணம் முடிந்ததும், அன்று இரவு , உறவு முறைகள் சாராயத்தில் மூழ்கி இருக்கும், மணமக்களுக்கு படுக்கை தனி தனியாக பிரிந்து இருக்கும். மணப்பெண் பருவம் எட்டும் வரைக்கும். விடிந்தது , அவர் அவர்கள் தங்கள் தொழிலை பார்க்க கிளம்பி விடுவார்கள். தாய் தந்தையை பிரியவேண்டும் என்ற வருத்தம் கூட இல்லாமல். குப்பு விளையாடி கொண்டிருந்தாள் அக்கம் பக்கத்தினர் பெண்களோடு, பிறகு குப்புவை அழைத்து " எம்மாடி நாங்க ஊட்டுக்கு போறோம் நீ இங்கவே பத்துரமா இரு " என்றதும் " ம்ம்ம் " என தலையாட்டி விட்டு " அவள் முகம் தளர்வடைய தொடங்கியது, அதற்குள் அம்மாக்கண்ணு , " குப்பு நீ போயி வல்லாடு "என்றதும்
குப்பு ஓடிவிட்டாள் விளையாட.

இப்படியே சில மாதங்கள் உருண்டு விட்டது . அதன் பிறகு , குப்புவின் அப்பா அம்மா , குப்புவை பார்க்க வந்தார்கள் , அன்று இரவு சுப்பையாவின் தந்தையும் , குப்புவின் தந்தையும் சாராயம் குடித்துவிட்டு , எதோ ஒரு காரணத்தை வைத்து , சண்டை போட்டுக்கொண்டு , குப்புவின் தந்தை குப்புவை அழைத்து சென்றுவிட்டார். குப்பு நான் வர மாட்டேன் என அழுதாலும் , அவர் விடவே இல்லை

இரண்டு நாட்கள் கடந்த பிறகு சுப்பையா சுப்பையாவின் , தந்தை மற்றும் தாய், குப்புவை அழைத்துவர அத்திமூர்க்கு சென்றனர் . ஆனால் மறுபடியும் சண்டை வளர்ந்ததே தவிர , குறைவதாய் தெரியவில்லை ( அவுங்க அப்படிதாங்க , வெட்டி வீராப்புக்கு சண்ட போடுவாங்க , அப்புறம் கூடிக்குவாங்க )... பெரியவர்கள் சண்டை போடுவதை பார்த்த குப்பு , வேகமாக ஓடிவந்து , சுப்பையாவின் கையை பிடித்துக் கொண்டு செல்வபுரம் நோக்கி ஓட்டத்தை பிடித்தாள். இதை சிறுது நேரம் கழித்து கவனித்த குப்புவின் தந்தை அவர் மனைவியிடம் " பாத்தியாடி சிரிக்கி என்னா ஓட்டம் ஓடுறான்னு " என்ன சொல்லிவிட்டு , அனைவரும் சேர்ந்து சிரித்தே விட்டனர். அந்த பக்குவபடாத வயதில் பாசம் மட்டும் எவ்வாறு விருட்சம் ஆனது. இன்றளவும் நான் அதை எண்ணி வியந்துக்கொண்டு தான் இருக்கிறேன் ...

தொடரும் ......

எழுதியவர் : உதயா (14-Dec-15, 1:25 pm)
பார்வை : 171

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே