குளிருது
குளிருது!
--------------
நடு நடுங்க வைக்கும் குளிர் இரவில் யூதத் துறவி ஒருவர், ஒரு பணக்கார வியாபாரியின் வீட்டுக் கதவைத் தட்டினார்.
கதவைத் திறந்த வியாபாரி, துறவியைக் கண்டதும், அவரை உடனே உள்ளே அழைத்தார்.
தரையில் கனமான கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. கணப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்தக் கதகதப்பான அறையில், வசதியான சோபாக்களில் அவர்கள் அமர்ந்தனர்.
""தாங்கள் வந்த விஷயத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்று வியாபாரி, துறவியைப் பார்த்துக் கேட்டார்.
""ஏழை மக்களுக்குக் குளிரைத் தாங்குவதற்கான ஆடைகள் வாங்குவதற்காக நான் பணம் திரட்டும் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். அதுவும் இந்த வருடம் குளிர் ரொம்ப அதிகமாகவே இருக்கு! எலும்பையே ஆட்டி வைக்குது!'' என்று கூறினார் துறவி.
""நம்மூர் மக்கள் இதுக்கெல்லாம் பழகினவங்கதானே...!'' என்று மிகவும் அலட்சியமாகக் கூறினார் வியாபாரி.
""எப்படி இருந்தாலும் நம்மால் முடிந்த உதவியை நாம் செய்யத் தானே வேண்டும்...!'' என்று துறவி கூறினார்.
""நீங்கள் கூறுவதும் சரிதான்! ஆனால், என்னைப் பொறுத்தவரை, நான் உதவியென்று செய்தால், ஏதாவது பெரிதாகக் கொடுக்க விரும்புகிறேன். அதனால்... உங்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது மன்னியுங்கள்!'' என்று வியாபாரி கூறினார்.
துறவி, மிகுந்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினார்.
இரண்டு நாட்கள் சென்றன.
மீண்டும் அத்துறவி, அந்த வியாபாரியின் வீட்டுக் கதவைத் தட்டினார்.
இந்த முறையும் வியாபாரி, துறவியை வீட்டுக்குள் அழைத்தார். ஆனால், துறவி வீட்டுக்குள் நுழையாமல் வெளியே தள்ளியே நின்றுகொண்டார்.
""இந்த வழியே போய்க்கிட்டு இருந்தேன். அப்படியே உங்களைப் பார்த்துகிட்டுப் போகலாமின்னு வந்தேன்,'' என்று வியாபாரியைப் பார்த்துத் துறவி கூறினார்.
""ரொம்ப கரிசனமானவராக இருக்கீங்களே... சரி உள்ளே வாங்க... வெளியே ரொம்ப குளிரா இருக்கும்!'' என்று கூறிய வியாபாரி, துறவியை வீட்டுக்குள் வருமாறு அழைத்தார்.
""இல்லை... இல்லை... நாம் ரொம்ப அவசரமாக போய்கிட்டு இருக்கேன்... உங்க குடும்பம் எப்படி இருக்கு? எல்லாரும் நல்லா இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்!'' என்று துறவி, விசாரித்தார்.
""எல்லாரும் நலம் என்று கூறிய வியாபாரி குளிரால் தன் ஆடையை இறுக்கிக் கொண்டார்.
""உங்க தொழில் எப்படி இருக்கு?'' துறவி வியாபாரியைப் பார்த்துக் கேட்டார்.
வியாபாரி குளிரில் நடுங்கிக்கொண்டே, ஏறக்குறைய அலறினார்.
""போதும்... போதும்... ஏழைகள் குளிரில் எப்படிக் கஷ்டப்படுவாங்கன்னு இப்போது நான் உணர்ந்து கொண்டேன். முதல்லே உள்ளே வாங்க...!'' என்று துறவியை உள்ளே அழைத்தார் வியாபாரி.
பின்னர், துறவியிடம் நிறையப் பணம் கொடுத்து அனுப்பினார் வியாபாரி.
நன்றி : சிறுவர் மலர்