பேரழிவை சீரமைக்க 90 நாட்கள்

பேரழிவை சீரமைக்க 90 நாட்கள்!
vayal
என்ன செய்ய வேண்டும்… எப்படிச் செய்ய வேண்டும்?

ஆலோசனை சொல்லும் ஐ.ஏ.எஸ். அதிகாரி

தமிழகம் சந்தித்து இருக்கும் பேரழிவைச் சீர்செய்ய இன்னும் 90 நாட்களே உள்ளன. வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் அறிவிப்பு தேதி வெளியாவதற்குள் புனரமைப்புப் பணிகளைச் செய்தாக வேண்டும். அரசுக்கு இருக்கும் நெருக்கடி இது. அதற்குள் நிலைமையை எப்படிச் சரி செய்யலாம்? – பதற வைக்கும் கேள்வி இது.

இப்போது பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி யாரிடமும் இதனைக் கேட்க முடியாது. அவர்களுக்குப் பதில் சொல்லும் அதிகாரம் தரப்படவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டோம். தமிழக அரசில் 35 ஆண்டுகள் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர் அவர். 2001-ம் வருடத்தில் இருந்து 2006-ம் ஆண்டு வரை தமிழகம் சந்தித்த சுனாமி, ஒரு பூகம்பம், 4 வறட்சி, 7 வெள்ளம்… ஆகியவற்றை நேரடியாகப் பணியில் இருந்து 5 வருட காலத்தில் கவனித்த அனுபவம் உள்ள அவர் சொன்ன ஆலோசனைகள் இங்கே…

‘‘தற்போது சென்னை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு கடந்த 100 ஆண்டுகளில் சந்திக்காதது. சுமார் 15 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். சுனாமி, வறட்சி, நிலநடுக்கம் ஆகியவற்றைவிட வெள்ளப் பாதிப்பு கொடுமையானது.


மாநில பேரிடர் மேலாண்மை கமிஷனராக சந்தானம் பணியாற்றிய போது, நான் கூடுதல் கமிஷனராக இருந்தேன். பேரிடர் நிர்வாகத்தை அறிந்தவன் என்ற அடிப்படையில் சில யோசனைகளைச் சொல்ல நினைக்கிறேன்.

எத்தனை பேர் இறந்தார்கள்? எத்தனை வீடுகள் பாதிப்பு? சொத்து மதிப்பு எவ்வளவு?… போன்ற சேதங்களை உடனடியாகக் கணக்கீடு செய்யவேண்டும். இப்போது சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை தனியார் மற்றும் பொது சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. அடையாறு மற்றும் கூவம் நதிக்கரைகளில் குடியிருந்த சுமார் ஒன்றரை லட்சம் குடிசை வீடுகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. அங்கு குடியிருந்தவர்கள் அனைவரும் ஏழைத் தொழிலாளர்கள். அவர்களின் அடையாளங்களான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் அட்டை, வங்கி கணக்குப் புத்தகங்கள், குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், கேஸ் சிலிண்டர்… இப்படி அடிப்படையான ஆதாரங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அந்த அசல் ஆவணங்களுக்கு நகல் ஆவணங்கள் வழங்க வேண்டும். நிரந்தர குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால், வீட்டுப் பொருட்கள், ஆவணங்கள், சோபா, கார், டி.வி. ஃப்ரிட்ஜ், ஏசி, பீரோவில் உள்ள துணிமணிகள், சமையல் பொருட்கள் போன்றவை முழுமையாக அழிந்துவிட்டன. ஒரு வீட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்புகளை எதிர்கொண்டவர்களைக் கணக்கிட்டு, உடனடி நிவாரணமாக குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கலாம். வீட்டுக்கடன் செலுத்து பவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு தவணைகட்ட விதிவிலக்கு வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

வெள்ள நிவாரண நிர்வாகத்தில் அனுபவம் உள்ள அமைச்சர் ஒருவரை தனிப் பணியாக நியமிக்க வேண்டும். அவருக்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தையும் அளிக்கவேண்டும். மூத்த ஐ.ஏ.ஸ். ஒருவரை தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் நியமிக்க வேண்டும். ஏற்கெனவே வெள்ளப் பணிகளைக் கவனித்த அனுபவம் உள்ள அதிகாரிகளை அவருக்குக் கீழே நியமிக்க வேண்டும். பிறகு, பகுதிவாரியாகப் பிரித்து துடிப்பான இளம் அதிகாரிகள் வசம் நிவாரணப் பணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும். முதலில் ஆற்றங்கரை, புறம்போக்கு பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட குடிசைகளின் எண்ணிக்கையைக் கணக்கீடு செய்ய வேண்டும். அடுத்து, நிரந்தரமான குடியிருப்புகள் பற்றிய விவரங்களைப் பகுதிவாரியாகத் தயார் செய்யவேண்டும்.

மின்சாரத் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை, சிவில் சப்ளைஸ், மெட்ரோ வாட்டர், உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை… போன்ற துறைகள் சேதங்களைக் கணக்கெடுத்து உடனடியாகச் சீர் செய்யவேண்டும். சீர் செய்யவேண்டிய பணிகளைச் செயல்படுத்த டெண்டர் விடவேண்டும். அம்பத்தூர், கிண்டி போன்ற தொழிற்பேட்டைகளில் ஏராளமான தொழிற்சாலைகள் அடியோடு சேதப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கான ஐ.டி. நிறுவனங்களில் வெள்ளநீர் புகுந்துவிட்டது. அவற்றைச் சீரமைக்க நடவடிக்கைத் தேவை.

மற்ற மாவட்டத்தில் இருந்து துப்புரவுப் பணியாளர்கள், கொத்தனார்கள், மரம் வேலை செய்கிறவர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், க்ளீனர்கள், பெயின்டர்கள்… என பல ஆயிரம் பேர்களை உடனடியாக வரவழைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். செங்கற்கள் மற்றும் சிமென்ட் மட்டுமே சுமார் 50 ஆயிரம் டன் தேவைப்படும். இவற்றை நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்க அரசு ஆணைகள் வெளியிட வேண்டும். ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரைகள் அமைக்க போதிய அளவில் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும். இது ஒருபுறமிருக்க… வெள்ளத்தால் சீரழிந்த நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி ரோடுகள்.. சரிசெய்ய கணக்கெடுத்து வேண்டிய டெண்டர்கள் விடவேண்டும். அப்போதுதான் சென்னை மாநகரத்தின் இயல்பு வாழ்க்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் புனர் அமைக்க முடியும்’’ என்றார் அவர்.

ஆட்சியாளர்களின் கனிவான கவனத்துக்கு!

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (18-Dec-15, 8:55 am)
பார்வை : 193

சிறந்த கட்டுரைகள்

மேலே