தடுமாறிய பயணங்கள்

* * * * * * * * * * * * * * * *
அது மகிழுந்துகளால்
நிறைந்து வழியும் தெருவோரம்
பாதை குறுக்கறுப்புக்காய்
ஆட்காட்டி நிறுத்தற்குறி காட்டியாய்
நடுத்தெருவில் காட்டி நின்றது
உயிர்ப்பிச்சையிட்ட
ஒற்றை உயிர் நாடி. ..
ஆறாயிரம் மைல்களுக்கப்பால்
ஆறாது அலைந்து கொண்டிருந்தது
உயிர் ஒன்று .
பாதத் தடுப்புக்களை அந்த
பாதைத் தடுப்புக் காட்டிகள்
நன்கறியும் போலும் .....
நடை தள்ளாடிய வேகத்திலும்
அதிக வேகமாய் முறைத்து நகர்கிறது
எனக்கான அந்தப் பொழுதுகள்.
இது மகிழ்ந்திருப்பது - அந்த
அலைபேசியின் அணைப்புக்களில் என்பது
மகிழுந்துகளுக்கும் தெரிந்திருக்குமோ என்னவோ. ......
தடுப்புக்கள் அழுத்தி தரையைக் கிழித்து சிரித்தது .
உயிரோடு உலாவும் குழந்தைகளை
புகைப்படங்களில் செல்ல முத்தங்களால்
அணைப்பதையும்
விழிக்கரையை அலை அலையாய்
நீர் தொட்டுச் செல்வதையும்
அலை கொண்டு போகும்
காணாமல் போன
புகைப்படங்கள் தான் அறியும்.
காட்சிகளில் கானங்களில் கனவுகளில்
கரையும் காதல்களின் உயிரோட்டங்கள் உணரும்.
அண்ட வெளியின் குளிர் வளியின் சிலுசிலுப்பில்
தவழ்ந்த மெல்லிருளின் நகைப்பில்
வாழ்வின் நகர்தலை வலியுணரும்
இதயம் புரியும்.
வல்லிசையாய் வைது கொண்டசையும்
காற்றின் அழுத்தங்களால் - இந்த
புல்லாங்குழல் பிய்ந்தழியும் கணங்களை
அறியுமா பிரபஞ்சம். ...........?

-பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (18-Dec-15, 10:56 pm)
பார்வை : 190

மேலே