காட்சிப் பிழைகள்- 11 -Mano Red
சட்டையில் இருப்பது
ஓட்டைகள் அல்ல!
அவனது தலையெழுத்துகள்.
அவனுக்கு நம்மை
யாரென்று தெரியாது!
அவன் அழுக்குகளுக்கு
நம்மை நன்றாகவே தெரியும்!
நிலாச் சோற்றையும்
உப்பிலாச் சோற்றையும்
அவன் கேட்கவில்லை.
காக்கை விரட்டும்
எச்சில் கைகளைக் கேட்கிறான்.
யாருக்காவது கவலை இருக்கிறதா?
நம் எல்லோருக்குமே
வயிறு நிரம்பிவிட்டது.
இனி பசியைப் பங்குவைக்க
அவன் யாரிடம் செல்வான்?
எல்லாப் பசியையும்
மிச்சம் வைக்காமல்
தினமும் அவனே உண்கிறான்.
பசியின்றிப் புசிப்பவர்கள்
அவன் பசியைக் கொஞ்சம்
புடுங்கித் தின்னுங்களேன்!
வறுமை இல்லையென்ற
பெருமையைப் பிறகு பாடுவோம்!
அவனைக் கடித்து ஏமாறும்
கொசுவுக்கு முதலில் ஆறுதல் சொல்வோம்.
தீய்ந்துபோன சட்டியின்
இதயத்தில் ஒட்டியிருக்கும்
சோறு பேசும்வரை
அரிசியின் ருசி பற்றி
அவன் வாய்திறக்க மாட்டான்.
நிர்வாணம் ரசிக்க
நிவாரணம் தாருங்கள்!
அவன் ஆறடி உடம்பில்
அரைக்கிலோ கூட தேறாது!
யாரையும் சாகடிக்க
அவனுக்குத் துணிவில்லை.
சாவு விழுந்தால் நிறையும்
வெட்டியான் வயிறு போல
அவன் வயிறுக்கு வாய்ப்பில்லை.
எல்லாம் துறந்தவனல்ல அவன்!
முற்பிறவியின் அரச வாரிசை
எலும்புகளும் தோலும்தான்
முற்றிலும் துறந்துவிட்டன.
உணவில்லாத போதும்
பருக்கை அளவு கோவமின்றி
உம்மென்று இருக்கிறானே!
கோபம் வந்தால்
உணவை வீசி எறிபவர்களே
அவனைப் பாருங்கள்.
அம்மியும் உரலும்
அவனுக்காக ஒருநாள்
சத்தமாக அரைபடும்.
வேடிக்கை பார்க்கப் போகும்
அந்தக் கூட்டத்துடன்
வெக்கமின்றி செல்வோம்.
சைவமோ அசைவமோ?
சைவமோ வைணவமோ?
அவன் எதுவாக இருந்தால்
நமக்கு என்ன?
அவன் தசை வயிற்றுக்குள்
பசியின் இசை
கேட்டுக்கொண்டே இருக்கட்டும்.