ஆண்டவன் கொடையும் அருளும் நீ

புரண்டு படுத்தும் மீண்டுவரும்
கனவு நீ!
எழுதி முடித்துக்
கிழிக்க முடியாக்
கவிதை நீ!

காமம் கடந்த மோகம் நீ!
கண்கள் தழுவாத் தாகம் நீ!
யாகம் இல்லா வரமும் நீ!
என்றுமென் கழுத்தின் ஆரமும் நீ!
அலையென வரினும் கடலிலை நீ!
வலைமடி விழுந்த அமுதம் நீ!
கலைகளைக் காட்டும் பிறையும் நீ!
தலைகொள்ளாத பெருமையும் நீ!
'தன்னை' அழித்த பெருமையும் நீ!
விடுகதை வாழ்வின் விளக்கம் நீ!
விரல்கள் தீண்டும் சொர்க்கமும் நீ!
புதுப்புது சுகங்கள் சொட்டும் நீ,
பூவும், குயிலும் பட்டும் நீ!
முற்றா மழையின் தூரல் நீ!
மோதும் அன்பின் சாரல் நீ!
பூர்வ ஜன்மத் தொடர்பும் நீ!
போகும் சொர்க்கக் கதவும் நீ!
தேரா வாழ்வின் பொருளும் நீ!
தெரிந்த அன்பின் வடிவும் நீ!
அவனாய் அவளாய் அறியும் முன்
ஆண்டவன் கொடையாய் வருவோய் நீ!
==

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (22-Dec-15, 9:23 am)
பார்வை : 72

மேலே