தமிழ் பழமொழிகளும் விளக்கமும்

தமிழ் பழமொழிகளும் விளக்கமும்:
----------------
“கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!”

அறிந்தது: நாயை பார்த்தால் கையில் கல் இல்லை அதே, கையில் கல் இருந்தால் நாயைக் காணோம்!

அறியாதது: “கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்”. என்பது தான் உண்மையான பழமொழி. இங்கு நாயகன் என்பது கடவுள்.இதன் பொருள் கல்லால் ஆன ஒரு இறைவன் சிலையை பார்க்கும் போது, அதை கல்லாக பார்த்தால் அங்கே கடவுள் இல்லை, கடவுளாக பார்த்தால் கல் இல்லை.

“வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்!”

அறிந்தது:வர வர மாமியார் கழுதை போல ஆனார்.

அறியாதது: இந்த பழமொழியில் கயிதை என்பது காலப்போக்கில் மாறி கழுதை என்று ஆகி விட்டது. கயிதை என்றால் ஊமத்தம் பூச்செடியில் உள்ள காய்.(ஊமத்தங்காய்). இதில் ஊமத்தம்பூ பூத்து நாளடைவில் விஷத் தன்மை கொண்டதாக அதாவது ஊமத்தங்காய் ஆக மாறுவதையே அப்படி சொல்கிறோம்.

“ஆறிலும் சாவு நூறிலும் சாவு”

அறிந்தது: ஆறு வயதிலும் சாவு நூறு வயதிலும் சாவு.

அறியாதது: மகாபாரதத்தில் குந்தி தேவி கர்ணனை பஞ்ச பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ளுமாறு வேண்டினாள். அதற்கு கர்ணன் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் (5+1=6 பேர்) ஆறு பேருடன் அல்லது கௌரவர்கள் (100 பேர்கள்) நூறு பேருடன் இருந்தாலும் சரி மரணம் என்பது உறுதி என்றான்.

“களவும் கற்று மற”

அறிந்தது: திருடுவதை கற்று கொண்டு பின்னர் மறந்து விட வேண்டும்.

அறியாதது: இந்த பழமொழியில் “கற்று” என்பது “கத்து” என்று வர வேண்டும். கத்து என்றால் பொய் என்று அர்த்தம். களவு என்றால் திருட்டு. திருட்டையும் பொய்யையும் மறக்க வேண்டும்.

“ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன்”.

அறிந்தது: ஆயிரம் பேரை கொன்றால்தான் அவன் அரை வைத்தியன் ஆகின்றான்.

அறியாதது: இதில் “வேரை” என்பது பேச்சு வழக்கில் “பேரை” என்றும் “கண்டால்” என்பது “கொன்றால்” (ஆயிரம் வேரை கண்டால் அரை வைத்தியன்) என்றும் ஆகி விட்டது. ஆயிரம் வேரை கண்டால் அரை வைத்தியன் என்று பொருள் (வேர் என்பது மூலிகை செடிகளின் வேரைக் குறிக்கும் – உதாரணம்: கீழாநெல்லிச் செடியின் வேர்)

“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்”

அறிந்தது: ஒரு கல்யாணத்தை நடத்த ஆயிரம் பொய்களை சொல்லலாம்.

அறியாதது: திருமணத்தின் போது ஆயிரம் முறையாவது போய் (சென்று) சொல்லி புரிய வைத்து திருமணத்தை நடத்த வேண்டும். ‘போய்’ என்பது பேச்சு வழக்கில் ‘பொய்’ என்று மாறி விட்டது.

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.

அறிந்தது: அடித்தால்தான் காரியம் நடக்கும்.

அறியாதது: இதில் அடி என்பது இறைவனின் அடி ஆகும். இறைவனின் அடி நமக்கு உதவுவது போல வேறு யாரும் உதவ மாட்டார்கள்.

பந்திக்கு முந்து..படைக்கு பிந்து…

அறிந்தது : விருந்தில் பந்திக்கு முதலில் செல்ல வேண்டும். சண்டை என்றால் பின் வாங்க வேண்டும்.

அறியாதது: உண்ணும் பொழுது கை முன் செல்கிறது. அதே போரில் சண்டையிடும் போது முதுகில் உள்ள ஆயுதங்களை எடுக்க கை பின்னால் செல்கிறது. இதுவே அர்த்தம்.

இதுதான் பழமொழிகளின் உண்மையான அர்த்தம். ஆனால் நாம் காலப்போக்கில் நமது வசதிக்கு ஏற்றவாறு மாற்றி விட்டோம். இது போல் இன்னும் பல நல்ல தமிழ் பழமொழிகளுக்கு நாம் தவறான அர்த்தம் கொண்டு உள்ளோம். நம் பிழைகளை திருத்தி கொண்டு மற்றவர்களுக்கும் தமிழ் பழமொழிகளின் பெருமையை உணர்த்துவோம்.

–அண்ணாமலை கண்ணப்பன்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (24-Dec-15, 3:09 pm)
பார்வை : 217

சிறந்த கட்டுரைகள்

மேலே