ஸ் ஸ் ஸ் டாக்டர் - மீள் பதிவு நகைச்சுவை நாடகம்

ஸ்... ஸ்... ஸ் ! டாக்டர்..... !

இரவு பத்து மணி. டாக்டர் மதுரவல்லி நோயாளிகளை கவனித்து விட்டு ஊருக்கு வெளியில் கட்டப்பட்டிருந்த தன் வீட்டுக்கு வருகிறார். கதவுகளை சாத்தி விட்டு ஜன்னல் சாத்தும் நேரம் விசித்திர சத்தம் கேட்கிறது.

ஸ்... ஸ்... ஸ் ஸ்... ஸ்... ஸ் !

டாக் : யாரு?? யாரது ???

குரல் : நாங்கதான் டாக்டர்..

டாக் : யாரா இருந்தாலும் வாசல் பக்கம் வாங்க.. !

கதவை திறக்கிறார். இரண்டு ராஜநாகங்கள் நிற்கின்றன.

டாக் : பா... ! பா.... ! பாம்... !

பாம்பு : டாக்டர், நான் நாகராஜன். இவ என் பெண்டாட்டி நாகராஜி. இவளுக்குத்தான் உடம்பு சரியில்லே. நீங்க லேடி டாக்டர்தானே, பாருங்க.. !

டாக் : (நடுங்கும் குரலில்) எ....என்ன உ... உடம்.... உடம்புக்கு?

நாகரா : எப்ப பார்த்தாலும் ஸ் ஸ் - ன்னு அனத்திகிட்டே இருக்கா டாக்டர் !

நாகராஜி : ஸ்... ஸ்... ஸ் ஸ்... ஸ்... ஸ் !

நாகரா : இதோ இப்படித்தான். நாள் முழுக்க இப்படி பண்ணிட்டிருந்தா ஒரு பாம்பு, சட்டையை கழட்டிப் போட்டு புத்துல அக்கடான்னு வாலை நீட்டி படுக்க முடியுமா? இதுல ரெஸ்ட் எடுத்துக்காம கூடு வேற கட்டுறா.. !

டாக் : இவங்க என்ன சாப்டாங்க?

நாகரா : வழக்கம் போல பச்சைத் தவளைதான்.

டாக் : பச்சைத் தவளைன்னா பச்சை நிறத் தவளையா இல்ல சமைக்காத தவளையா?

நாகரா : ஸ்... ஸ்...! எங்களுக்குன்னு தனியா சைனீஸ் ரெஸ்டாரெண்ட்டா கட்டி விட்டிருக்காங்க? பச்சை நிறத் தவளைய பச்சையா விழுங்கினா... ! கூட ஒரு விட்டில் பூச்சி... !

டாக் : பாம்பு விட்டில் பூச்சி விழுங்குமா?

நாகரா : அத தவளை விழுங்கிட்டிருந்தது !

டாக் : எப்ப இவங்க சட்டை தொவச்சாங்க? ச்சீ ! உரிச்சாங்க?

நாகரா : இவ அடிக்கடி சட்டை உரிக்க மாட்டா டாக்டர் ! தீபாவளி பொங்கல் வந்தா டிஸ்கௌண்ட்டுல உரிப்பா... !

டாக் : எங்கே, நாக்கை நீட்டுங்க !

நாகரா : அதான் நொடிக்கொரு தரம் நீட்டிட்டே இருக்காளே ???

டாக் : உக்கும்.. ஒரு நொடியாவது நீட்டின நாக்கை நீட்டினபடி வைங்க. கொஞ்ச நேரம் படமெடுக்காம படுங்க... ! (பழக்க தோஷத்தில்) நாகராஜன் ! நீங்க வெளில இருங்க ! சரி; சரி, இங்கேயே இருங்க... !

(பயத்துடன் வயிற்றைத் தடவிப் பார்க்கிறார்)

டாக் : கங்காரு ரிலேசன்.. ஸாரி, கங்க்ராஜுலேசன்... ! வயத்துல பார்த்தை குழறுது.. ! இல்லே, இல்லே பயத்துல வார்த்தை.... குழறுது.. ! நீங்க அப்பாவாகப் போறீங்க... !

நாகரா : அப்படியா?? அடடா...! ஒரே சந்தோஷமா இருக்கே ! கொத்தணும் போல இருக்கே !

டாக் : இது வேறயா? அந்த பழைய ஷூ பரவாயில்லையா? போய் கொத்திக்கோங்க.. !

இவங்க ரொம்ப கூலா இருக்கணுமே? நீங்க இருக்கற இடத்துல ஆறு குளம் குட்டைன்னு ஏதும் இருக்குதா?

நாகரா : இருந்தது டாக்டர் ! எல்லாம் படுபாவி மனுசப்பயக கிரானைட் கழிவை கொட்டி கெடுத்து விட்டுட்டாங்களே?

நாகராஜி : ஒரு கிராமத்தையே காலி பண்ண வச்சிட்டாங்க.. ! நாங்க விடலையே? அந்த வில்லன்களை வீட்டை விட்டே விரட்டியடிச்சோம்.. ! இப்ப அவங்க வீட்டு ஃபிரிட்ஜ், ஏசியிலதான் குடியிருக்கோம்... ! அது ஏங்க எங்களுக்கு இருக்கற துணிச்சல் உங்களுக்கு இல்லே? நீங்க நாட்டை விட்டே விரட்டியடிச்சிருக்கணும்; எதுவும் நடக்கலியே?

நாகரா : எங்க கரண்டு பில்லை ஒரு மந்திரி வீட்டு கரண்டு பில்லோட கனெக்ட் பண்ணிட்டோம்.. ! கவலையில்ல பாருங்க !

டாக் : நல்ல காரியம்தான்.. ! இந்த டானிக்கை ஒரு நாளைக்கு நாலு தரம் நக்குங்க.. ! பிறக்கிற பாம்பு பலசாலியா பிறக்கும். பிறந்த உடனே படமென்ன, சினிமா படமே எடுக்கும்னா பார்த்துக்குங்களேன் !

நாகராஜி : உங்க ஃபீஸ் என்ன டாக்டர்?

டாக் : ஃபீஸெல்லாம் வேண்டாம்.. ! நாம மூணு பேர் அங்க நின்னு செல்ஃப்பி எடுத்துப்போம்... ! ச்ச்சீஸ்ஸ்ஸ்... !

நாகராஜி & நாகரா : ஜீஸ்... ஸ்... ஸ் !

நாகரா : டாக்டர், நாங்க ஒரு புத்து கட்டிட்டிருக்கோம்... ! பாம்புப் பஞ்சாங்கப்படி வெள்ளிக்கிழமை புத்துப்பிரவேசம் வச்சிருக்கோம்.. மறக்காம வந்துடுங்க.. !

டாக் : முட்டையும் பாலும் எடுத்துட்டு வந்திடறேன்.. !

டாக் : ஹய்யோ டாக்டர், நாங்க பால் குடிப்போம்னு யார்தான் கிளப்பி விட்டாங்க? நாக பஞ்சமி வந்தா புத்தெல்லாம் பால் ஊத்தி எங்க சின்னப் பசங்கள சாகடிக்கிறீங்க.. ! நீங்க சும்மா வாங்க ! முட்டையும் பாலும் நாங்க உங்களுக்குத் தரோம்.. !

வரோம் டாக்டர்... !

(கிளம்புகிறார்கள்)

சுபம்.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (27-Dec-15, 11:51 am)
பார்வை : 824

மேலே