அடடா இதுதான் வாழ்க்கை

இதுதான் வாழ்க்கை!!!
---------------------------------
"சுதா!! எழுந்துக்கோ கண்ணம்மா!! கார்த்தாலே 7.00 மணி ஆகிறது.... இன்னும் தூங்கிண்டிருந்தால் என்ன அர்த்தம்??? " அம்மா சற்று கோபமாய் எழுப்பினாள்...
"உனக்கு வேலையே இல்லையா? " இது அப்பா முரளி...
"உம!!! நான் மட்டும் 5.00 மணிக்கு எழுந்து விடிய விடிய வேலை செய்யணும் ஆனால் உங்கள் பெண் மட்டும் தூங்கனும் ! என்ன அநியாயம்!! " அம்மாவின் புலம்பலுக்கு அப்பா " ஏய் ! சும்மா இரு...
கல்யாணம் ஆகிப்போனால் அவளும் உன் மாதிரித்தான் கஷ்டப்பட போறா ! இப்ப கொஞ்சம் சுகப்படட்டுமே கல்பனா! " என்றார் அப்பா....
" அது சரிதான்.....எனக்கு டைம் ஆறது... நான் போறேன் நீங்கள் எழுப்பிக்கோங்கோ! " அம்மா சொல்லிவிட்டு சமையலில் முழுகினாள்...
உண்மைதானே.... இது கால காலத்துக்கும் பொருந்தும்....
சுதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவள்... அலுவலக நேரம் கலை 11.00 முதல் இரவு 8 மணி வரை... அதனால் அவள் காலை 8 மணி குறைந்து எழுந்திருப்பது இல்லை... அம்மாவிற்கு இது சுததமாகப் பிடிப்பதில்லை... கல்யாணம் செய்து கொடுத்தால் புகுந்த வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற பயம், அம்மா என்ன வளர்த்திருக்கா ? என்று சொன்னால் என்ன செய்வது போன்ற மனக் கலக்கங்கள் வேறு.... அப்பாவோ எதைப பற்றியும் கவலைப்படுவதாகத் தெரிய வில்லை...
காலம் கடந்தது... பெண் வந்துப் பார்த்துவிட்டு சென்றனர்.. பையன் பெயர் சுதிர்... நல்ல வேலை... ஒரே ஒரு அக்கா திருமணம் ஆகி பக்கத்திலேயே இருக்கிறாள்... நல்ல குடும்பம்... விசாரித்ததில் பெற்றோருக்கு சம்மதம்... சுதாவும் சரி என்று சொல்லி விட்டாள்.. சுதிர் அம்மா கட்டாயம் கூட்டுக்குடும்பம் தான் என்றாள்.. சுதா எதற்கும் கவலைப் படவில்லை... ஆனால் கல்பனாவிற்கோ உள்ளுக்குள் சற்று பயம்தான்... கணவனிடம் வெளிக்காட்டவும் செய்தாள்....
" சுதாவிற்கு கூட்டுக்குடும்பம் சரி பட்டு வருமா? இவளுக்கு விட்டுக்கொடுக்கும் பழக்கம் இல்லையே... கோபம் வேறு அதிகம்!! எனக்கென்னவோ இது முடியும் என்று தோணலே!! " என்றாள் ... முரளி ஆரம்பித்தார்... " கல்பனா! சுதா நல்ல படிச்சவ... நல்லது கெட்டது அவளுக்குத் தெரியும்... நீ உன் வேலையைப் பாரு " என்று அழுத்தமாகச் சொன்னார்...
மூன்று மாதங்களில் கல்யாணம் .... இதோ மேள தாளம் ... " கெட்டி மேளம் ! கெட்டி மேளம் ! " முஹுர்த்தம் முடிந்து மறுநாள் காலை சத்திரம் காலி செய்து புகுந்த வீட்டிற்குள் நுழைந்தாள் சுதா !!! சந்தோஷ அலைகள் அவள் மனதில்... கல்பனாவிற்குதான் படபடப்பு...
நுழைந்ததும் விளக்கு ஏற்றினாள்.. உடனே மாமியாரிடம் " அம்மா ! நான் எல்லோருக்கும் காபி போடறேன்.. எல்லோரும் உட்காருங்கள் " என்றாள்.. 15 நிமிடங்களில் காபி தயார்.... சற்று நேரத்தில் எல்லோரும் கிளம்பினர்... வீட்டில் புது தம்பதியர், மாமியார், மாமனார், நாத்தனார் அவள் குடும்பம்... சுதா வெகு இயல்பாய் இருந்தாள்... என்ன வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துக்கொண்டாள்...
நாட்கள் நகர்ந்தன,,, மாதங்கள் நகர்ந்தன.... சுதா மற்றும் அவள் குடும்பம் மிகவும் சந்தோஷமாய்...
அம்மா கல்பனா மிகவும் ஆச்சரியப் பட்டாள்... மனதிற்குள் என்னென்னவோ ஓடின... " எப்படி சுதா இவ்வளவு பக்குவமாய் நடந்துக் கொள்கிறாள்.. ஆச்சரியம்... நான் பயந்தது வீண்... குழந்தைகள்
மிகவும் சாமர்த்தியமாக இருக்கிறார்கள்... நாம் தான் புரிந்துக் கொள்வதில்லை..." மனம் லேசானதை உணர்ந்தாள்... முரளி எல்லாம் புரிந்தவனாய் பெருமிதத்தில்...
ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி