கரியமாலீஸ்வரர் அந்தாதி ஆறாம் பத்து - - - முயற்ச்சிக் கவிதை - - - சக்கரைவாசன்

" கரியமாலீஸ்வரர் அந்தாதி " ( ஆறாம் பத்து )
*********************************************************
இல்லையினி தொல்லையென இனிவரும் காலங்கள்
இல்லமதை வளமாக்கி இனியவகை மலிந்திடவே
புள்ளிருக்கு வேளூரா ஆனைக்கா கரியமாலி
தள்ளிவைத்த கருணைமழை தயங்காது பொழிவாயே !

பொழிந்திட்ட மழைநீரும் ஆறோடி வாய்க்காலாய்
அழியாது பயிர்தன்னை காத்திடும் அதுபோல
எழிலா ஏகம்பா மழுவேந்தும் கரியமாலி -- இவன்
பழிபாவப் பிணிதீர்க்கும் பாங்கான மருந்தாவாய் !

மருந்துதவா வேளையிலே தாங்குமுடல் கீழவிழ
பருந்தார் கிழிகிழிக்க நாயினமோ கூறாக்கும்
விருந்துக்கறி வைத்தோனை அடியேற்ற கரியமாலி
வருந்திடும் இவன்தன்னை தூக்கிவிட மனமிலையோ !

மனமொன்றி துதித்துஎழும் குணமுடைய உன்னடியார்
பணமின்றி தவிக்கையிலே மொய் இட்ட கரியமாலி
கூன மனன் தோள் நிமிர்த்தி அருள் இட்ட மெய்யன்பா -- மன
ஊனமின்றி தொண்டாற்றும் இவனை நீ அறியலையோ !

அறிந்தறிந்து எது கண்டோம் அஞ்ஞான உலகிதனில்
புரியாதன புரிந்ததும் புரிந்ததுவும் சூட்சுமமே
திரிசடயா கரியமாலி ஊரூராய்ப் பலி எற்போய் -- இவன்
புரியும் பணிகளிடை கண்டீரோ குற்றங்கள் !

குற்றங்கள் இழைக்காத மானுடரும் இங்குண்டோ
கற்றவர் கல்லாதார் பேதமில்லை குற்றத்தில்
கூற்றுவனை எட்டியிட்ட கொற்றவனே கரியமாலி -- உனை
சுற்றிவரும் இவன் தன்னை சற்றேனும் திரும்பிப்பார் !

திரும்பிய இடமெங்கும் தொற்றமிடும் தென்னவனே
ஒருபாகம் உன்தன்னுள் உமையவளை ஏற்றவனே
விரும்பிய வரம்தன்னை தந்தருளும் கரியமாலி --சிறு
துரும்பாம் இவன்தன்னை உன் கண்கள் நோக்காதோ !

நோக்கிய கண்களதும் காமனை அழித்ததுவே -- உனை
தாக்கிய சாக்கியரோ அடைந்தது உன்பதமே
சக்கரம் மாலனுக்கு வழங்கியவா கரியமாலி
விக்கித் தவிக்குமிவன் வாழ்வினில் ஒளியேற்று !

ஒளிர்கின்ற சடையினிடை தளிர் மதியம் வைத்தவனே
இளிக்கின்ற பற்களுடை தலைகொண்டு பலி ஏற்போய்
கூளியாடும் கானகத்தில் கூத்தாடும் கரியமாலி -- இவன்
சுளுக்கவிழ வழியின்றி வீழ்வதுவோ மனம் நொந்து !

நொந்தமனம் மீளாதோ எச்சவினை தீராதோ
தொந்தியானின் தந்தையே கந்தனவன் சீடனே
மந்திரியாம் வாசகர்க்கு பரிவுற்ற கரியமாலி
வந்திருக்கும் சிறுவனிவன் துன்பங்கள் மாயாதோ !

--- ( ஏழாம் பத்து தொடரும் ) - -

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Dec-15, 12:24 pm)
பார்வை : 56

மேலே