கரியாலீஸ்வரர் அந்தாதி - - முயற்ச்சிக் கவிதை - - - சகரைவாசன்

" கரியமாலீஸ்வரர் அந்தாதி " - - - - ( மூன்றாம் பத்து )
****************************************************************
கயிலாய மலையோனே புவிகாக்கும் புண்ணியனே
மயிலோனைப் பெற்றிட்ட காவிலுறைக் கரியமாலி
துயிலாத கண் மூன்றால் கருணைமழை பொழிவோனே
பயிலாத இவனுக்கும் அருள்கூட்டு கற்பதற்க்காய் !

கற்றாலும் அதிலுற்றாலும் ஞானமதில் வெற்றிடமே
பெற்றாலும் விற்றாலும் பேரமதில் முன்னிலையே
பற்றாலும் பந்தமுற்றாலும் பரகதிக்கு ஏதுநிலை -- அக்
கொற்றவனாம் கரியமாலி அடிபணிய நல் கதியே !

நல் கதிக்கு பாடுபட்டு நாயெனவே திரிந்தோழிந்தேன்
கல்பதித்த இடமெங்கும் கால்பதித்து மீண்டெழுந்தேன்
வில்லார்ந்த வேடுவனே பாசுபதா கரியமாலி
இல்நேர்ந்த இவனுமே கிடந்திட்டான் உனைநம்பி !

நம்பியே நீ நம்பு மண் சுமந்த நாயகனை
நம்பிக்கை கொண்டிங்கு கரியமாலி அடிசுற்று
தும்பிக்கை தான்கொண்ட தூயவனின் தாதையாம்
கம்பனைத் தொழுதுவர நமக்கினி குறையிலையே !

குறைபிறைச் சந்திரனைக் கொண்டையிலே சேர்த்தவனே
உறைபனி மலைதன்னில் நிர்மலமாய் இருப்போனே
மறைதுதிக்கும் மன்னவனே வானார்ந்த கரியமாலி
முறையிட்டேன் உன்னிடமே அளிப்பாயே பரமபதம் !

பரமனே படரொளியே பதஞ்சலியின் குருபரனே
அரவினை ஆரமாய் அணிந்திட்ட கரியமாலி
பரவினேன் உன்னடியில் பஞ்சாட்சரம் பறைந்தபடி
மறவேன் உன்னுறவை என்றும் எப்பொழுதும் !

எப்பொழுதும் இவன் தஞ்சம் கரியமாலி உன்னடியில்
அப்பராம் அரசுக்கு காட்சியிட்ட ஐயாறா
அப்புவேன் திருநீற்றை நுதலோடு மெய்முழுதும்
தப்புவேன் மறுபிறப்பு நிச்சயம் நிச்சயமே !

நிச்சயித்த இப்பிறப்பில் யான்கண்ட கோலங்கள்
கச்சியே கம்பனவன் கரியமாலி இட்டதுவே
மச்சப் பிறப்பெடுத்த மாலுக்கு ஆழிதனை
இச்சையோ டளித்தவனே இவனுக்கும் வழிகாட்டு !

வழிகாட்டும் கோலொன்றை சுந்தரர்க்கு ஈய்ந்தவனே - இவன்
பிழை ஒருத்து பழிஎரிப்பாய் கனலேந்தும் கரியமாலி ,
அழியாநிலை கொண்ட ஆதியே அற வாணா
ஒழிந்திடுமே அல்லல்கள் உனை ஆதிரையில் பூசையிட !

பூசமோ சேரவில்லை பூரமும் தேறவில்லை
வாசமுள்ள ரோசாவை வரவேற்போர் யாருமில்லை
ஆசையாய் இவனீன்ற சேய்க் கொரு சேயிழையை
சூசகமாய் அறிவிப்பாய் கரியமாலி ஈசனே !!

-- - ( நான்காம் பத்து ) ---

ஈசனே நேசனே நாவலூரான் தோழனே
மாசற்ற சோதி நீ பொன்மேனிக் கரியமாலி
நீசரினம் பற்றியே இவனென்றும் நில்லாது
பாசமாய் நீயிருக்க வேண்டுவனோ வேருறவு !

உறவுகள் பலவாகில் உன்னுறவுக் கிணையாமோ
வரவுகள் கொடிஎனில் உன்னடிக் கீடேது
அரவினங்கள் பயில்கின்ற திருமேனிக் கரியமாலி-உன்
உறவு தானய்யா நிலை நிற்கும் இறுதிவரை !

இறுதிவரை இவ்வுடலை நற் பேணக் கூடிடுமோ
குருதிவரை குறைந்துவிட கடைநிலைக்கு ஏகிவிடும்
அறுபடை வீட்டாரின் தந்தையே கரியமாலி
உறுதியாய் உனைப்பிடித்து பணி இடுவேன் செல்லும்வரை !

வரையெடுத்த அரக்கர்கோன் கரம் நெரித்த பேராளா
இரை வேண்டி ஊரூராய்த் திரிகின்ற இறையவனே
குறையுண்டோ இவன்பணியில் கரியமாலி இன்றுவரை -= இன்னும்
உறைக்காதே அய்யா நீ தேய் வேனே மேன்மேலும் !

மேல்பறந்த மலரானும் கீழுற்ற கடல்மாலும்
கால்பாகம் முடிபாகம் காணாத தீப்பிழம்பே
ஆலின்கீழ் அமர்ந்தபடி அறஞ்சொன்ன கரியமாலி -- உன்
தாளடியில் கிடப்போனை ஒதுக்கியே வைப்பாயோ ?

வைத்த படிக் காசுமதும் குரயுளதாய் அமைந்துவிட -- அது
வைத்தீசன் விளையாட்டே என்றபடி உலகறியும்
உத்தரையின் மாமனுக்கு கணை ஈந்த கரியமாலி -- இவன்
செத்தலைய விரும்பாது வேண்டுவது உன்பதியே !

உன்பதிக்கு ஈடாக எப்பதியும் இங்குண்டோ
எண்பதும் நூறுமாய் வாழ்ந்திருக்க ஏதுபயன்
பண் பதிந்த வாசகங்கள் ஏற்றவனே கரியமாலி
உண்பது உன் திருநாமம் விருப்பமோ கயிலாயம் !

கயிலாய நாயகரே கார் கண்டக் கரியமாலி
மயிலாளைப் பாகமாய் பகிர்ந்திட்ட பரமேசா
ஒயிலாக இடபத்தில் பவனியுறும் மாதேவா
இயலாது இவனிருக்கக் காரணமும் நீயாமோ ?

யாமறிந்த தேவனே அரவசைத்த கரியமாலி -- உன்
நாமருசி இனித்துவிட காமருசி கசதிடுமே
தாமரையான் சிரம்கொய்த நாமறையின் நாயகனே
பாமரனிவன் கூக்குரலை செவி ஏற்க மனமிலையோ !

மனமிலையே மாதர்க்கு இவன் சேய்க்கு மாலையிட
ஏனமாம் மாலனுக்கு முழு முதலாய் நீள்நின்று
சினங்கொண்டு முப்புரத்தை நன் கெரித்த கரியமாலி
பணந்தின்னிப் பேய்கள் தன் குண மறுப்பாய் காவலனே !

--- ( ஐந்தாம் பத்து ) - - -
--------------------------------------
காவலனே கோவலனே காவிலுறைக் கரியமாலி
ஆவலாய் அனுதினமும் உனைத்தொழு திருந்திடுவேன்
சேவற்கொடி கொண்டானின் மதி ஏற்ற மலையோனே
கேவலமாய் எனை யொதுக்கித் தள்ளாதே அய்யா நீ !

அய் யாறா ஆரூரா ஆனைக்கா கரியமாலி
காய்ந்தாயே காமனவன் உடலழிந்து பொடியாக
மாயும் முன் நற் தொண்டாற்றி அடியாரடி யொற்ற
உய்வானே இவன்தானும் பொய் கலந்த மெய்களைந்தே !

மெய் களைந்து மெய் புகுந்தேன் மெய்மறந்து பொய்யுரைக்க
பொய் களைந்து மெய்யுரைக்க பொய் கலந்த மெய் புணர்ந்தேன்
பொய் புனைந்த மெய் களைய பொய்களைந்து மெய் யுணர்ந்தேன்
மெய் யுணர்ந்து பொய் களைய கரியமாலி உனையடைந்தேன் !

உனையடைந்த நாவரசும் ஊரூராய்த் துதிபாடி
தனை இழந்து பணிசெய்து உன் காட்சி கொண்டவரே
புனலேற்ற புண்ணியனே என்னப்பா கரியமாலி
எனையிழுத்து அணைப்பாயே அடியார் அடியொற்ற !

அடியார்கள் அகமகிழ அம்பலத்தில் நடம் ஆடி
ஈடில்லா ஆடு கலை தரணிக்கு அளித்தவனே
அடிகொடுத்து பா புனைய அருளிட்ட கரியமாலி
விடுவேனோ உன் தன்னை எனைவிட்டு ஓடிடவே !

ஓடுகின்ற ஆறுதன்னை மேற்சடையில் கொண்டவனே
ஊடலிட்டு உமையவளை அரவணைத்த கரியமாலி
கூடினேன் கூட்டத்துள் பாடினேன் பதிகங்கள்
தேடினேன் உன் தன்னை மறைந்தாயோ மறு பக்கம் !

மறுபக்கம் முன்பக்கம் எப்பக்கம் என்றாலும்
பெரும் பக்கம் எதுவென்று அறிந்தேனோ இன்றுவரை
கரும் பக்கம் இல்லாது இப்பக்கம் அமைந்துவிட
கரும் பொத்த கரியமாலி துணையுண்டு பயணத்தே !

பயணங்கள் பலனின்றி கழிந்ததோ அயனங்கள்
சயனங்கள் இன்றியே சோர்ந்ததும் நயனங்கள்
பயன் நோக்குப் பயணங்கள் நல்லபடி செயமாக
அயன்மால் அறியாத கரியமாலி இசைந்துவிடு !

இசைத்திடும் ராகத்தில் தாளங்கள் தவறிவிட
பசையற்ற கீதங்கள் நிற்குமோ நெஞ்சத்துள்
பசியுற்ற பிள்ளைக்கு பால்வார்த்த கரியமாலி
இசைபாடும் இவனுள்ளே நேர்ந்துவிடு பூங்காற்றாய் !

காற்றே கனல் நீரே புவியே விண் வெளியே
கீற்றாய் நிலவோனை சிரமேற்ற சீரழகா
கூற்றுதைத்து மாணிக்கு ஆயுளிட்ட கரியமாலி
தற்பரமாய் நீயிருக்க துன்பமே இனியில்லை !

-- ( ஆறாம் பத்து தொடரும் ) ---

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Dec-15, 12:48 am)
பார்வை : 91

மேலே