கரியமாலீஸ்வரர் அந்தாதி முயற்சிக் கவிதை - - முதல் பத்து - - - சக்கரைவாசன்
எழுத்துத் தோழமையே எனையாளும் ஈசன் சிவபெருமான் கரியமாலீஸ்வரர் எனும் பெயருடனே
திருவானைக்காவில் (திருச்சி) அருள் பாலித்து வருகிறார் . அவர் தன்னை பாட்டுடைத் தலைவனாய்க்
கொண்டு "கரியமாலீஸ்வரர் அந்தாதி * எனும் முயற்சிக் கவிதையை பதிவு செய்கிறேன். இப்படைப்பினில்
எக்குற்றங்கள் இருப்பினும் மன்னிப்பீராக . நன்றி
"கரியமாலீஸ்வரர் அந்தாதி " - - முதல் பத்து )
************************************************************************************
உன்னையே வைத்திட்டேன் என்னுள்ளே சர்வேசா
என்னையும் ஒருவனாய் விரும்பி நீ ஏற்றிடவே
கண்ணையே அளித்திட்ட கண்ணப்பன் அடியொற்ற
என்னப்பா கரியமாலி இவனுக்கும் அருள்கூட்டு !
கூட்டினில் பதுங்கியுள ஆன்மாவின் பேராசை
இட்டுவிட்ட இப்பிறப்பில் தீர்ந்திடுமோ கரியமாலி
ஊட்டி நீ வளர்த்திட்ட காழியதன் பிள்ளைபோல் -- உன்னை
ஒட்டியே இவனிருக்க என்றென்றும் துணையிருப்பாய் !
துணையாய் உனையேற்று பிணைந்திட்ட இவன்தானும்
இணையாய் சரணடைந்தான் ஒப்பிவிடு கரியமாலி -- நற்
சுனையாய் இவனுள்ளே ஊற்றெடுக்கும் சந்தங்கள்
அணை மீறும் வெள்ளமென , வெளியேறும் பாக்களாய் !
பாக்களைப் புனைந்திடவே ஆக்கமாய் நீயிருக்க
பூக்களைத் தொடுத்து உனக்கு நான் அணிவிப்பேன்
யாக்கை அழிந்தவுடன் காக்கைக்கு ஆகுமுன் -- இவன்
வாக்கினில் வந்துவிடு கரியமாலிப் பெருமானே !
பெரு மாடு சுகமதுவும் உன் மாட்டிற்கு இணையாமோ
பெறு மாடு அத்துனையும் இவன் சுமக்கும் சும்மாடே
கரும்பாடும் கையாளை இடமேற்ற கரியமாலி --- உன்
விருமாட்டைக் கண்டகண்கள் மறு மாட்டைக் கண்டிடுமோ !
கண்டுவிடும் காட்சியெல்லாம் கயிலாயம் போல் ஆமோ
விண்ணார்ந்த அமரரினம் அடியார்க்கு ஒப்பாமோ
அண்டியுள்ள பழி பாவம் அறவே அகன்றுவிட
கண்டத்தில் நிழலேற்ற கரியமாலி தாள் பணிவோம் !
பணிந்தேன் உன் தாளில் துணிந்தேன் ஒருநாளில்
பணித்தேன் உளம் தன்னை கரியமாலி உனைஏற்க
கனிந்தேன் மனமுருகி தணிந்தேன் தாகமற
சுவைத்தேன் உன் நாமம் இனித்தாயே என்னவனே !
என்னவனே பொன்னவனே கயிலை ஆள் மன்னவனே
தென்னவனாய் மதுரையிலே தமிழாண்ட கரியமாலி
முன்னவனே முக்கண்ணா மறையுதிர்த்த அற வாணா
புண்ணியனே இவன்தானும் எப்போதும் உனைத்தொழவே !
தொழுதாலும் அழுதாலும் வேண்டும் வரம் நீயன்றோ
இழுத்தால் அசைந்தாடும் தேர்கொண்ட ஆரூரா
பழுத்த ஆல் கழுத்தேற்ற கான் ஆளும் கரியமாலி
இழுத்தேன் உன்தன்னை நெஞ்சத்துள் ஒன்றிடவே !
ஒன்றிய மனத்துள்ளே ஊன்றிவிட்ட கரியமாலி
கொன்றாடும் கூற்றுதைத்து நின்றாடும் நர்த்தகரே
சென்றாடும் தீர்த்தமெங்கும் நிறைந்திட்ட மறையோனே
இன்றோடு ஒழியட்டும் துன்பங்கள் என் செல்வா !
------------------
--- (இரண்டாம் பத்து )---
செல்வம் என்றொன்று சென்றுவிடு மென்றாலும்
வில்வம் ஒன்றுண்டே உன்னை நான் அர்ச்சிக்க
கொல்லும் விடந்தன்னை உண்டெழுந்த கரியமாலி
அல்லலே இல்லையினி பதிகங்கள் ஒதிடவே !
ஒதக்கடல் வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
காதமாய்க் கடந்தாரே உனைக்காண கீழ் மேலாய் -- என்
நாதனே கரியமாலி உனைத்தொழும் அடியார்க்கு
பாதையை நல்காட்டி வாழ்வினில் விளக்கேற்று !
விளக்கேற்றி வழிபடவே விலகிடுமாம் துன்பங்கள் --உனை
உளமேற்றி தொழுதுவர நிறைந்துவிடும் இன்பங்கள்
காளை ஏறிக் கரியமாலி இவனுள்ளே தேங்கிவிடு
இளைத்திட்ட வாழ்வதுவும் மறுமலர்ச்சி அடைந்திடுமே !
அடைந்தார் தம் பாவங்கள் நோய்கள் அல்லலையும்
சடையினில் பிறையணிந்த குளிர்நீர் கங்கையாம்
மடந்தையின் மணவாளன் கரியமாலி ஈசனவன் -- நன்கு
கடைந்தே அழித்திடுவான் மேலுமினித் தொடராது !
தொடரும் தொல்வினை துக்கங்கள் நீங்கிடவே
இடர் களையும் பதிகங்கள் அனுதினமும் ஒதிநிற்பேன்
கடல்கொண்ட மாலுக்கு கரங்கீய்ந்த கரியமாலி -- இவனுக்கு
படரும் முல்லையென அரணாக அமைந்திடுவாய் !
அமைந்திட்ட இப்பிறப்பு நன்நெறியில் சென்றிடவே
உமைபங்கா கரியமாலி நீயுண்டு இவனுக்காய் !
குமைந்திடும் சுற்றத்தார் குழாமோடு சேர்க்காது
இமைக்காத அமரரினக் கூட்டத்தில் இட்டுவிடு !!
விடுபடும் புழு உடலை நல் காத்து நிற்குமிவன்
மடுவினில் தவறிய குஞ்சரதைப் போலுளானே
இடுக்கண் நேர்ந்தாலும் படுக்கையில் வீழ்ந்தாலும்
உடுக்கைய்யா கரியமாலி நின் நாமம் இவன் நாவில் !
நாவினில் அஞ்செழுத்தை தேனாக சுவைத்துவிட
பாவாக வந்துறுவான் ஆனைக்கா கரியமாலி
தேவாரப் பதிகங்கள் நாவார ஓதிவர
ஆவாய் அடியவனாய் என்றுரைப்பான் மானுடையான் !
மானுடையான் தோலுடையான் டமரூகம் தானுடையான்
கானுடையான் தோடுடையான் ஆணோடு பெண்ணுடையான்
தேனடையும் கொன்றையுடை நீர்தங்கும் சடையுடையான்
ஆனேறும் கரியமாலி மழுவேந்தும் வலத்தானே !
வலமாக கரியமாலி இடபாகம் உமையிருக்க
குலக்கொழுந் திரண்டும் மடிமீது அமர்ந்திருக்க
உளமகிழ்ந்து துதித்தேத்தும் கணங்கள் இனம் கூடிநிற்க
பலமாக உள்ளதையா தியானப்பீடக் கயிலாயம்
=== ( மூன்றாம் பத்து தொடரும் ) ===