கரியமாலீஸ்வரர் அந்தாதி - - - எட்டாம் பத்து -- - முயற்சிக் கவிதை - - - சக்கரைவாசன்

" கரியமாலீஸ்வரர் அந்தாதி " -- - - ( எட்டாம் பத்து ) - - -
************************************************

தோணிபுர நாயகரே தியானபீடத் தலைமகனே
தூண் பிளந்த சிம்மத்தின் சினந்தணித்த சீரழகே
கணிமநீர் ஆறுதன்னை எமக்களித்த கரியமாலி -- என்றும்
கோணாமனம் இவன்பற்ற அருள்கூட்டு நீடுரரே !

நீடுகின்ற இன்னல்கள் அறுந்துவிட வழியிலையோ
தேடிவந்த செல்வமே என்னவனே கரியமாலி
நாடினேன் பொற்பாதம் ஓதுவேன் பதிகங்கள் -- அஞ்சி
ஓடாதிவன் இருக்க கருணையிடு அரை நாரீ !

அரை நாரி பாகத்தோய் நரை விடைக் கரியமாலி
கரையாத கல்மனமும் கரைந்துருகக் காரணம் நீ
கறையற்று வாழ்ந்திருந்து குறையற்ற தொண்டாற்றி
புறம்பேசா திவனிருக்க ஆக்கிவைப்பாய் வெண் காடரே !

வெண் காடு மேயவனே வன் காட்டில் நடம் ஆடீ
வெண் தலை கையேந்தி பலி கோரும் கரியமாலி
வன் மொழி அது ஒறுத்து இனியவை பல நோற்று
அன்புடன் இவனிருக்க வழிகாட்டு இன்னம்பரரே !

அம்பரமே தண்ணீரே என் அன்புப் பெரியோனே
அம்பலத்தில் ஓயாது நடனமிடும் கரியமாலி
ஐம்புலன் தனையடக்கி இவனென்றும் வாழ்ந்திருக்க
நம்பிக்கைதனை ஊட்டு என்னருமை சிவணவனே !

அவனிவன் என்றாலும் சிவ்னுனைப் போல் ஆமோ
சேவலோன் தாதையே சேவிக்க காவலனே --
கோவலன் நீயாகில் பாவலன் இவனிலையோ -- கரியமாலி
இவனென்றும் உனைப்பாட நா வளம் தந்தாக்கு !

ஆக்கிவைத்த ஆகமங்கள் கூறிடுமே உன் பெருமை
தக்கனிட்ட வேள்விதனை அழித்திட்ட கரியாலி
ஊக்கமுடன் பாக்களிட்டு மனமொன்றி உனைத்தொழுவேன்
தேக்கிவைத்த பேரருளை வழங்கிடுவாய் பரம்பொருளே !

பொருளுக்காய் அலைந்தேனோ பொறுப்பற்று நடந்தேனோ
அருவருக்கும் செயலொன்றில் ஆரவாரம் கொண்டேனோ
ஈருருவம் ஒருமுகமாய் நின்றவனே கரியமாலி -- உன்
அருளுக்காய் காத்திருந்தேன் வழங்குவாய் தென்னவனே !

தென் ஆனைக் காவானே தன் நிகர் அற்றவனே
முன்னவனே மூவருளே , என்னவனே கரியமாலி
பண்ணோடு இலயமிட்டு நடம் பயிலும் அம்பலவா
என் நாட்டம் எதுவென்று அறியலையோ இன்னும் நீ !

இன்னும் உன் சோதனையோ , சோதனைகள் நல்அளித்து
என்கண்டாய் கருங்கண்ட கரியமாலி ஈசனே
புண்ணார்ந்த நெஞ்சத்துள் சுடுநீரைப் பாய்ச்சாதே !
சின்னவன் இவனை நீ மேன்மேலும் தேய்க்காதே !!

- - - ( ஒன்பதாம் பத்து தொடரும் ) ---

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Dec-15, 3:15 pm)
பார்வை : 76

மேலே