கரியமாலீஸ்வரர் அந்தாதி -- - - ஒன்பதாம் பத்து - - - முயற்சிக் கவிதை -- - சக்கரைவாசன்

கரியமாலீஸ்வரர் அந்தாதி ( ஒன்பதாம் பத்து )
******************************************************
தேய்கின்ற தேகத்துள் தேயாத ஆசைகள்
அயராது ஓலமிட்டு ஆலாய்ப் பறக்கிறதே
ஓயாது நடனமிடும் ஆனைக்கா கரியமாலி -- உனை
தாயாய் வரிந்திட்டேன் போழிவாயே அன்புமழை !

அன்பனே இன்னம்பர் குடிகொண்ட கரியமாலி ஈசனே
என்புருகப் பண்ணுடனே பதிகங்கள் ஒதிடவே
பண்பதுவும் மெருகேறி உன் பதமும் அருகிலுற
இன்புறும் மனம் தானும் மாயுமே தொல்வினைகள் !

வினை கழிய மனமழிய மௌன வழி செல்வதற்கு
சுனை நீராய் ஊற்றெடுப்பாய் கரியமாலி இவனுள்ளே
துணை எனப் பணிந்தேன் உன் தாளில் இக்கணமே -- உனக்
கிணையாய் வேறு தெய்வம் கண்டிலனே இப்புவியில் !

இப்புவியில் உனை ஏற்று வந்தோர்கள் பலருண்டு
அப்பரும் சுந்தரரும் அதிலுண்டு உலகறியும் -- அவர்
துப்பிய பதிகங்கள் தப்பாது ஓதி நிற்க
ஒப்புவாய் கரியமாலி எப்போதும் உடனிருப்பாய் !

உடனிருந்த உற்றாரும் உடல் அறுந்து போனபின்னே
கடனாய்க் கர்மங்கள் காடுவரை நேர்ந்திடுவார்
நடமாடும் காட்சிகள் படமாகும் இல்லத்தே -- கரியமாலி
நாடினேன் உன் நேசம் தவிர்ப்பாயே கருவறைகள் !

கருகாவூர் அமர்ந்திட்ட முல்லைவன நாயகரே
கருவொன்று உருவாக காத்துதவும் கனவானே -- மகளிற்கு
கருவறைகள் நல் திறக்க கருணையிடும் கரியமாலி -- உன்
கருவியே இச்சிறுவன் கருவூர்ப் பசுபதியே !

பசுபதியே ! பாசுபதந்தன்னை பார்த்தனுக் கீய்ந்தவனே -- காலன்
வீசியிட்ட பாசத்தால் அச்சமுற்ற மாணிக்கு
நேசமாய் முன்வந்து ஆயுளிட்ட கரியமாலி -- உன்
தாசனாம் இவனையும் கரையேற்று அரனரியே !

அரி அவனும் அன்னத்தானும் அயராது உனைத்தேட
தெரிவிக்கும் தீப்பிழம்பாய் அண்ணாமலை நேர்ந்தவனே
நாரியின் ஒருபாகம் இடமேற்ற கரியமாலி -- இவனை
பரிதவிக்க விடுவதுவோ கனலேந்தும் கழுமலத்தோய் !

கழுமலம் நேர்ந்தார்க்கு அழிவில்லை என்றென்றும்
மழு வலம் கொண்டோனின் கழலடியும் அருகில் ஆம்
பழி பலம் கழிதற்க்காய் கரியமாலி உனையடைந்தேன்
ஏழை இவன் பழி ஒறுத்து காத்தருள்வாய் கண்டியூரா !

கண்டியூர் மேயவனே திருப்பட்டூர்த் திருமகனே
கண்டேன் உனை நானும் கரியமாலி ஈசனாக !
குண்டனுக்கு சோறிட்ட தென்மதுரை சுந்தரனே -- நற்
தொண்டனாம் இவன்தன்னை தள்ளிவிடல் உனக்கழகோ !

- - - ( பத்தாம் பத்து தொடரும் ) - - -

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Dec-15, 5:02 pm)
பார்வை : 86

மேலே