கரியமாலீஸ்வரர் அந்தாதி - - - பத்தாம் பத்து - - - முயற்சிக் கவிதை - -- சக்கரைவாசன்

கரியமாலீஸ்வரர் அந்தாதி ( பத்தாம் பத்து )
***********************************************
உனக்கழகு மான் மழுவும் ஒளிர்கின்ற வெண் நீரும்
கணுக்கால் அழகிற்கு கழலிரண்டு நல் சேர்ந்து
பிணங்குவியும் இடுகாட்டில் நடம் ஆடும் கரியமாலி - இவன்
பிணக்கு தீர்வதற்கு வழியிலையோ தில்லையானே !

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியவனே
இல்லை எனாது பல் வரங்கள் வழங்கிடும் கரியமாலி
வில்வத் தளங்கொண்டு உன்னை நான் தொழுதிடுவேன்
வல்லவனே காத்துவிடு தொல்வினைகள் தொடராது !

தொடரும் இவன் கதைக்கு மூலமாய் இருப்பவனே
முடிகாணா அடிநேரா அரியவனே கரியமாலி
அடியார் அடியொற்றி எப்போதும் இவனிருப்பான் - இன்னும்
நீடுகின்ற முன்னுரைக்கு அறிவிப்பாய் முகவுரையை !

முகவுரையின் புறவலிகள் என் முகவரியின் அகவலிகள்
அகவலிகள் நீங்கிவிட ஒரு வரியே கரியமாலி
ஏகனே ஏகம்பா என்றுனைத் தோத்தரிப்பேன்-- என்றும்
சோகவலி அண்டாது காப்பாய் மதி பதியே !

மதியழகன் அதிபதியே சதி களையும் அருட்கனலே
மாதே வா என்றழைத்து இடம் அளித்த மாதேவா
ஆதியும் அந்தமில்லா பெருங்கருணைக் கரியமாலி
முதிராத இவன் கடமை உனக்கோர் விடுகதையோ !

விடுகதைக்கு நேரமில்லை தொடரதுவும் நீன்ன்டுவிட
சுடுகதிக்கு உடலேக சொந்தமில்லை வேறெதுவும்
இடுகின்ற தொண்டிற்கு கரியமாலி இணை ஆக
ஓடிடும் துன்பங்கள் இன்பங்கள் நாடிவரும் !

வருங்காலம் எல்லோர்க்கும் நல்லபடி அமைந்துவிட்
ஆரவாரம் அல்லாத பக்தி நிலை பெருகிவிட
உருவாகும் நற்பண்பு புவியெங்கும் சிறந்தோங்க
அற வாணா கரியமாலி அறிவுறுத்து உலகோர்க்கே !

உலகத்தில் எந்நாடும் கலகத்தில் நேராது
கொல்லுவதும் கொள்ளுவதும் இல்லாத நிலையுற்று
நல் வாழ்வு ஒன்றுமட்டும் கருத்தினில் கொண்டுவிட
தலைமகனே கரியமாலி வழிகாட்டு மாந்தர்க்கே !

மாந்தர்க்குள் சாதிமத பேதங்கள் அல்லாது
மந்தி மனம் கொள்ளாது சுத்த மனம் அது பற்றி
காந்தமென அனைவரும் ஒட்டியே வாழ்ந்திருக்க
சுந்தரக் கரியமாலி அறிவுறுத்து சந்ததிக்கே !

சந்ததிகள் அனைவரும் சாந்தமாய் வளர்ந்துவிட
குந்தகம் இல்லாத குவலயம் கொண்டுவிட
சந்தத்தில் உன்னவனும் பாடல்கள் நற்புனைய
கந்தனவன் தந்தையே கரியமாலி அருள்கூட்டு !!

( முற்றும் )

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Dec-15, 7:43 pm)
பார்வை : 108

மேலே