நான் யார்

முந்நூறு நாட்கள்
சிறைவாசம்!
முடிவில் தண்டனை!
வலியுடன் கூடிய விடுதலை!
எனக்கும்- என்னை சுமந்த
அவளுக்கும்!
அவள் சொர்க்கம் சென்றாள்
நான் நரகம் வந்தடைந்தேன்.

அறிமுகம் இல்லாத
அந்நியர்கள் மத்தியில்
அவளை மட்டும் தேடின
என் ஈர விழிகள்.!

பிறந்த அன்றே - எனக்கு
பெயர்சூட்டப்பட்டது
அநாதை என்று...!

உணவு மட்டுமே
உடனடி தேவையானது...
நாக்கு வறண்டு
நான் அழுகையில்,
பால் சுரந்து
பசியை தீர்த்தது
ரப்பர் காம்பு ஒன்று...!

அழுதேன்...
என்னால் முடிந்தவரை...
செல்லம் கொஞ்சி சீராட்டவும்,
என் பிறப்பை கொண்டாடவும்,
யாரும் இல்லை - என்பதை
பின்னரே உணர்ந்தேன்.

யாரோ ஒருவரால்
கொண்டு செல்லப்பட்டேன்
அந்த இல்லத்திற்கு..
பசுவை இழந்த
கன்றுகளாய் - அங்கே
பல சிறார்கள்...
சிறகு முளைக்காத சிட்டுக்குருவிகளின்
கூடாரம் அது..
எண்ணிக்கை ஒன்று கூடியது
என் வரவால்..!

முகம் அறியா ஒருவர்
உடன் இருந்தார்..
குளியல் முதல் உணவு வரை...!
அதுவும் நடக்க பழகும் வரை...!

தவழ்ந்தேன்..தனியாக..
நடந்தேன்..நானாக...
விழுந்தேன்... எழுந்தேன்...
சிரித்தேன்...அழுதேன்..
பேசவும் தொடங்கினேன்..
ரசிக்கத்தான் ஆளில்லை..

யார் யாரின் பிறந்தநாளோ
கொண்டாடப்படும்
எங்களின் இல்லத்தில்..!
யாரும் அறியோம்
எங்களின் பிறந்தநாளை..!

மணி அடித்தால் உணவு,
உணவிற்கு முன் பிராத்தனை,
ஒன்றாய் குளியல்,
ஒன்றாய் உறக்கம்,
ஒரே உறவாய் நட்பு மட்டும்..

அறிவை புகட்டியது கல்வி,
ஆடம்பரத்தை உணர்த்தியது
பிறரது பிறந்தநாள்..
என்னை விடவும்
வேகமாய் வளர்ந்தது...
என் தனிமையும் வெறுமையும்...!

அடிபட்டு அழும்போது - என்னை
அறியாமல் உதிக்கிறது
"அம்மா" எனும் மந்திரசொல்.
நான் கண்டிராத
முழுநிலவு அவள்...!
ஏனோ - என் நாட்கள்
அமாவாசையாகவே கழிகின்றன..!

எனினும்
என் எண்ண தூரிகையால்
கற்பனை சுவர்களின்
வடித்து வைத்துள்ளேன்
அவளின் உருவத்தை..!

கோவில் சிலை சற்றே எழுந்து
பக்தனை ஆசிர்வதிப்பது போல,
அவ்வபோது முத்தமிட்டது - அந்த
கற்பனை உருவம்
என்னை மட்டும்...!

எனக்கான என்
கற்பனை உலகில்
எனக்கும் அவளுக்குமான
கடிதங்கள் பரிமாறப்பட்டன,
கவிதைகளாக...!

காலம் செல்ல செல்ல
கவிதைகளால் உயிர்பெற்றாள்
அவள்...!
நிஜ உலகை மறந்தேன்...
கவிதையில் உறைந்தேன்....
ஆம்..
என் அமாவாசை
இப்போது
வளர்பிறையாகிவிட்டது....

எழுதியவர் : காயத்ரிசேகர் (31-Dec-15, 8:40 am)
Tanglish : naan yaar
பார்வை : 562

மேலே