புரியாத புலனாகாத நான் - சந்தோஷ்

உங்களுக்குப் புரியாத
நானொரு நானென்பதில்
பெருமிதம் எனக்கு.

எனது அழகியல் பிருந்தாவனத்தில்
கற்பனை விருட்சத்தில்
ஊஞ்சல் கட்டி ஆடி
காலால் எட்டியுதைத்து
ஆகாயத்தை தட்டியெழுப்புகிறவன்
நான்.


சில போது
எனது கால்களை
வானவில் தனது
நிறங்களை ஊற்றிக் கழுவி
நிரந்தரமாய் காட்சியாக
ஆசிர்வாதம் கேட்கும்..
சில போது
வெண்ணிலாவுக்குள்
எனது பாதங்கள்
பதிந்து..
நீல் ஆம்ஸ்ட்ராங்கிடம்
விஞ்ஞானம் கற்கும்.

என் கைகளை
காற்றின் கரங்கள்
பற்றி கைகுலுக்கி
நலம் விசாரிக்கும்.

காற்றானது இன்றெனது
காதலானது..
புயலுக்கு முதல் நாள்
எனை எச்சரிக்கும்
தென்றலுக்கு முதல் நொடி
எனை வரவேற்கும்.

காற்று.. எனக்கு
காதலைவிடவும்
பரமசுகம். நிம்மதிக்கு
பாதுகாப்புக் கவசம்.
.
உங்கள் யாவருக்கும்
நானொரு
புரியாத புதிர்
புலனாகாத உயிர்

இப்போது நான்
மயானத்தில்
எனக்கு ஒதுக்கப்பட்ட
கல்லறை தேசத்திலிருந்துதான்
இக்கவிதையினை சமர்பித்தேனென
நீங்கள் நம்பினால் நம்புங்கள்...

**

-- இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (31-Dec-15, 1:34 pm)
பார்வை : 91

மேலே