மீண்டும்
புத்தாண்டு பிறந்தது-
அந்திக் கடலில்
ஆழ்ந்த கதிரவன்
கண்விழி சிவந்திட
கிழக்கில் எழுந்தான் !
வண்ண விளக்குகள்
அணையாமல் கண்சிமிட்ட
சின்ன தீபாவளியை
கொண்டாடிய நகரவீதிகளில்
சிவகாசி உழைப்புகள்
சிதறி கிடந்தன !
தெருவோர சிறுவர்கள்
காலி பாட்டில்களை
சேகரம் செய்தனர் !
இளைய தலைமுறைகள்
கட்டிலில் படுத்தவாறே
'வாட்ஸ்அப்' ல் மூழ்கினர் !
பணி ஓய்வாளர்கள்
பேரப் பிள்ளைகளின் உதவியால்
பழைய நண்பர்களுக்கு
குறுஞ்செய்தி வாழ்த்தனுப்பி விட்டு
" அந்த காலத்திலெல்லாம்.."
என பழங்கதைகள்
பேச தொடங்கினர் !
அரசு ஊழியர்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பரிமாறி அளவளாவினர் !
அகவிலைப்படி உயருமா என
அபிப்ராயம் பகிர்ந்தனர் !
பின் வரும் மாதங்களின்
தேர்வு எனும் பேதி மருந்தை
உணராத பள்ளிக் குழந்தைகள்
புத்தாண்டு இனிப்பை சாப்பிட்டு
பொங்கலுக்காக காத்திருந்தனர் !
இளங்கவிஞர்கள்
காதல் கவிதைக்காக
புது வர்ணனை சொற்களை
தேடிக் கொண்டிருந்தனர் !
முதிர்ந்த கவிஞர்கள்
புதியதாய் முளைக்கும்
சமுதாய அவலங்களை
பதிவு செய்ய சிந்திக்க தொடங்கினர் !
பரணில் வீற்றிருந்த
நம்பிக்கைகளும்
எதிர்பார்ப்புகளும்
தூசு தட்டி மீண்டும்
மனதில் குடியேற்றப்பட்டன !
(மீள் பதிவு )

