சஞ்சாரம்

இரண்டு பெண்களிடையே, இயற்கையாய் தோன்றும் உடல்-மன ஈர்ப்பைக் காட்டும் மலையாள திரைப்படமான ”சஞ்சாரம்” படத்தை சென்னை பனுவல் புத்தக கடையில் பார்த்தேன்.இயற்கையாய் தோன்றும் ஒரின ஈர்ப்பை பார்ப்பவர் மனதில் உரைக்கும்படியான திரைப்படமாக இருந்தது சஞ்சாரம்.நிகழ்ச்சியின் ஹைலைட் அ.மங்கையுடனான விவாதம்தான்.அதில் மங்கை பேசியதில் எனக்கு நினைவிருப்பதை தொகுக்கிறேன்.

-லெஸ்பியன்களை பற்றிய இந்த திரைப்படத்தில் நிறைய உண்மை இருக்கிறது.இது மாதிரியான உணர்வுள்ளவர்கள் சமூகத்தில் நிறைய இருக்கிறார்கள்.பலர் தங்களுக்கு இயற்கையாக இருக்கும் அவ்வுணர்வை சமூகத்திற்காக அடக்கி வைத்துக் கொண்டுள்ளனர்.பலர் வீட்டை விட்டு ஒடி சமூக மையங்களிடம் தஞ்சமடைகிறார்கள்.இதில் எந்த தவறும் இல்லை.இயற்கையாக உங்களுக்கு அவ்வுணர்வு இருந்தால் அது உணர்வுதான்.அதை சமூகம் உணரவேண்டும் என்பது பற்றிதான் எங்கள் கவலை.

-ஆணிலிருந்து பெண்ணாக மாறும் திருநங்கையால் வீட்டை விட்டு ஒடி வந்து பஸ்ஸடாண்டில் தரையில் படுத்து ஒரு இரவை கழிக்கக் முடியும்.ஆனால் பெண்ணிலிருந்து ஆணாக மாறும் ஒருவரால் அப்படி பஸ்ஸ்டாண்டில் படுக்க முடியாது.அவருடைய மார்பகங்களும்,உடல் அமைப்புமே அவருக்கு துன்பத்தை விளைவித்து விடுகின்றன.பலர் அது மாதிரி சின்னாபின்னமாகியிருக்கிறார்கள்.அதையெல்லாம் தடுக்க நாம் அது பற்றிய விழிப்புணர்ச்சியை பெற வேண்டும்.

-2009 யில் டெல்லி உயர்நீதிமன்றம் ஒரின சேர்க்கை குற்றமில்லை என்று தீர்ப்பளித்தது.ஆனால் அங்கீகரிக்கவில்லை.இப்போதும் கோர்ட் அதைத்தான் சொல்கிறது.தலித்கள்,சிறுபான்மையினர்,பெண்கள் போன்றவர்களுக்கு நம் நாட்டி பாதுகாப்பில்லையென்றாலும் அட்லீஸ்ட் Constitutional morality என்று சொல்லக்கூடிய சட்ட பாதுகாப்பாவது இருக்கிறது.ஆனால் லெஸ்பியன்களுக்கு அதுவுமில்லை.

-லெஸ்பியன்கள் என்றால் உயர் வர்க்க குடியியிருந்தே வருவார்கள் என்பது போன்ற பிம்பம் நம்மிடையே இருக்கிறது.அது தவறு.உழைக்கும் வர்க்கத்தினரிடம் கூட நிறைய பேர்கள் அது மாதிரி உணர்ந்து சமூக சேவை மையத்திடம் தஞ்சமடைகிறார்கள்.

-2009 யில் கேரளாவில் இரண்டு லெஸ்போக்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.அதை மையமாக வைத்துதான் இந்தப்படம் எடுத்திருக்கிறார்கள்.இந்த படத்தில் கூட இரண்டு பெண்களும் தங்கள் பதின் வயதில் லெஸ்போக்களாக காட்டுவது மாதிரி எடுத்திருக்கிறார்கள்.அது தவறாய் சிந்திக்க வைக்கும் என்பது என் கருத்து. “அறியா பருவத்தில சரிவர புரியாம செய்துட்டா” என்று நாமே சொல்லிவிடுவோம்.நன்கு தெளிவான சிந்தனையிருந்தாலும் லெஸ்போக்களால் அவர்கள் உணர்வை விட்டுதர முடியாது.அமெரிக்காவின் பிரபல பெண்ணிய எழுத்தாளர் ’அட்ரன் ரிச்’ Adrienne rich தான் திருமணம் செய்து மூன்று பிள்ளைகள் பெற்ற பிறகு கூட தனக்குள் இருக்கும் லெஸ்பியன் உணர்வை மதித்து,விவாகரத்து பெற்று லெஸ்போவாக மாறினார்கள் என்பதை சுதந்திரத்தின் அடையாளமாக நாம் பார்க்கலாம்.

-நிர்வாணம் செய்து கொள்ளுதல் என்றால் ஆணிலிருந்து பெண்களாக மாற நினைக்கும் திருநங்கைகள் தங்கள் விதைகளை நீக்கி கொள்வது ஆகும்.இப்போது இதை மருத்துவமனைகளில் செய்கிறார்கள்.இன்னும் பலர் அவர்களுக்குள்ளாகவே அதை செய்து கொள்கிறார்கள்.பல நேரம் சுகாதாரம் இல்லாமல் செய்யும் போது ,அது அவர்கள் உடலை பாதிக்கிறது.

-முதல் முத்தத்தை குற்ற உணர்ச்சியில்லாமல் பெற்றோம்,கொடுத்தோம் என்று நம் யாராலும் சொல்லமுடியவிதில்லை.அந்த அளவுக்கு சமூகம் தனிமனிதனை அடிமையாக்கி வைத்திருக்கிறது.

-இயற்கைக்கு எதிரானது என்கிறீர்கள்.எது இயற்கை? குழந்தை பெற்று கொள்வதா? கணவனும் மனைவியும் குழந்தைக்காக உடலுறவு கொள்கிறீர்கள்.அப்புறம் குழந்தை பெற்ற பிறகு ஏன் தடுக்கிறீர்கள்? ஏன் காண்டம் போடுகிறீர்கள்.ஏன் மாத்திரைகள்? ஏன் வாய்வழி புணர்ச்சி.குழந்தைகாக உடலுறவு என்றால் குழந்தைகளை பெறுவது மட்டுமல்லவா நம் வேலையாக இருந்திருக்கும்.அது மாதிரிதான் ஒரின ஈர்ப்பும்.அவன் பிறக்கையிலே அந்த உணர்வு அவனிடம் இருக்கிறது.அவன்/அவள் அப்படி வாழ்வதுதான் இயற்கை.மாற்றி வாழ்ந்தால்தான் அது செயற்கை.

-எது கலாச்சாரம்? கலாச்சாரம் என்பது நம் மண்டையில் நாமே திணித்துக் கொண்ட போலியாகும்.இதோ நான் இங்கிருக்கிறேன்.நான் இப்படி அடக்கமாக உட்கார்ந்திருதால் நீங்கள் அதை ஏற்பீர்கள்.இதே இது நான் காலை நீட்டி கோணலாக உட்கார்ந்து கொண்டு இருந்தால் ( செய்து காட்டுகிறார்) என்ன சொல்வீர்கள்.என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.அப்படி சொன்னால் அது எவ்வளவு புத்திசாலிதனமில்லாத சொற்களாக இருக்கும்.அதைத்தான் நாம் நம் மீது திணித்துக் கொண்டிருக்கும் கலாச்சாரமும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது.பலர் உணர்வை மதிக்காமல் மிதித்துக் கொண்டே இருக்கிறது.

-இது போன்ற பொதுவிசயங்களைப் பற்றி விவாதமே செய்யாத ஒரு சுரணையற்ற தன்மையைத்தான் நான் வெறுக்கிறேன்.ஐந்து நாள் வேலை.இரண்டு நாட்கள் கொண்டாட்டம் என்ற வலையில் நாமும் சிக்கிக் கொண்டுவிட்டோம்.இந்த ஒரின சேர்க்கையாளர்களை பற்றி விவாதிக்க கூட நாம் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை.அவ்வளவு சுரணையில்லாமல் இருக்கிறோம்.

-நமக்கு கிட்னி இல்லாவிட்டால் டிரான்ஸ்பிளாண்ட் செய்கிறோம் இல்லையா.அது போலத்தான் இதுவும்.’என் உணர்வு இப்படி இருக்கிறது.நான் ஆணாக உணர்கிறேன்.என் மார்பகங்களை நீக்குகிறேன்.ஆண் தன்மையை வளர்க்கும் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறேன்”என்பதாகும்.அதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

-நிச்சயமாக திருநங்கைகளிடம் முதலில் பழகும் போது ஒரு தயக்கம் இருக்கும்.நாம் பேசுவோம்.ஆனால் நேரடியாக பழகுகையில் யோசனை வந்தே தீரும்.ஒரளவுக்கு விசயம் தெரிந்த எனக்கே,என் வீட்டிற்கு முதன்முதலில் வந்த திருநங்கையை இரவு தங்க சொல்லலாமா வேண்டாமா என்ற தயக்கமிருந்தது.எல்லோருக்கும் இருக்கும்.அது பற்றி கேள்விகளுக்கான பதிலை உண்மையாக தேடுவதின் மூலமாகவே அந்த தயக்கத்திலிருந்து விடுபடமுடியும் என்று நம்புகிறேன்.

-எனக்கு தெரிந்த ஒருவர், சின்ன வயதுதான்.பெண்ணாக இருந்து, ஆண் உணர்வு பெற்று திருநங்கையானார்.ஊரில் அவருக்கு மரியாதை இல்லையென்று சென்னைக்கு ஒடிவந்தவர், இங்கே எங்களிடம் சேர்ந்து சிகிச்சை பெற்று, மனதளவில் தெம்பாகி “என் சொந்த ஊரிலேயே கவுரமாக வாழ்ந்து காட்டுவேன்” என்று தன் சொந்த ஊரான திருச்சூருக்கு சென்றார்.ஆனால் கொஞ்ச நாளில் அந்த தம்பி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன்.அறியாமையால் சமூகம் விஷத்தன்மையடைந்து விடும் என்பது உண்மைதானே...

இந்த கடைசி பத்தியில் உள்ள செய்தியை மங்கை சொல்லும் போது அவர் கண்கள் சிவந்திருந்தன.அது கோபத்தினாலா அல்லது கலக்கதினாலா என்று கண்டறிய முடியவில்லை.

பனுவல் புத்தககடை நடத்தும், ஐம்பவதாவது நிகழ்ச்சியாக, மிக நிறைவான,சிந்திக்க வைக்கும் இந்த திரையிடலையும்.,விவாதத்தையும் நடத்தியது.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (3-Jan-16, 9:55 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : sanjaaram
பார்வை : 186

மேலே