அரசியல்

ஒரு கிராமத்தில் ஒரு கிழவி இருந்தாள்.

அவளுக்கு திடீரென்று அந்த கிராமத்து மக்கள் மீது கோபம் வந்தது. அவர்களிடம் அவள், “இனிமேல் எல்லோரும் இருட்டிலேயே அலைந்து திரிவீர்களாக” என்று சாபம் இட்டாள்.

கிராமத்து மக்கள் அவளிடம் ஏன் இப்படி கூறுகிறாய் என்று கேட்டனர். அதற்கு அவள், “ நான் என் சேவலை எடுத்துக் கொண்டு பக்கத்து கிராமத்தில் குடியேறப் போகிறேன், என் சேவல் கூவாவிட்டால் இந்த கிராமத்தில் சூரியன் உதிக்காது. இதுவரை என் சேவல் கூவியதால் தான் சூரியன் உதித்தது. சூரியன் உதிக்காவிட்டால் எல்லோரும் இருட்டில் தான் இருப்பீர்கள்” என்று விளக்கம் அளித்தாள்.

சேவல்கள் கூவாத இடத்திலும் சூரியன் உதிக்கிறது. சேவல் கூவுவதால் சூரியன் உதிப்பதில்லை. சூரியன் உதிப்பதால் தான் சேவல்கள் கூவுகின்றன என்பதை அந்த கிழவி அறியவில்லை.

அதற்குப்பின்
அந்த கிழவி தன் சேவலுடன் பக்கத்து கிராமத்தில் குடியேறிவிட்டாள். தினமும் காலையில் சேவல் கூவுகிறது, சூரியன் உதிக்கிறது. தன் சேவலால் தான் இங்கு சூரியன் உதிக்கிறது, பழைய கிராமத்தில் எல்லோரும் இருட்டில் இருப்பார்கள் என்று எண்ணி சந்தோசப்பட்டாள்.

மனித அகங்காரம் தன்னால் தான் உலகில் எல்லாம் நடக்கிறது என்று இப்படித் தான் சந்தோசப்படும். ஆனால் உண்மையில் நம் இயக்கத்திற்கு காரணமான இறைத்தன்மையை மறந்து விடும். இதுவே அறியாமை ஆகும

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (3-Jan-16, 12:00 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : arasiyal
பார்வை : 148

மேலே