எனது கவிதை
எனது நேசத் தழுவல்களை
தடுத்து தவற விட்டு
என்னுடன் கால நேரம்
பாராமல் கொஞ்சி விளையாடி
உணர்ச்சிக் குழம்பாய்
உள்ளுக்குள் ஊடுருவி
உயரிய இடங்களை
உற்று நோக்கி, தேடி, ஓடி,
உச்சியில் இருந்து குதித்து
சாரமற்ற இடங்களை
சீயென ஒதுக்கித் தள்ளி
மெல்ல இறங்கி,
பிராண்டி, கீ்றிச் சென்று
நினைவுச் சாம்பலை
உதிர்த்த வண்ணம்
தனிமையை
ஓசை செய்யாமல் கடந்து
இனிய வார்த்தைகட்கு
இடையில் புகுந்து
பஞ்சு பாதங்கள் கொண்ட
பிஞ்சு பூனையைப் போல
எனது கவிதை
என்னைச் சீண்டி
பின்னர் சீரமைக்கப்பட்டு
எனக்குள்ளே
விதைக்கப்படுகிறது.