ஞானமும் ஞானியும்

பொருள்களுக்கிடையே அல்லது விஷயங்களுக்கிடையே உள்ள தொடர்புகளை அறிந்துகொள்வதும் அறிவோடு சேர்ந்து உள்ளுணர்வின் மூலம் முடிவுக்கு வருவதும் ஞானம் எனப்படும் .ஞானத்தின் உயர்நிலைகளில் ஒன்றைப் பார்க்கும்போதே அல்லது நினைக்கும்போதே அதைப் பற்றிய உண்மைகள் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

ஞானம் வளர்த்துக் கொள்ளக்கூடியதுதான் .அறிந்துகொள்ளல் ,அறிந்ததை நினைவில் கொள்ளல் ,அதே போன்ற வேறொன்றைத் தொடர்புப்படுத்திப் பார்த்தல் ,அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருதல் என்பவை ஞானத்தின் படிகளாகும் .

மேற்சொன்ன படிகளைக் கடந்துவர முதலில் அதிகக் காலம் பிடிக்கும் .ஒன்றைப் பற்றிப் புரிந்துகொள்ளவே பலநாட்கள் பல மாதங்கள் கூட ஆகும் .இப்படி ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்து,தெளிந்து முடிவுக்கு வந்தவரே ஞானி ஆவார் .

இவர் பல பொருள்களுக்கு ஒரு சூத்திரம் வைத்திருப்பார்.பலவற்றைப் புரிந்துகொள்ள குறுகிய சில வழிமுறைகளையும் கொண்டிருக்கக்கூடும் .
ஞானி பல சமயங்களில் பொதுப் பண்புகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட புரிதலை அடையும் வழியைத் தெரிந்திருப்பார்.நாளடைவில் அது அவர் இயல்பாகவே மாறிவிடும்.

பேச வேண்டிய இடத்தில் சுருக்கமாகப் பேசுவதும் ,பேசாத இடத்தில் மௌனம் காப்பதும் ஞானியின் இயல்பு .

நாம் பெரிய விளக்கத்தை எதிர்பார்க்கும்போது ஞானி ஒரு வார்த்தையில் பதிலளிக்கக்கூடும் .அல்லது மௌனம் காக்கலாம் .இது சாமானிய மனிதருக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம் .புரிந்துகொள்ள முடியாமலும் போகலாம் .ஆனால் ஞானி தேவையானதை மட்டுமே பேசுவார் அல்லது செய்வார் .

மேலே சொன்னது முயற்சியின் மூலம் ஞானத்தை அடையும் வழியாகும்.இதை அறிவின் மூலம் அடையும் ஞானம் ,சுருக்கமாக "அறிஞானம்" எனலாம் .அதற்கு மிகுந்த முயற்சியும் உழைப்பும் தேவைப்படும் .இதில் அறிவைப் பயன்படுத்துவது அதிகமாக இருக்கும்,அறிவின் உச்ச நிலையில் தெய்வீகத் தொடர்பு ஏற்படும் .

இதன்றி,இறைஅருளால்ஞானம்அடைவோர்க்கு
இவ்விதிகளோவழிமுறைகளோ பொருந்தவேண்டிய அவசியம் இல்லை.

குணத்திலும் செயல்களிலும் தூய்மையும் உண்மையும் கொண்ட ஒருசிலருக்கு இறைவனே குருவாக இருந்து ஞானத்தை அருள்கிறான் .அவர்களுக்கு உள்ளே இருந்து உள்ளுணர்வாக செயல்படுகிறான் .அதைக் கொண்டு அவர்கள் தங்கள் செயல் ,வாக்கு இவற்றை வெளிப்படுத்த இயலும் .

இத்தகைய ஞானிகளுக்குப் பஞ்ச பூதங்களும் துணையாக நிற்கின்றன .தாங்கள் ஒத்துழைப்பதோடு,தேவையான செய்திகளை அவ்வப்போது குறிப்பால் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன .அதனால் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை .எல்லாம் குறித்தபடி தானாகவே நடக்கும் .நடக்கவேண்டியதே நடக்கும். இத்தகைய ஞானம் இறைவனால் வழங்கப்படும் ஞானம் அல்லது "இறைஞானம்" எனலாம் .

முயற்சியால் ஞானம் கைவரப்பெற்றாலும் இறையருளால் ஞானம் கிடைத்தாலும் வழிமுறைகள்தான் வேறு வேறே தவிர ,செயல்பாடுகளில் வேறுபாடு காணப்படுவதில்லை .முன்னதில் அறிவாக இருந்து வழிநடத்துவதும் ,பின்னதில் தானே அறிவை வழங்கி உடனிருத்தலும் இறைவனே .

ஞானம் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ இறைவன் வழங்குவது .ஞானி என்பவன் இறைவன் எண்ணப்படி செயல்படும் ஒரு கருவி .ஞானிக்கு இறைவனின் ஒப்புதல் இருக்க வேண்டும். அப்போதுதான் ஞானத்தின் உச்ச நிலையை அடையமுடியும் .ஞானத்தின் உச்சத்திலிருந்து இறைநிலையை அடைவதும் சாத்தியமாகும் .

எழுதியவர் : மதிபாலன் (6-Jan-16, 12:25 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 223

சிறந்த கட்டுரைகள்

மேலே