வெள்ளிமலைசிறுமலை

சதுரகிரி,கொல்லிமலை,கோவையில் உள்ள வெள்ளிமலை அளவுக்கு சிறுமலையில் உள்ள வெள்ளிமலை சிவன் கோவில் ஆன்மீக மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகமாக அறியப்படாத அமைதியான இடமாகும்.வெள்ளிமலைக்கு நாங்கள் சென்ற போது அடிவாரத்தில் உள்ள அகஸ்திய ஆசிரமம் சென்று லிங்கத்துக்குள் பார்வதி அம்மனை தரிசித்துவிட்டு மேலே ஏற தொடங்கினோம் .
அடிவாரத்தில் இருந்து பார்க்கும் போதே மலை லிங்க வடிவத்தில் காட்சியளித்து ஏறி பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.இம்மலையில் படிகள் அதிகம் இல்லாது செம்மண் பாதையாக வளைந்து வளைந்து செல்கிறது .மேலே ஏற ஏற படிகள் சில இடங்களில் உயரமாக உள்ளது .நாங்கள் காலை 11 மணிக்கு சென்றதால் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தாலும் உயரத்தில் இருந்து பார்க்க சுற்றிலும் காணப்படும் பசுமையும் காற்றும் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது.
மலை ஏறும் வழியில் கருப்பு கோவில் ஒன்று உள்ளது.அமைதியான இம்மலையில் மேலே எங்கும் கடைகள் இல்லாததால் நாங்கள் எங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை கையோடு கொண்டு சென்றிருந்தோம்.எங்கும் பசுமை போர்த்திய இம்மலை ஏறுவதற்கு சற்று கடினமாக இருந்தாலும் மேலே சிவ தரிசனம் செய்யும் போது அனைத்து களைப்பும் பறந்து விடுகிறது.
வெள்ளிமலை மேலே ஏறியதும் முதலில் வேல் ஊன்றிய மேடையும் மற்றும் ஒரு கோவிலும் காட்சியளிக்கிறது.நடுவில் மரத்தடி மேடையில் சிவலிங்க தரிசனம் கிடைக்கிறது.இங்கிருந்து சுற்றிலும் மலையும் கீழே சிறுமலையில் உள்ள வீடுகளும் காணக்கூடியதாக இருக்கிறது .மலையில் ஓம் என்ற மந்திரம் காற்றில் கலந்து ஒலித்து கொண்டிருகிறது.அத்துடன் இணைந்து காற்றில் ஆடும் மணியின் ஓசையும் சேர்ந்து நமக்கு வாழ்வில் மறக்க முடியாத ஆன்மீக அதிர்வுகளை உண்டாக்கும்.
ஆன்மீக பயணிகளும்,அமைதி விரும்பிகளும் கட்டாயம் சென்று வர வேண்டிய தலமாக சிறுமலை வெள்ளிமலை அமைந்துள்ளது.

எழுதியவர் : நேத்ரா (6-Jan-16, 3:41 pm)
சேர்த்தது : நேத்ரா
பார்வை : 141

சிறந்த கட்டுரைகள்

மேலே