காட்சிப் பிழைகள் - 27 - சொ சாந்தி
காட்சிப் பிழைகள் - 27
இளம் விதவையின் சோகம் - பாடல்
====================================
தேயும் வளரும் வெண்ணிலவில் ஒளியும் இருளும் உண்டு
தொலைத்துவிட்டேன் நிலவினையே வெளிச்சம் எனக்கு என்று?
தூணாக நீயிருந்தாய் சரிந்ததில்லை என் கோட்டை
சாய்ந்ததனால் சரிந்துவிட்டேன் விளைத்தவர் யார் கேட்டை.?
தனி மரத்தில்கனி பறிக்க எண்ணி சதியில் உறவினம்
தட்டிக்கேட்க ஒருவரில்லை துன்பம் தினம்...தினம்... !
வலை வீசி வீசித் திரியுதய்யோ வேடுவக் கூட்டம்
நான் சிக்கவில்லை சிக்கிக்கொண்டேன் துன்பத்தில் மட்டும்..!
விட்டுப்பிரிந்த நாள்முதலாய் அணைத்ததென்னை துன்பம்
பட்டுப்போன வாழ்வினிலே துளிர்விடுமோ இன்பம் ?
அந்தநாளின் நினைவு நெஞ்சில் மோதி நிற்குமலைகள்
வெந்து இன்னும் தணியவில்லை கொதிக்குது கண்உலைகள்.!
விழியிருந்தும் காட்சியில்லை கண்ணீர் படலங்கள்
விதி மேடையிட்டு ஆடிடுதே துன்ப நடனங்கள்..!
வடமிழந்த தேரும் வீதி ஊர்வலம் வருமா..?
தடமறியா பாதை பயணம் நன்மைகள் தருமா?
துடுப்பில்லா தோணியில் என் பயணங்கள் வீணே
அடுக்கடுக்காய் சோதனைகள் அவதியில் நானே..!
சொந்தபந்தம் என்றதெல்லாம் நீயிருந்தவரை மட்டும்
நிந்தனையில் வாட்டிடுதே எனக்கு விடிவு என்று கிட்டும்..?
அன்று நீ விரித்த பாயில் மணக்கும் முல்லை சிரித்தது
இன்று படுக்கையாக நெருஞ்சி முள்ளை யார் விரித்தது.?
உன்னை இழந்த எந்தன் வாழ்வு ஊசலாடுது
தவிக்கவிட்டு பறந்ததென்ன உன்னை என்று சேர்வது..?
மாண்ட உயிரை மீண்டும் தரும் மரண தேவன் உண்டோ?
தொலைந்த இன்பம் மீட்டுத் தரும் காவலர்தான் உண்டோ?
விண்ணுலகம் செல்லும் வழி நானும் தேடுவேன்
இந்த மண்ணைவிட்டு உன்னை நாடி விரைவில் கூடுவேன்..!!
________________________________________________________
******************************************************************************************
*********
அவன்
"""""""""
இன்னும் அவளை மறக்கவில்லையா??
அம்மா கேட்கிறாள்
மறந்துவிட்டதாய்
மறக்காமல் கூறிவிடுகிறேன்..!!
---------------------------------------------------------------------------
நம் திருமணம் என்றாய்
மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினேன்..!!
உன் திருமணம் என்கிறாய்
மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்குகிறது..!!
---------------------------------------------------------------------------
கண்ணீரை தீர்த்துவிடாதே
மிச்சம் வைத்துக்கொள்
இன்றுவரை நம் காதல்
நமக்கு மட்டும்தான் தெரிந்திருக்கிறது..!!
---------------------------------------------------------------------------
அவளுக்கு
பால் போன்ற மனது
காதலுக்கு அவள்
பால் ஊற்றியபோது புரிந்தது..!!
---------------------------------------------------------------------------
அவள் இரண்டு சிறைகளில்
சிக்கியிருக்கிறாள்
என் இதயத்திலும்
அவள் இல்லத்திலும்..!!
---------------------------------------------------------------------------
நல்ல குடிமகனாக இருந்தேன்
அவள் என்னை நேசித்தவரை..!!
நல்ல குடிமகனாகத்தான் இருக்கிறேன்
அவள் என்னை விட்டுப் பிரிந்த பின்பும்...!!
---------------------------------------------------------------------------
அவளைக் காண
தடை விதித்தவர்கள்
காண அழைத்திருக்கிறார்கள்
கடைசியாய்...!!
அவளின் ஆன்மா
சாந்தி அடைய வேண்டுமாம்..!!
-------------------------------------------------------------------------
அன்பாக அளித்த பரிசு பொருட்கள்
அனைத்தையும் திருப்பியிருந்தாள் ..!
அதில் சேர்ந்தே வந்திருந்தது
அவளுக்கு நான் அளித்திராத
கண்ணீரும் கவலைகளும்...!!
------------------------------------------------------------------------
அவர்கள் ஜெபிக்கும்
சிலுவையில் அறைந்திருந்தார்கள்
என் திருநீற்றுக் காதலை
திருநீராகிப் போனாள் என்னவள்...!!
____________________________________________
***********************************************************************
*********
அவள்
"""""""""
மனதினை மூடி மறைத்தேன்
காதல் காலாவதியாகிவிட்டது
மனம் திறந்தவளோடு அவன்
காலாவதியாகிக் கொண்டிருக்கிறேன் நான் ..!!
---------------------------------------------------------------------------
இருண்டே கிடக்கிறது
என் பகலும் வெளிச்சங்கள் இன்றி
உறங்குவதில்லை
இரவிலும் உன் நினைவுகள்..!!
---------------------------------------------------------------------------
தலை தெறிக்க ஓடிய
உன்னுடனான என் நேரங்கள்
நத்தையாய் கூட
ஊர்ந்து செல்லவில்லை
தனிமையில் நான்..!!
---------------------------------------------------------------------------
"நம் காதல்
திருமணத்தில் முடியும்"
நீ கூறியது உண்மைதான்
முடிந்துவிட்டது
உன் திருமணத்தில்..!!
-------------------------------------------------------------------------
உன் நினைவுகள்
ஊற்றாய் பெருக்கெடுத்து
வழியும்போதெல்லாம்
காட்டிக்கொடுத்துவிடுகிறது
நீ என்னுள் வியாபித்திருப்பதை..!!
உன் பெயர் சொல்லி
யாரையாவது அழைத்துவிடுகிறேன்..!
கடிபடுகிறது நாக்கு
அடிக்கடி..!!
----------------------------------------------------------------------
முனிவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன்
சாபங்கள் பெறவேண்டும்
"அவனை மறக்கக் கடவது" என்று...!
-------------------------------------------------------------------------
மிச்சம் வைக்காமல்
மொத்தமாய் மொய் எழுதியிருந்தேன்
அவன் திருமணத்தில்
இன்று மனசாட்சி இன்றி கேட்கிறான்
"நலமா...."??
-------------------------------------------------------------------------
அவன் நினைவாக
பரிசளித்த கணையாழி
விரலுக்கு கச்சிதமாகத்தான் இருந்தது..
நாளடைவில் பெரிதாகி.. பெரிதாகி..
விரலை விட்டு நழுவி
தொலைந்தே போய்விட்டது
அவனைப் போலவே..!!
-------------------------------------------------------------------------
என் நினைவுக்குதிரையில்
எந்நேரமும் சவாரி செய்கிறான்
எவ்வளவு வேகம் என்றாலும்
இருந்த இடத்தைவிட்டு
நகர்ந்ததே இல்லை..!!
----------------------------------------------------------------------
ஏசுகிறார்கள்
என்னை மறதிக்காரி என்று..!!
அவர்களிடத்தில்
எப்படிக் கூறுவேன்..??
என் நினைவுகளின்
மொத்த குத்தகைக்காரன்
நீ என்பதை.. !!
--------------------------------------------------------------------
உயிர்க்கொல்லி விடங்களின் பட்டியலில்
இதையும் சேர்த்துவிடுங்கள்
“என்னை நீ மறந்துவிடு...”
------------------------------------------------------------------
உன் காதல் பயிற்சிக் கூடத்தில்
சேர்ந்த பிறகுதான்
என் உடலின் எடை
கணிசமாக குறைந்தது
துன்ப பளுவினை
தூக்கி.. தூக்கி..!!
சேர்ந்த நாளில்
நீ ஏன் கூறவில்லை
ஆரோக்கியமும் குறையுமென்று..?
----------------------------------------------------------------
என் கல்லறையில்
தோற்றம் - மறைவு
காலங்களை எழுதும் இடத்தில்
என் காதல் சரித்திரத்தை
எழுதி வையுங்கள்..
காதல் தோல்வி கல்லறைகளின்
வளர்ச்சி குறைந்து போகட்டும்..!
________________________________________
*****************************************************************
*************
அவர்கள்
"""""""""""""
இடுக்கண் வருங்கால் நகுக..
==========================
"நல்ல நேரம் முடிவதற்குள்
தாலியை கட்டுங்கள்"
புரோகிதர் தீர்க்கதரிசி தான்.
முடிந்துதான் போகிறது
நல்லநேரம்
தாலி கட்டி முடிந்தவுடன்..!!
------------------------------------------------------------
நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான்
பாட ஆரம்பித்தோம்
காதலுக்கான வாழ்த்துப் பாடலை..
நான் வாழ்த்து பாடிக்கொண்டே இருக்கிறேன்
அவன் தேசியகீதமே பாடி முடித்துவிட்டிருந்தான்
அவன் வேறு எங்கோ
வாழ்த்து பாடவேண்டுமாம்..!!
----------------------------------------------------------------------------
அவன் கடனை
பட்டுவாடா செய்யும் வேளைகளில் எல்லாம்
வெட்கம் இடைவேளை விட்டு விடுகிறது..!!
அவன் சாதுர்யமானவன்
நேரத்தை வீணடிப்பதில்லை
என் வெட்க இடைவேளைகளின் போதெல்லாம்
சூடு வைத்த ஆட்டோமீட்டராய்
எகிறிவிடுகிறது அவன் கணக்கு
"ம்ம்ம்" என்கிற நீட்டல் கூட்டல்களில்.!
அவன் கணக்கு புத்தகத்தில்
நான் ஆயுள் கடன்(ங்)காரி..!!
_____________________________________________
************************************************************************