வெந்தழலில் வாட்டினாள்

வெந்தழலில் வாட்டினாள்!

இளமைத் தோட்டத்தின் வாசமல ரானாள்!
எழில்பூங்கொத்தின் இன்சுவை தேனானாள்!
வளமைத் தந்திடும் பொன் சுரங்கமானாள்
வற்றாத ஜீவநதிகளாய் என்னுள் ஓடினாள்!

கனவில் நனவில் தூக்கம் தொலைத்தாள்!
கன்னியவள் என்றன் கன்னி தமிழானாள்
உணவிடும் வட்டிலில் எழில்முகம் காட்டினாள்!
உதட்டோர புன்னகையில் உயிரினைப் பறித்தாள்!

கயல்விழி அதனில் கண்ஜாடைக் காட்டினாள்!
காதலென்று சொல்லி களிப்புமிக ஊட்டினாள்!
வியந்து நிற்கையில் வளையோசை எழுப்பினாள்
விலகி எனையேன் வெந்தழலில் வாட்டினாள்!

--- கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (7-Jan-16, 5:59 pm)
பார்வை : 108

மேலே