எந்தன் உயிரே அம்மா
எந்தன் உயிரே அம்மா,..
உன்னை கருவாய் சுமக்கிறேன்
எந்தன் இதயக் கருவறையில்....
பெற்றெடுக்க நீ பட்ட
பெரும் பாடு சொல்லவே
வார்த்தையின்றி மௌனிக்க,
உன் மட்டற்ற புகழ் பாட
எங்கம்மா நான் சேர்ப்பேன்
வார்த்தைகள் இங்கே..!
செல்வங்கள் ஐந்துனக்கு
தந்தவன் அவன் தான்..
பறித்திட்டான் உனக்கான
பெரும் துணையை அடியோடு...
வேரறுந்த மரம் போலே
வீழ்ந்திட்ட கணமதிலே
நீ கொண்ட துயரமதை
பார் கூட தாங்காது..!
தலை மேல் சரிந்த பேரிடியில்
தடம் நாம் தொலைத்து தடுமாற,
அன்றெமக்காய் நீ கொண்டாய்
புது அவதாரம் அவனியதில்...
புன்னகை கொண்டு பூச்சிட்டே
கண்ணீரதை நீயும் மறைத்திட்டாய்,..
தாயானாய், தந்தையானாய்
தரணியில் நாம் ஊன்ற வேரானாய்!..
யாருதவியும் யாசிக்காமல்
எதிர்ப்புக்கள் எதிர்கொண்டாய்..
உலகென்னும் போர்க்களத்தில்
தனியாளாய் போர் தொடுத்தாய்...
அரவணைத்த உன் கைகள்
ந(ம்)மை சிலவேளை அடித்திட்டன,
அறிவேன் அம்மா - அவை தானே
வெற்றிக்கு அடித்தளமிட்டன..!
அன்பென்ற கரு தான் இங்கே
வளர்ந்திட்ட பின்னால்
'அம்மா' எனும் உருவாய்
எந்தன் கண்முன்னே...
குறையேதும் காணவில்லை,
உந்தன் நிறைவான அன்பதிலே...
வாழ் நாளெல்லாம் போதவில்லை
தாயே உன் புகழ் பாடி..!
சுயநலமரியா(த) உன் இதயம்
நிறைவான இன்பம் பெற்று,
கருணை உன் முகமதில்
சோக சாயல்கள் படிந்திடாது,
அன்பு மட்டும் பொழியும் உன் விழிகள்
ஒரு நொடியேனும் கலங்காதிருக்க,
உன் பூவுதட்டில் பூத்திருக்கும்
புன்னகை என்றுமே வாடாதிருக்க,
உழைப்பேன் அம்மா - எந்தன்
உயிர்மூச்சு உள்ளவரை!.........

