கர்நாடக சங்கீதம்

கருநாடக இசை அல்லது கர்நாடக சங்கீதம் தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது.

வரலாற்று பின்னணி

தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர்.

தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.

கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்களிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன.

நாதம்

செவிக்கு இனிமை கொடுக்கும் த்வனி நாதம் எனப்படும். சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஓலி இரைச்சல் எனப்படுகிறது. நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது. நாதத்தில் இரு வகை உண்டு அவையாவன;

ஆகதநாதம் - மனித முயற்சியினால் உண்டாக்கப்படும் நாதம் ஆகத நாதம் எனப்படும்.
அநாகதநாதம் - மனித முயற்சி இல்லாமல் இயற்கையாக உண்டாகும் நாதம் அநாகத நாதம் எனப்படும்.

சுருதி

பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலியே சுருதி எனப்படும். இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும்.நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் அதாவது சுருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானம் என்பதால் சுருதி மாதா என அழைக்கப்படும். சுருதி இரண்டு வகைப்படும், அவையாவன...

பஞ்சம சுருதி - மத்திமஸ்தாயி ஸட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது பஞ்சம சுருதி எனப்படும். ஸபஸ் எனப் பாடுவது.

மத்திம சுருதி - மத்திமஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடப்படுவது மத்திம சுருதி எனப்படும். ஸமஸ் எனப் பாடுவது.

சாதாரண உருப்படிகள் யாவும் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்கள் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன.அனேகமான நாட்டார் பாடல்கள் மத்திம சுருதியில் தான் பாடப்படுகிறது. சுருதி சேர்க்கப்படும் ஸ்வரங்கள் ஸபஸ் (ஸா பாஸாபாஸா).

ஸ்வரம்

இயற்கையாக ரஞ்சனையை, (இனிமையைக்) கொடுக்கும் தொனி ஸ்வரம் எனப்படும். சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு ஆகும். இவை சப்த ஸ்வரங்கள் எனப்படும். தமிழிசையில் ஸ்வரத்திற்கு கோவை எனப் பெயர் உண்டு. ஏழு ஸ்வரங்களும் அவற்றின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு அமையும்.

சப்த ஸ்வரங்கள் வடமொழிப் பெயர்கள் தமிழ் பெயர்கள்
ஸ ஷட்ஜம் குரல்
ரி ரிஷபம் துத்தம்
க காந்தாரம் கைக்கிளை
ம மத்யமம் உழை
ப பஞ்சமம் இளி
த தைவதம் விளரி
நி நிஷாதம் தாரம்

தாளம்

கையினாலாவது கருவியினாலாவது தட்டுதல் தாளம் எனப்படும். இது பாட்டை ஒரே சீராக நடத்திச்செல்கிறது. இது எமக்குத் தந்தை போன்றது. அதனால் தான் இசையில் சுருதி மாதா எனவும் லயம் பிதா எனவும் அழைக்கப்படுகிறது. லகு, துருதம், அனுதுருதம் என மூன்று அங்கங்களாக விரிவு பெறுகிறது.

லயம்

பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை எனவே இது பிதா எனப்படுகிறது. லயம் மூன்று வகைப்படும்.அவையாவன,

விளம்பித லயம்
மத்திம லயம்
துரித லயம்

ஆவர்த்தம்

ஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும். இது ஆவர்த்தனம், தாளவட்டம் என்றும் அழைக்கப்படும். இதன் குறியீடு // உதாரணமாக ஆதி தாளத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லகுவையும் 2 துருதங்களையும் போட்டு முடித்தால் ஒரு ஆவர்த்தனம் எனப்படும்.

தாளம்

தாளங்கள் கர்நாடக இசையில் கால அளவுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஏழு அடிப்படையான தாளங்களும், அவற்றிலிருந்து உருவாகும் நூற்றுக்கு மேற்பட்ட தாளங்களும் உள்ளன.

__________________________________________________
நன்றி: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (10-Jan-16, 8:37 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 105

மேலே