தை பொங்கல் மகத்துவம்

சூரியனுக்கு தைமாதம் முதல் தேதியில் மகர சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவாக அன்றைய தினம் ஆதவனை வழிபடுகிறோம்; சூரிய பூஜை செய்கிறோம். பொங்கல் திருநாளில் சூரியனை வழிபடுவதால் வாழ்நாள் முழுவதும் வசந்தம் வீசும் என்பது ஐதீகம்..!

தினந்தோறும் காலை எழுந்தவுடன்

“ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா‘

என்று சொல்லி சூரியனை வணங்குவது சிறப்புதரும்..!

பெருமைகள் சூழ்ந்த சூரியனை சிவசூரியன் என்றும், சூரிய நாராயணன் என்றும் போற்றுகிறோம். சக்தி வடிவத்தில் முதலிடத்தைப் பெறுபவர் சூரியன்.

சூரிய பகவான் தனுர் ராசி யிலிருந்து மகர ராசிக்குச் செல்லும் நாள் மகர சங்கராந்தி என்று போற்றப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு சிறப்பிக்கப்படுவது போல், தானம், தர்மம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்யவும் புனிதமான நாள் ..!

சூரிய குலத்தில் ஸ்ரீராமனாக அவதரித்து சூரியனை வழிபட்ட மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் தன் மகன் சாம்பனுக்கு தான் அளித்த சாபம் நீங்க, மகனிடம் சூரிய பூஜை செய்யச் சொன்னார். அவ்வாறு சாம்பன் பூஜித்த நாள் பொங்கல் திருநாள் ஆகும்.

பிருகு முனிவரின் மகன் வைசம்பாயனர், தருமர், அகத்தியர் ஆகியோர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி சூரிய பகவானை வழிபட்டார்கள்

பொங்கல் திருநாள் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம்.

.புது அரிசியை புது பானையில் இட்டு சூரியனுக்கு நேரே வைத்து பொங்கல் பொங்குகிறோம்.. தை மாதத்தில்தான் சூரிய பொங்கல் என்கிறோம். மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று குலதெய்வத்தையும் வழிபடுவோம். வள்ளுவனையும் வணங்குகிறோம்.

சமய சார்பற்ற முறையில் நாம் , திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடத் தொடங்கியுள்ளோம். 1978 முதல் திருவள்ளுவர் திருநாளுக்கு அடுத்த நாளை உழவர் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே கிடையாது. வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. “நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே‘ என்பதை வேதம் கூறுகிறது.

தை அமாவாசைக்குப்பின் வரும் சப்தமி நாளன்று சூரியனின் சக்தி அதிகமாக இருப்பதால், இதுவரை சூரிய நமஸ்காரம் (வழிபாடு) முறையாகச் செய்யாதவர்கள், அன்று முறைப்படி தொடர்ந்து கடைப்பிடித்தால் உடல் நலம் வளம் பெறும்; கண்ணொளி பிரகாசிக்கும்.

உழவுத் தொழிலுக்கு இன்றியமையாத தேவை மழை சிறப்பை உணர்ந்தே திருவள்ளுவர், கடவுளைப் போற்றும் அதிகாரத்திற்கு அடுத்து, மழையின் சிறப்பைக் கூறும் பகுதியை அமைத்துள்ளார்.

“வான்மழையால் தான் வையகத்தில் உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. மழை பெய்யாமல் போகுமானால், உலகைப் பசி துன்புறுத்தும்; மழை வளம் குன்றுமானால், உழவர்கள் உழவுத் தொழிலைச் செய்ய மாட்டார்கள்” என்று பலவாறாக மழையின் சிறப்பினைத் திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார்.

இதனை நன்குணர்ந்த முத்தமிழ் வித்தகரான இளங் கோவடிகள்,

“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்”

என்பதனோடு அமையாது.

“மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!”

என்று மழையையும் வாழ்த்திப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்..!

பொங்கல் விழா முப்பெரும் திருநாள் விழாக்களாக தமிழருடைய வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெற் றுள்ளது.

சூரியனின் ஒற்றைச் சக்கர தேரினை இழுக்கும் ஏழு குதிரைகள் சூரியனின் ஏழு நிறங்களைக் குறிக்கின்றன.

சூரியன் பயணம் செய்வதுபோல் தெரிவதற்கு பூமியின் சுழற்சியே காரணம் என்று விஞ்ஞானம் சொல்லுவதை வெகு காலத்திற்கு முன்னரே நம் முனிவர்கள் அறிந்துள்ளனர். “உண்மையில் சூரியன் உதிப்பதும் இல்லை; மறைவதும் இல்லை‘ என்று ஞானநூல் சொல்கிறது.

சூரியன் வேத வடிவமானவன் என்று ஞானநூல்கள் சொல்கின்றன. காலை வேளையில் ரிக் வேதமாகவும், நண்பகலில் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாமவேத சொரூபமாகவும் திகழ்கிறான்.

தட்சிணாயனத்தின் ஆறு மாதங்களில் பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் பல நோய்கள் , துன்பங்கள் உத்திராயண காலத் துவக்கத்தில் இறைவன் அருளால் நீங்குவ தால், தை மாதம் முதல் தேதி சூரிய பகவானுக்கு

ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தை பிறந்தால் வழி பிறக்கும்’, “தை மழை நெய் மழை’ போன்ற பழமொழிகள் தமிழ் மக்கள் நாவில் பயின்று வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கலன்று உழவுக்குப் பயன்படும் காளைகளுக்கும் பால் கொடுத்து உதவும் பசுக்களுக்கும் விழா எடுத்து வழிபடும். மாட்டுப் பொங்கலன்று “காணுப் பிடி’ என்று சொல்லப்படும் காக்கைகளை வழிபடும் நிகழ்ச்சி குழந்தைகள், பெண்கள் பொங்கல் கட்டிக்கொண்டு காக்கைக்குச் சோறு வைக்கப் போவது வழக்கத்தில் உள்ளது.

சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.

தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள்.

திறந்தவெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங் களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை “கா…கா…‘ என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வந்து தன் சுற்றத்தை “கா… கா…‘ என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைத்து .வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.

காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக் கடலை, வாழைப் பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.

இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.

மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை.

காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். எனவே, மாட்டுப் பொங்கலன்று “காணுப்பிடி’ என்ற காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்!

இயற்கையோடு இயைந்து இயற்கைக்கு உளப்பூர்வ நன்றி பாராட்டி- உழைப்பின் உன்னதத்தைப் போற்றுவது தமிழர் கொண்டாடும் தைப் பொங்கல் விழா.உவகை பொங்கும் விழா.

தமிழருடைய பண்பாட்டின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் கலை விழாவாகப் போற்றப்படும் சிறப்பை அடைந்துள்ளது

எழுதியவர் : ராஜராஜேஸ்வரி ஜெகமணி ஆன்ம (11-Jan-16, 3:19 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 6662

மேலே