எங்கள் மண்ணில்

பச்சை வயல்களும் பண்பாடாய் திகழும்
அரிவாள் பட்ட(அரிதாள்)வயல்களும்
இரேகை சித்திரமாய் புலரும்
எத்தனை உழவர்கள் உதிரமும் ,உடல்களும்
உரமாய்கிடக்கிறது
அத்தனை பண்பாடும் எங்களுக்குள் அடங்கியது
தொன்று தொட்டு கட்டிக்காத்த பண்பாட்டை
இன்று வந்த நாம் விட்டுச்செல்லலாகுமோ ?
கதிரவனைக் கைதொழுது
நந்தியை கடவுளாய் வணங்கி
புதிரெடுத்தலை விழாவாகக்கொண்டாடி
பட்டு வேட்டிகட்டி பாட்டன் பூட்டன் பண்பாட்டை
சுட்டியை பேசிடலாமா?
பல்லி விழுந்தால் பஞ்சாங்கம்
பாதகம் ,சாதகம் சொல்லுதையா
ஏர் பூட்டி உழுது நாங்கள்
பயிர் விதைகள் செய்தோமையா
உடல் வருத்தி ஊதியம் பெற்றோம்
நவீனத்துவம் வந்து நாசம் தனை தொட்டோம்
பாரம் பரிய பவனி
நாம் அறிந்த பூமி
மீன் வடிவான தேசம்
தான்தோன்றி அப்பனது பாசம்
பின் தள்ளப்பட்ட எங்கள் தேசம்
பின் நகராத எங்கள் கலாச்சாரம்
பிறப்பும் இறப்பும் சாத்திர சம்பிரதாயப்படி பின் பற்றி
மாற்றமில்லாத மனங்களைக்கொண்டு சேவை ஆற்றி
மூட நம்பிக்கை என்று மூடர் உரைத்தாலும்
மூதாதையர் விட்டுச்சென்ற தொடர் கதைகளிது
உடல் மண்ணில் புதையும் போதும்
உரமாய் புதையும் மண்ணில்
தேடல் புரிந்தவன் தெரிவிப்பான்
எம் புகழை விண்ணில்
எழுது கோல் சட்டைப்பையில்
உழுது கோல் தோள்ப்பட்டையில்
உழவன் மகன் ஊதாரியானால்
ஊரே மயானமாகும்
ஊதாரிகளும் உழவனானால்
ஊரே ஓரழகாகும்..