நீ சரிசெய்தால் நான் நேராவேன்
தண்ணீர் குளத்தை விட்டெடுத்தாய்- கொதி
எண்ணெய்க் கிணற்றில் ஏன்விடுத்தாய்?
தோற்கும் காதலை நான்வெறுத்தேன் - உன்னைத்
தொலைத்தபின் வாழ்வை நான்மறுத்தேன்!
வேள்விக் காதல் வளர்த்தேனே!-நீ
விரும்பா ததனால் இளைத்தேனே!!
தினைப்பயிர் எனவுனைப் பொறுத்தேனே! - நீ
வினைப்பயி ரென,எனை அறுத்தாயே!
அகடம் பேசும் கண்களினால் -நான் [அகடம்=தந்திரம்]
அனைத்தும் இழந்து புண்படவோ?
பகடைக் கண்கள் உருட்டுவையோ? -நான்
பலவும் இழக்க விரட்டுவையோ?
தண்ணீர்க் கடைகள் மறப்பேனே-உன்
தவிப்பில் தினமும் இறப்பேனே!
காடு,மே டெனவே திரிவேனோ? -நீ
கைவிட் டென் உயிர் பிரிவேனோ?
சகடம் முறிந்த தேரானேன் - நீ
சரிசெய் தால்தான் நேராவேன்!
=====