சாம்பல் மேல் எழும் நகரம்

கல்லூரியிலிருந்து திரும்பும்போது கீழ்த்தளத்தின் வீட்டின் முன் கூட்டம் கூடியிருந்தது. “எனக்கு அப்பவே தெரியும் இது நடக்கும்னுட்டு” என்ற உரத்த விமர்சனங்களும் ஆமோதிக்கும் குரல்களும் சற்றுத் தள்ளி நின்று தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தவர்களின் உரையாடலிலிருந்து தெறித்த சொற்களும் கேட்டன. இவளைப் பார்த்ததும் மேல் மாடிகளுக்குப் போகும் படிகளை விட்டு ஒதுங்கி இவள் கேள்வியை எதிர்பார்த்து நின்றனர்.

“என்ன விஷயம்?” என்றாள் மெல்ல.

எழுபது வயது ப்ரமோத் சோன்கர் முன்னால் வந்து கூறினார்.

“மேடம், ஊர்மிளாதாயி தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.”

தூக்கிவாரிப்போட்டது. காலையில்தான் கீழே இறங்கும்போது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த ஊர்மிளாவிடம் பேசியிருந்தாள். காய்கறி, ரொட்டி, பழம் ஏதாவது மாலை வரும்போது வாங்கிவர வேண்டுமா என்று கேட்டிருந்தாள். அப்படி அவரிடம் தினமும் கேட்பது வழக்கம். அவருக்கு வயது 75. தவிர 95 வயது மாமியாரைக் காப்பாற்றும் பொறுப்பு வேறு. மாமியார் அதிகம் நடமாட முடியாமல் படுக்கையில் இருந்தார். ஊர்மிளாவின் கணவர் இறந்த பிறகு கடந்த இருபது வருடங்களாக மாமியார் அவர் பொறுப்பு. ஒரே மகன் அமெரிக்காவில். மாமியாருடன் அவர் செய்யும் உரத்த உரையாடலுடன்தான் பலருக்கு அந்தக் குடியிருப்பில் பொழுது விடியும்.

“கிழவி, இருக்கியா போயிட்டியா? நீயா போவே? என் உயிரை வாங்கிட்டுதானே போவே?”

ஒரு முனகல் பதிலாக வரும்.

“சாய்தானே? இதோ சுடச்சுட. நில்லு, பாத்ரூம் கூட்டிட்டுப் போறேன்…”

“சரி, சாய் குடி. குடிக்கறபோது நீ போய்ச் சேர்ந்தால்தான் எனக்கு விடியும்.”

ஊர்மிளாவின் மாமியாருக்கு உடல்நலம் குன்றிப்போன கடந்த பதினைந்து ஆண்டுகளாக இதுதான் அந்த வீட்டின் உதயகானம். ஊர்மிளா டீச்சராக இருந்தபோது மாமியார்தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார் வயது காலத்தில் ஒன்றும் முடியவில்லை என்று முணுமுணுத்தபடி. ஊர்மிளா சிரித்துக்கொண்டே மாமியாருக்குப் பதில் சொல்வாள்: “ராவ்தே ஆயி. கஷாலா தக்ரார் கர்தாய்?” (இருக்கட்டும் ஆயி. எதற்கு இப்ப தகராறு?) பணிவோய்வு கிடைப்பதற்கு முன் கணவன் இறக்க, மகனும் வெளிநாடு போய்விட, ஊர்மிளாவுக்குக் கசந்து போயிற்று வாழ்க்கை. கிழவி அத்தனை வசவுகளுக்கும் பொறுமையாக இருப்பார். யாராவது வந்தால், “பாவம், அவளும்தான் என்ன செய்வாள்? நான் பாரமாயிட்டேன். கவனிச்சுக்க ஆளைப்போடுன்னு பேரன் சொல்லிட்டே இருக்கான். கேட்க மாட்டாள். ‘நீ வெளில போ; உன் இஷ்டப்படி இரு’ன்னா அதுவும் கேட்கிறது இல்ல. அவளுக்கும் பி.பி., சக்கரைன்னுட்டு ஏகப்பட்டது இருக்கு.” என்று ஊர்மிளாவுக்குப் பரிந்து பேசுவார்.

பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன் கிழவி குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார். இடுப்பெலும்பு விரிசல் கண்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக வேண்டி வந்தது. வீடு, ஆஸ்பத்திரி என்று ஓட்டம். காலையில்தான் வெகு நாட்களுக்குப் பின் வாசலில் ஊர்மிளாவைப் பார்த்தாள். ஏதாவது வாங்கிவர வேண்டுமா மாலையில் என்று கேட்டுவிட்டு கிழவியின் உடல்நிலை பற்றிக் கேட்டபோது, “கிழ உடம்பு. பார்க்கலாம்” என்றார்.
கட்டடத்தில் இருந்த யாரும் கிழவி உயிருடன் திரும்பி வருவாள் என்று நினைக்கவில்லை.

ப்ரமோத் சோன்கர் கூறினார், காலையில் பனிரெண்டு மணியளவுக்கு ஆஸ்பத்திரியிலிருந்து கூப்பிட்டார்களாம். கிழவி உயிர்தப்பிவிட்டார். வீட்டுக்குக் கூட்டிப்போகலாம். தினம் உடற்பயிற்சி செய்வித்துக் கவனித்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவு தர வேண்டும். சக்கர நாற்காலியில் பூங்காவில் உலாத்தக் கூட்டிப்போக வேண்டும். ஆஸ்பத்திரியிலிருந்து கூப்பிட்டபோது சோன்கர் கூட இருந்தார். கைபேசியை மேசை மேல் வைத்துவிட்டு இவரைப் பார்த்துச் சிரித்தார் ஊர்மிளா. கண்களில் கண்ணீர். கிழவியை மாலைவாக்கில் அழைத்துவர உதவுவதாகக் கூறிவிட்டு இவர் வந்துவிட்டார்.

மூன்று மணிக்குக் கூச்சல் கேட்டு, முதல் மாடியிலிருந்து இவரும் இவர் மனைவியும் வந்தால் முன்வாசலில் நெருப்பில் எரிந்துகொண்டிருந்தார். பக்கத்தில் மண்ணெண்ணெய் டப்பா. வீட்டுக்குள் செய்தால் வீடு பாழாகிவிடும் என்று வெளியே வந்து இதைச் செய்திருக்கிறார். வீட்டின் கதவு திறந்திருந்தது. உள்ளே நாலு வரி எழுதிய தாள் ஒன்று மகனின் முகவரி மற்றும் கைபேசி எண்களுடன்.

“களைத்துவிட்டேன். உடலில் வலுவில்லை கிழவியைப் பேண. நான் இருக்கும்வரை அவளை முதியோர் இல்லத்துக்கும் அனுப்ப முடியாது. மன்னிக்கவேண்டும்.”

1

பிரேதப்பரிசோதனைக்கு உடல் போயிருந்தது. மகனுக்குத் தகவல் தெரிவித்தாயிற்று.

மாடியேறி வந்தபோது ஊர்மிளாவின் தவிப்புப் புரிந்தது. அந்தக் கட்டடம் பழங்கட்டடம். அதை இடித்துவிட்டு ஆகாயத்தை உரசும் பன்மாடிக்கட்டடம் ஒன்றை எழுப்ப கட்டுமானத் தொழிலில் இருந்த பெரும் பண முதலாளிகளில் ஒருவர் முன்வந்திருந்தார். தற்போது இருப்பவர்கள் ஒரேயடியாக விற்றுவிட்டுப் போகலாம் அல்லது புதுக்கட்டடம் எழும்பும்வரை வேறு இடத்திற்குக் குடிபோகலாம். வாடகையைக் கட்டுமானத் தொழில் வியாபாரி தருவார். கூடுதலாக இன்னும் ஓர் அறையுள்ள வீடு கிடைக்கும் கட்டி முடித்த பிறகு. கட்டடத்தில் இருந்த எல்லோருக்குமே அறுபது எழுபது வயது இருக்கும். எப்போது கட்டி, எப்போது குடிவருவது? சாமானை எல்லாம் எடுத்துக்கொண்டு எங்கே வாடகையில் இருக்க முடியும்? 95 வயது இடுப்புடைந்த மாமியாருடன் ஊர்மிளா எங்கு குடிபோக முடியும் போவதானால்? அவள் மனத்தில் வேறு ஒரு நினைவும் வந்திருக்கலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன் மின்சார வண்டி ஓடும் இருப்புப்பாதைக்கு இரு பக்கங்களிலும் நெருக்கமாகக் கட்டப்பட்ட பழங்கால ஒற்றை அறைச் ‘சால்’ எனப்படும் கட்டடங்களில் இரண்டு க்ரான்ட் ரோட் ரயில் நிலையத்தின் அருகே ரயில் ஓடும் அதிர்வைத் தாங்காமல் திடீரென்று இடிந்துவிழுந்தன. அதில் ஒரு கட்டடத்தில் இருந்த ஊர்மிளாவின் அக்காவும் அண்ணாவும் தப்பிப் பிழைத்தனர். ஆனால் தரைமட்டமாகிவிட்ட கட்டடத்திலிடுந்து எதையும் மீட்க முடியவில்லை. எல்லோரும் வாடகையில் குடிவந்தவர்கள். நான்கு தலைமுறையாகத் தொடர்ந்த வாடகை. ஆரம்ப கால வீட்டுச் சொந்தக்காரர் சிறு தொகை முன்பணமாகவும் மாத வாடகை பதினைந்து ரூபாயாகவும் தொடங்கிவைத்த வாடகை வீடுகள். சொந்தக்காரரின் கொள்ளுப்பேரன் வரை அதே வாடகை. வாடகைக்காரர்களை வெளியேற்ற முடியாது.
மராமத்துச் செய்யப்படாத வெள்ளையடிக்கப்படாத கட்டடங்கள். அக்கம்பக்கம் நவீன மோஸ்தர் கட்டடங்கள். இதற்கென்றே உள்ள குண்டர்களிடம் சொல்லி எரித்துவிடலாமா என்று சொந்தக்காரரின் கொள்ளுப்பேரன் யோசித்துக்கொண்டிருந்தபோது ஒரு பெரு மழை நாளில் மின்சார வண்டி கடந்தவுடன் சீட்டுக்கட்டுகளைப்போல சரிந்து விழுந்தன இரு கட்டடங்களும். சிலர் மரித்தனர். வாடகை கொடுத்து இருந்தவர்களுக்கு உதவித்தொகை தருவது அவசியமில்லை. வெகுவாக முயன்றபின் மாற்று வீடுகள் பின்னர் தருவதாக உறுதியளித்து கோரேகாவ் கிழக்குப் பகுதியில் உள்ளே தள்ளியிருந்த இடத்தில் செங்கல் சுவரும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுமாய் வீடுகள் தரப்பட்டன. மாற்று வீடு தரப்படாமல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஊர்மிளாவின் அண்ணனும் அக்காவும் இறந்துபோயினர்.

ஊர்மிளாவின் முடிவுக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

இவளுக்கும் கட்டடத்தில் உள்ள மற்றவர்களைப்போல் முடிவெடுக்க வேண்டியிருந்தது. பணிவோய்வு பெற இவளுக்கும் கணவனுக்கும் ஐந்து ஆண்டுகள் இருந்தன. மூன்று பெரிய படுக்கையறைகள் கொண்ட வீடு. கடந்த ஆண்டு வரை ஒரு படுக்கையறையில் அதிகம் நடமாட முடியாத மாமியாரும் மன வளர்ச்சி குன்றிய அறுபது வயது நாத்தனாரும் இருந்தார்கள். தன் தாயாரை அந்தக் குழந்தைப் பெண் அவ்வளவு கருத்துடன் பார்த்துக்கொண்டாள். ஆனால் எந்த மன இறுக்கமும் இல்லை. இவள் கணவன் குமாரப்பா இவளுக்கு அதிகம் வேலை இல்லாமல் பார்த்துக்கொண்டான். காலையில் எழுந்து, வாய் கழுவ அம்மாவுக்கு உதவி, காப்பி போட்டு, அம்மா அருகில் அமர்ந்து பேசியபடி குடிப்பான். கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள் இருவரும். அம்மாவுக்குப் பாட்டு பிடிக்கும். எம். எல். வசந்தகுமாரியின் தேவர் நாமாக்களைப் போடுவான் தினமும். “பாரோ கிருஷ்ணைய்யா”தான் ஒவ்வொரு தினமும் முதல் பாட்டு. பிறகு சிறு பெண்ணாக இருக்கும் அக்காவை எழுப்புவான். அவள் பல் தேய்த்துவிட்டு வந்ததும் அவளுக்கும் காப்பி, “சன்னாகே நித்தே மாடிதியா மரி?” (நன்றாகத் தூங்கினாயா குழந்தே?) என்று கேட்டபடி. பிறகுதான் இவளை எழுப்புவான். ஆனாலும் வீட்டைப் பார்த்துக்கொள்ள ஆள் வேண்டியிருந்தது. அப்படி வந்தவள்தான் கம்லி. அவர்கள் இருந்த கட்டடமும் அதையொட்டிய பல கட்டடங்களும் 1978இல் கட்டப்பட்டவை. அந்தப் பகுதியில் இருந்த ஒரு பெரிய குடிசைப் பகுதி முற்றிலும் எரிந்துபோனது ஓர் இரவில். மரங்கள் அடர்ந்த இடம் அது. நடுவில் இருந்த ஒரு பெரிய வெற்றிடத்தில் எழும்பியிருந்தன குடிசைகள். சதுப்பு நிலப் பகுதி. அதில் மண்ணை நிரப்பிக் கட்டியிருந்தனர் குடிசைகளை ஐம்பதுகளின் இறுதியில் வந்த குடியேறிகள். கம்லி அங்கேதான் ஒரு வீட்டில் பிறந்தாள். அங்கேயே இருந்த மானேக்கைத் திருமணம் செய்துகொண்டாள். அவர்களை அங்கேயிருந்து விலக்க முயற்சிகள் தொடங்கின எழுபதுகளில். அதே பகுதியில் மாற்றிடம் தந்தால் போவதாகக் கூறினார்கள் அவர்கள். அங்கு வரப்போவது நடுத்தட்டு மக்களுக்கான கட்டடங்கள். அதில் இவர்கள் எப்படித் தங்க முடியும் என்று கூறினார்கள். இவர்கள் வாதிட, அவர்கள் மறுக்க என்று போய், ஓர் இரவில் எல்லாக் குடிசைகளும் நெருப்புக்கு இரையாகின. முதியோர், பெண்கள், குழந்தைகள் என்று ஐம்பது நூறு பேர் மரணம். செய்தித்தாள்களில் இரண்டு நாட்கள் பரபரப்பு. அதன்பின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நஷ்டஈட்டுத் தொகை. ஒரே மாதத்தில் கட்டட வேலைகள் தொடங்கின. கம்லியும் கணவனும் ஐந்து மைல் தொலைவில் புதிதாக உருவாகிக்கொண்டிருந்த ஒற்றை அறை இருப்பிடங்களில் ஒற்றை அறை வீடு ஒன்றை வாங்கிக் குடியேறினர். இந்தக் கட்டடங்கள் உருவானதும் கம்லி இங்கு வீட்டு வேலைக்கு வந்தாள். கணவனுக்கும் வேலை உருவாயிற்று. அத்தனைக் குடும்பங்களின் துணிகளுக்கும் இஸ்திரி போடும் வேலை.

சில சமயம் முன்னறை சன்னல் வழியாக வெளியே இருக்கும் மரங்களைப் பார்ப்பாள். “என்ன கம்லி?” என்றால், “என் வீடு இங்கதான் தீதி இருந்துது. இதே மரம்தான் என் வீட்டு வாசல் முன்னால இருந்துது” என்பாள்.

மனவளர்ச்சி குன்றிய தன் பெண்ணைப் பார்த்து, “என்னை வயது காலத்துல கவனிச்சுக்கத்தான் உன்னைப் பெத்திருக்கேனா?” என்று அங்கலாய்ப்பார் மாமியார். அந்தப் பெண்ணும் சிரிக்கும். “ஆமாம்” என்று சொல்லும். அம்மாவைக் கட்டிக்கொள்ளும். ஒரு நாள் காலையில் தம்பி தந்த காப்பியைக் குடித்தபடியிருந்தபோது புரையேறியது ஒரு முறை. பிறகு எழுந்துவந்து அம்மாவை அணைத்துக்கொண்டது. உயிர் பிரிந்தது. அடுத்த நான்காம் நாள் அம்மாவையும் கூட்டிக்கொண்டது.

இப்போது இந்தக் கட்டடங்களை இடித்துவிட்டு அடுக்குமாடிக் கட்டடங்கள் எழுப்பும் பிரச்சனை.

அவள் கல்லூரி தாதர் அருகில் இருந்தது. அந்த ஆண்டுதான் கல்லூரி முதல்வராக பதவி உயர்வு கிடைத்திருந்தது. குமாரின் கம்பனி கோட்டைப் பகுதியில் இருந்தது. சரக்குக் கப்பல் கம்பனி. அவனுக்கும் பதவி உயர்ந்திருந்தது. இவர்கள் வீட்டுக்குக் கூடுதலாகவே தொகை கிடைக்கும் என்றார்கள். சேமிப்பிலிருந்தும் வங்கிக் கடன் வாங்கியும் வரும் பணத்தை அந்தத் தொகையுடன் சேர்த்து லோயர் பரேலில் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்களில் ஒரு வீட்டை வாங்க முடியும். இருவரும் அலுவலகம் செல்லச் சௌகரியமாக இருக்கும். அந்தப் பக்கத்தில் இருந்த மனை மற்றும் வீடு விற்கும் தரகர் ஒருவர் வந்து அங்கு வரப்போகும் கட்டடங்களைப் பற்றிச் சொன்னார்.

“எல்லாம் 24, 25 மாடிக் கட்டடங்கள் தீதி. மொசைக் தரை வீடுகள். நவீன மோஸ்தர் சமையலறை. பாத்ரூம் எல்லாம் அஞ்சு நட்சத்திர ஹோட்டல்ல இருப்பது மாதிரி இருக்கும். ரொம்பப் பெரிய அங்காடி வரப்போகிறது. அதுவே பத்து மாடி அங்காடியாம். நியூயார்க், லண்டன்ல இருப்பதுபோல இருக்கும் உங்களுக்கு. எல்லாம் பாழாய்ப்போய்க் கிடக்கும் மில் காம்பவுண்டுலதான் கட்டப்போறாங்க. அந்தப் பகுதியே இப்போ மாறிப்போயிடும் பாருங்க. கிரன்காவ் இப்போ பாங்காக் ஆயிடும்.”

கிரன்காவ். ஆலைக் கிராமம். அப்படித்தான் அந்தப் பகுதியைச் சொல்வார்கள். நூற்றுக்கும் மேற்பட்டப் பருத்தி ஆலைகள் இருந்த பகுதி. இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் இருந்த இடம். கிட்டத்தட்ட அறுபது ஏக்கர் பரந்திருக்கும் பகுதி.

குமாரும் அவளும் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். நகரத்தின் மையப் பகுதி. இந்தப் பக்கம் துல்சிபைப் தெரு. அந்தப் பக்கம் ஜே ஜே தாவுபாலம். நகரத்தின் பல பகுதிகளை இணைக்கும் கண்ணிகள். அவர்கள் பார்த்த வீடு இருபத்திரண்டாம் மாடியில் இருந்தது. முன்னறைப் பால்கனியிலிருந்து பழைய ஆலையின் நீண்டு எழுந்த புகைபோக்கி தெரிந்தது.

கட்டடத்தில் இருந்த பலர் வேறு வேறு இடங்களில் வீடு பார்த்திருந்தனர். ஒவ்வொருவராய்ப் போக ஆரம்பித்தனர். ஊர்மிளாவின் மகன் தன் பாட்டியை முதியோர் இல்லத்தில் இருக்க ஏற்பாடு செய்து இந்த வீட்டை விற்றான். இல்லத்துக்குப் போன பத்தாம் நாள் கிழவி போய்விட்டார் “ஊர்மிளாவைக் கூப்பிடு” என்று முனகியபடி. டைனாஸோர் மாதிரி அசைந்தபடி புல்டோசர் வீட்டை இடிக்க வந்தது ஒரு நாள். இவர்கள் சாமான்களை லாரியில் போட்டு வண்டியில் அமர்ந்ததும் புல்டோசர் முன்னேறி கட்டடத்தை முட்டியது வெறியுடன்.

இருபத்திரண்டாம் மாடி வீடு காற்றும் வெளிச்சமுமாய் இருந்தது. பால்கனியில் நின்றபடி ஆலையின் புகைபோக்கியைப் பல கோணங்களில் படம் பிடித்தாள் முதல் தினமே. அதைப் பின்னணியாக வைத்தும் சில படங்கள். அவ்வளவு தூரம் வேலை செய்யக் கம்லியால் வர முடியவில்லை. சௌகிதார் கம்முவைக் கூட்டிக்கொண்டுவந்தான்.

வீட்டுச் சாவியை அவளிடம் தரலாம். மிகவும் நம்பத் தகுந்தவள் என்றான் சௌகிதார். அந்தக் கட்டடத்தில் ஐந்து வீடுகளில் வேலை செய்தாள். வீட்டு வேலை பற்றிய விவரம் கூறியதும் ஒப்புக்கொண்டாள். காலையில் சீக்கிரமாக வந்து காலைச் சிற்றுண்டி செய்து மதிய உணவையும் சமைத்துவிட வேண்டும். பிறகு மதியம் வந்து வீட்டைச் சுத்தம் செய்து, துணிகளைத் துவைத்துவிடலாம். துணி துவைக்கும் இயந்திரம் உண்டு. மாலையில் இரவு உணவைச் சமைக்க வேண்டும். சப்பாத்தி செய்ய வேண்டும். அவளுக்கும் காலையும் மாலையும் சாப்பாடு உண்டு. வாரம் ஒரு முறை இவளுடன் மார்க்கெட் வரவேண்டும் காய்கறி-மளிகை சாமான்கள் வாங்க.

கேட்டுக்கொண்டாள் கம்மு. தன் சம்பளத்தையும் கூறினாள். மும்பாய் வழக்கப்படி பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் (இயந்திரத்தில் துணி துவைக்கக் கூடுதல் சம்பளம்) வீட்டைக்கூட்டி மெழுகுதல் என்ற மூன்று வேலைகளுக்கென்று இருக்கும் சம்பளத்தைக் கூறிவிட்டு, சமைப்பதற்கு அதிகச் சம்பளம் கேட்டாள். ஆண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு. வாரத்துக்கு ஒரு முறை ஓய்வு. பண்டிகை நாட்களில் விடுமுறை. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கான சங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அது நிர்ணயித்த விதிகளின்படிதான் சம்பளம். கூட சில நிபந்தனைகளை வீட்டு வேலை செய்பவர்கள் விதித்தார்கள். குளிர்பதனப்பெட்டியில் வைத்த சாப்பாட்டைத் தரக் கூடாது. இரண்டு வேளை சாய் தர வேண்டும். காலை உணவும் மதியச் சாப்பாடும் தர வேண்டும். தீபாவளிக்கு ஒரு மாதச் சம்பளம் போனஸும் புடவையும். ஆண்டுக்கொருமுறை சம்பளத்துடன் கூடிய பத்துப் பதினைந்து நாட்கள் லீவு அவரவர் கிராமங்களுக்குப் போக. அந்தச் சமயம் முடிந்தால் ”பத்லி” எனப்படும் மாற்று ஆளை வைத்துவிட்டுப் போவார்கள்.

தினம் வரத் தொடங்கினாள் கம்மு. மும்பாயில் வீட்டு வேலை செய்பவர்கள் போல பரபர வேலை. அவள் பங்கு உணவை மட்டும் ஒரு டப்பாவில் எடுத்துப் போனாள். மூன்றடுக்கு டப்பா. பலர் வீட்டு உணவை எடுத்துச் செல்வாள் போலும்.

“வீட்டுக்கு எடுத்திட்டுப் போறியா கம்மு?” என்று அவளிடம் கேட்டாள் ஒரு நாள்.

“ஆமாம். என் பாபாவுக்கு.”

“வீட்டிலியா இருக்காரு?”

“ஆமாம்.”

“வேலை கிடையாதா?”

“வேலை போயிடுச்சு.”

”என்ன வேலை செய்திட்டிருந்தாரு?”

“மில்லுலதான். பதினாறு வயசுல இருந்து வேலை பண்ணினாரு. ஆயி சாப்பாட்டுக்கடை வெச்சிருந்தாங்க. மில்லுல வேலை செய்யற அத்தனை பேருக்கும் ஆயி சமைக்கிற சாப்பாடு பிடிக்கும். இந்தக் கோடியிலதான் எங்களுக்கெல்லாம் வீடு. 1982ல அந்தப் பெரிய ஸ்ட்ரைக் தத்தா சாமந்த் தலைமையில நடந்துதே அப்ப எனக்கு 12 வயசு. நஷ்டத்துல மில் ஓட முடியாதுன்னுட்டாங்க. பாலியெஸ்டர் முன்னால பருத்தி தோத்துடுச்சி. அப்ப போன வேலைதான் பாபாவுக்கு. தினம் வீட்டு வாசல்ல மோடா போட்டு உட்கார்ந்து எல்லா புகைபோக்கியையும் பாத்துட்டிருப்பாரு. குடிப்பாரு.”

”ஆயி?”

“ஆயி இன்னும் சின்னதா ஒரு சாப்பாட்டுக் கடை வெச்சிருக்காங்க. வயசாயிடுச்சில்ல? வடா-பாவ் மட்டும் பண்ணுவாங்க. கொஞ்சம் பேர் வருவாங்க இப்பவும். அப்பல்லாம் காலையில இரண்டரை மணிக்கே ஆயி எழுப்பிடுவாங்க என்னை. மளமளன்னுட்டு வேலை செய்யணும். ராத்திரி ஷிப்டு முடிக்கிறவங்களும் காலை ஷிப்டு போறவங்களும் வர ஆரம்பிச்சுடுவாங்க. ரொம்ப வேலைதான் மௌஸி. ஸண்டாஸ் வசதியெல்லாம் நல்லாவே இருக்காது. சாக்கடையிலயும் குப்பையிலயும்தான் விளையாடுவோம். ஆனா நிறைய பண்டிகையும் கொண்டாட்டமும் இருக்கும். கணேஷ் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, மொஹர்ரம் வந்தா அவ்வளவுதான். அதுவும் கண்பதிபப்பான்னா பெரிய கொண்டாட்டமா இருக்கும். பாட்டு, தமாஷா டான்ஸ், குழந்தைகளுக்குப் பாட்டுப் போட்டி இப்படி நடந்துட்டே இருக்கும். லைஸீம் பண்ணுவோம் மௌஸி. அவ்வளவு அழகா இருக்கும். பாபா டோல்கி வாசிப்பாரு நாங்க லைசீம் ஆடுறபோது. மொஹர்ரத்தின்போது பெரிய ஊர்வலம் போகும். நாராயண் ஸுர்வே மில்லுலதான் வேலை செய்தாரு மௌஸி. அவர் பாட்டெல்லாம் நாங்க பாடுவோம்…”

பேசிக்கொண்டே போனாள் ஒரு கனவுலகத்தை விவரிப்பதுபோல.

லட்சக்கணக்கான ஜனங்கள் நடமாடிக்கொண்டிருந்த ஓர் இடமாக அதைக் கற்பனைசெய்து பார்த்தபோது உயிர்ப்பான இடமாக அது தோன்றியது. தமாஷா நடனங்களும், பாட்டும், கவிதைகளும் பேச்சுமாய் ஒரு கலாசார வெளியாய்த் தோன்றியது. இங்கு எங்கோ உட்கார்ந்தபடிதான் நாராயண் ஸுர்வே தன் கவிதைகளை எழுதியிருப்பார். “சண்டை போடக் கூடாது” என்று தினம் தன் குழந்தைகளிடம் கூறிவிட்டு மில்வேலைக்குப் போன ஆயி ஒரு நாள் வெறும் உடலாய்த் திரும்பிய கவிதை, கசாப்புக்கடை வைத்திருந்த தாவூத் சாச்சா, காசிபாய் தாக்கப்பட்டதும் அவளைக் காப்பாற்றச் சண்டைபோட்டுத் தன் கால்களை இழந்த கவிதை, இந்தப் பகுதியின் வாழ்க்கையைக் கூறும் மும்பைசா லாவணி கவிதை எல்லாம் இங்கேதான், இந்த கிரன்காவில்தான் எழுதப்பட்டவை. தொழிற்சங்கம் உடைபட்டதும், அந்தப் பிளவிலிருந்து குண்டர்களும் தாதாக்களும் வெளிக்கிளம்பி வந்ததும், மிகப் பெரிய கடாவ் ஆலை தாவூதிடம் விலை பேசப்பட்டதும், அதைத் தொடர்ந்து சுனில் கடாவ்வின் கொலையும் என வேர்வையும் ரத்தமும் துப்பாக்கியும் ராம்புரி கத்தியுமாக மாறியதும் இந்த இடம்தான்.

ஐந்து நட்சத்திர அங்காடியும், ஓவியக் கூடங்களும், ஹோட்டல்களும், வானம் தொடும் கட்டடங்களும் எழும்பியுள்ள இந்த இடம் கட்டுமானத் தொழிலதிபர்களின் வெற்றி. பணமுதலைகளின் வெற்றி. முன்னேறத் துடிக்கும் நடுத்தர மனிதர்கள் ஈசல்களாய் பெருகுவது இங்குதான். இவளும் அந்த ஈசல்களில் ஒருத்திதான்.

கம்மு பேசுவதை நிறுத்திவிட்டுப் பாத்திரம் கழுவ முற்பட்டிருந்தாள் எதையோ முணுமுணுத்தபடி. உற்றுக் கேட்டபோது, அது மும்பைசா லாவணியின் வரிகள். “நெருப்பைத் தின்று சாம்பலைக் கழிபவர்கள் நாங்கள்” என்று கிரன்காவ்வாசிகள் கூறும் கவிதை. இது தேவர்களின் சிற்பி விஸ்வகர்மா எழுப்பிய நகரம் அல்ல. நெருப்பிலிருந்து தப்பித்த அசுரர்களின் சிற்பி மயன் எழுப்பியது.

நகரங்கள் எழ வனங்களும் வனம்சார் வாழ்க்கையும் எரிக்கப்படுவதுதான் புராணக் கதை. கண்டவப் பிரஸ்தம் நெருப்பில் அழிந்த பிறகுதான் எழும்பியது இந்திரப் பிரஸ்தம். நாகர்களின் வீடாகவும் எண்ணற்றப் பறவைகள் மிருகங்கள் இவற்றின் குடியிருப்பாகவும் இருந்த அதுதான் தீக்கிரையாக்கப்பட்டது. வயல் வெளிகள், பழத்தோப்புகள், பூந்தோட்டங்கள், நகரம் இவை வனங்களை அழித்தால்தான் உருவாகும். அதுதான் தர்மருக்குக் கிருஷ்ணர் தந்த பதில்.

நெய் சாப்பிட்டுக் கொழுத்திருந்த அக்னி தன் உடல் கரைந்து பொலிவு பெற வனத்தை அழிப்பதுதான் வழி என்று நினைத்துத் தன் நெருப்பு நாவுகளால் தின்ற வனம்தான் கண்டவப் பிரஸ்தம். எல்லாம், எல்லாம் அழிந்தன. மான்கள், சிங்கங்கள், பாம்புகள், குரங்குகள், ஆமைகள், புறாக்கள், கிளிகள், தேனீக்கள், சாரிசாரியாகப் போன எறும்புகள், மரங்கள், புதர்கள், கொடிகள், மூலிகைச் செடிகள், புல் பூண்டு எதுவும் எஞ்சவில்லை.

இந்திரப் பிரஸ்தம் எழும்பியது. ஓவியம், இசை மற்றும் நடனம் கற்ற கலைஞர்களும் கைவினைக் கலைஞர்களும் வியாபாரிகளும், தொழிலாளிகளும் வந்து குழுமினர்.

கம்மு மும்பைசா லாவணியை முணுமுணுத்தபடிதான் இருந்தாள். சமையலறைக் கதவினூடே வரவேற்பறையின் பால்கனி தெரிந்தது. தூரத்தே ஆலையின் புகைபோக்கி தெரிந்தது.

இந்திரப் பிரஸ்த நெருப்பிலிருந்து ஒரு தட்சகன் தப்பித்து வந்தான் பழி தீர்க்க. இது நவயுகம். பல தட்சகர்கள் வரலாம். தட்சகர்களை நினைவூட்டும் நிகழ்வுகள் நேரலாம். இடிந்து, இருண்டு கிடக்கும் ஆலைகள் பெருங்குற்ற வெளிகளாகலாம். அங்கே வன்புணர்வுகளும், கொலைகளும், போதை மருந்து கடத்தல்களும், வக்கிர வெறியாட்டங்களும் நடைபெறலாம்.

பாத்திரம் கழுவும் வேலையை முடித்துவிட்டாள் கம்மு. தன் வலுவான கைகளால் சப்பாத்தி மாவை அடித்து அடித்துப் பிசைய ஆரம்பித்தாள்.

__________________
படைப்பு: - அம்பை
*****

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (17-Jan-16, 12:12 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 343

மேலே