பிழம்பு

மஃரிபு அதான் ஒலித்து முடிந்துவிட்டிருக்க கிணற்றடிக்குப் போய் தம்பி தங்கைகளுடன் கூட்டமாகச் சேர்ந்து குளித்துவிட்டு குர்ஆனைப் பிரித்து ஓத ஆரம்பித்தாள். முற்றத்தில் காயப்போட்ட முந்திரிகளை அள்ளிச் சாக்கில் கட்டி முடித்துவிட்டு உம்மா மஃரிபு தொழுகைக்கு உழுச் செய்ய கிணற்றடிக்குப் போய் இருக்கும்போது அந்தச் சத்தம் கேட்டது. “புள்ளே ஹயறுநிஸா எங்களே ஒன்ட புள்ளெயொள்”. இவளும் தம்பி தங்கைகளும் பதற்றத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் ஜன்னலினூடாகப் பார்க்கிறார்கள். முந்திரித் தோப்பின் கம்பி வேலிக்கு அப்பால் பார்த்த அதே தடித்த உடல் பெண்தான். இளைய தங்கை சிறுநீர் கழிக்கப்போறேன் என்று வலக்கையால் ‘அந்த’ இடத்தைப் பொத்திக் கொண்டு ஓடினாள். உழுச் செய்யச் சென்ற உம்மாவுக்கும் அந்தக் குரல் பதற்றம் தந்திருக்கவேண்டும். உம்மாவைக் கண்டதும் அந்தப் பெண் திட்டத் தொடங்கினாள். “என்னள புள்ளொயள் வளர்த்திருக்காய். பொட்டப் புள்ளயொல இப்பிடியால வளர்ப்பாய்”

“என்ன, என்ன நடந்திச்சி. நடுவாசல் வந்து நின்று ஏன் இப்பிடிக் கத்துறிங்க.” உம்மாவுக்கு அந்தப் பெண் நின்ற விதமும் ராங்கித்தனமான குரலும் கோபத்தைக் கிளறியதால் இப்படிப் பேசியிருக்கலாம். மற்றும்படி உம்மா பொறுமையான நிதானமான பெண்.

முந்திரித் தோப்பில் விளையாடிக் கொண்டிருக்கும்போது முள்வேலியைக் கடந்து ஆட்டுப்பெட்டை உள்ளே வந்துவிட்டது. இவளின் பன்னிரண்டு வயது உயரத்தைத் தொட்டும்விடும்போல வளர்ந்திருந்தது. அதன் வெள்ளைவெளேர் நிறமும், தொழுதொழுவென்ற சதைத்த உடலும் வாளிப்பும் அதை ஏதாவது பண்ணவேண்டும் போல உசுப்பியது. முதலில் மரத்திலிருந்து கீழேக் குதித்து அதன் அருகே நின்று உயரத்தை அளந்து அது இடுப்புக்கு கொஞ்சம் மேல் நெஞ்சுக்குக் கீழ் என்று உறுதிப்படுத்தினாள். தோப்பில் பரவிக்கிடந்த பசும்புற் தரை ஆட்டுக்கன்றை உள்ளே வரச் செய்திருக்கும். எதையும் கவனியாமல் மேய்ச்சலிலேயே குறியாய் இருந்தது. அதன் மடி தரையில்பட்டு விடும்போல வீங்கிப் பெருத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. உடனே தோன்றிற்று. ஆட்டுப்பெட்டையின் மடியில் வாய்வைத்து பால் குடிக்கிற எண்ணம். இவள் கோரிக்கைக்கு முன்னர் பயந்தாலும் பெரியவள் உடன் இருக்கின்ற தைரியத்திலும் அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அறிகிற உற்சாகத்திலும் எல்லாரும் சம்மதிக்க ஒருபாடாக மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுப்பெட்டையை அமுக்கிப் பிடித்தாயிற்று. அது திணறுகிறது. ‘ம்மே…’ என்று அலறுகிறது. கால்களை உதைக்கிறது. ஆட்டின் கீழே குறுக்காக மல்லார்ந்து படுத்துக் கொண்டு மடியைப் பிடித்து இழுத்து வாயைத் திறந்தாள். பால் முகத்தில் பிசிறியடித்தது. தம்பி தங்கைகளின் பிடிதளர மிரண்டு கால்களால் இவளை மிதித்துக் கொண்டு தப்பித்தேன் பிழைத்திற்றேன் என்று ஒடியது. அது கால்களை மிதித்த இடத்தைத் தடவித்தரத் தாணும் முடியவில்லை, கண் நிறைய மண்ணை வாறி இறைத்துவிட்டிருந்தது அதன் கால்கள். தம்பியும் இளைய தங்கையும் மாறி மாறி இமை மடல்களை அகலத் திறந்து ‘ப்பூ’ என்று ஊதியும் சரிவரவில்லை. தோட்டத்துக் கிணற்றில் தண்ணீரை அள்ளி முகத்தில் விசிறி அடித்துக் கழுவிய பின்னர் சரியாயிற்று. ஆடு கால்களால் நெஞ்சில் மிதித்திருக்கவேண்டும். அந்த வலியை விட கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற ஏமாற்றம்தான் மேலோங்கியிருந்தது. சூழல் நினைவுக்கு வர சுற்று முற்றும் பார்த்தவளாக,நடந்ததை யாரும் கவனித்திருக்கக் கூடாதென எண்ணிக் கொண்டு ஆடு தப்பித்துச் சென்ற பக்கமாகத் திரும்பிப் பார்க்கும்போது அந்தக் காட்சி கண்ணில் பட்டது. கம்பி வேலிக்கு அப்பால் நின்ற சிறுவன் இவர்களைச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிற காட்சி அது. தடித்த உருவத்தில் இவர்களை உற்றுப் பார்த்த அந்தப் பெண் நிச்சயமாய் ஆட்டுப்பெட்டையின் சொந்தக்காரி என்றும் அந்தச் சிறுவன் இங்கு நடந்ததைப் பார்த்திருக்கவேண்டும் என்றும் தோன்றியது.

“சும்மா வந்து கத்துவெனாளே. கூப்பிடு உன்ட புள்ளொயலெ, அதுவள்ட்டக் கேளு ஏன் கத்துறனுன்டு தெரியும்…”

அந்தப் பெண் இப்படிச் சொன்னதும் உம்மா திரும்பிப் பார்ப்பதற்குள் தம்பி உடனே சொன்னான். “நாங்க ஏலாண்டுதான்மா சென்னெம். றாத்தாதான்..” என்று உடைந்த குரலில் தொடங்கி ஆட்டுப் பெட்டையை அமுக்கிப் பிடித்தததிலிருந்து மல்லாக்கப்படுத்துப் பால் குடித்தது வரைக் கொட்டிவிட்டான்.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது விறுவிறென்று நடக்கின்ற உம்மாவை வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தோம். உம்மா சென்ற பக்கம் இருட்டாக இருந்ததால் சரியாக எதையும் பார்க்க முடியவில்லை ஆனால் மரத்திலிருந்து கொப்பு உடைக்கிறாற்போல சத்தம் கேட்டது. உம்மா திரும்பி வரும் போது வேலி கிளசரியா மரத்திலிருந்து முறித்தெடுத்த பச்சைக் கம்பு கையில் இருந்தது. தம்பியும் தங்கைகளும் அலறிக்கொண்டு நாலாபக்கமும் ஓட இவள் மட்டும் அப்படியே நின்றாள். ஒரு கேள்வியும் பார்வையும் இல்லை, வந்தவேகத்தில் இடக்கையை இழுத்துப்பிடித்து அடித்துப் பின்ன தரையில் உருண்டு புரண்டு “என்ட உம்மா என்ட வாப்பா” என அவலக் குரலில் கத்தினாள்.

“புள்ளே ஹயறுநிஸா புள்ளயலுக்கு போட்டு அடிக்கிறதுக்காக இதெச் செல்லளெ.” என்று அந்தப் பெண் சொல்லுவது கேட்டது.

அடித்த அடியில் நுனிக்கம்பு கீழம் கீழமாக கிழிந்துவிட்டிருந்தது. தம்பி, தங்கைகளுக்கு ஒரு அடியும் இல்லை. அடிவாங்கிக் களைத்ததில் வியர்த்து விறுவிறுத்துக் கிடந்தாள். கம்பைத் தூக்கியெறிந்துவிட்டு “இனிமே யாராவது வரட்டும் வாசலுக்கு” என்று இவளைத் திரும்பிப்பார்த்து உதட்டைக் கடித்துக் கொண்டு மீண்டும் மஃரிபு தொழ உலு எடுக்கச் சென்றார் உம்மா.

முப்பது வயது பூர்த்தியாகிவிட்டிருக்கும் இன்றும்கூட இவளுக்குப் புரியாததுதான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் புரியாதவைகள் பன்மடங்கு சந்தேகங்களாக பயமுறுத்தும் அடர்ந்த வனமாக வளர்ந்து கறுத்த மலைகளாக குந்தியிருக்கிறதோ என அவ்வப்போது மனம் நினைத்துக் கொள்ளும். தனிமை இப்படித்தான் எதையோ யோசிக்கவைக்கும். இந்த மாதிரி சிந்தனைகளுக்குப் பின்னணிகளே இருக்காது என்றும் கூறமுடியாது. பின்னணிகளே இல்லாத ஒன்றாக எதுதான் உள்ளது! தனிமையின் கைகள் மாய வழிகளில் பிடித்து இழுத்துச் செல்லக்கூடியது. தண்ணீரில் மிதக்கச் செய்வதும் மூழ்கச்செய்வதுமாக விந்தைகளால் அலைக்கழிப்பது. பையித்தியம் பிடித்திட்டோ என்று எண்ணவைக்கும். நிதானத்தில் சந்தேகமுண்டாக்கும். இப்படித் தனிமையின் அறிவு தூர்ந்த செயற்பாடுகளை ஆராய்வதற்குப் போதிய நேரமிருக்கிற ஒருத்திதான் இவள். தலையணைக்குக் கீழே கைகயைவிட்டுத் துலாவி கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தபோது நேரம் இரண்டு மணி பத்து நிமிடங்களாகிவிட்டதாகக் காண்பிக்கிறது. உறக்கம் வரவில்லை என்ற ஏமாற்றத்தைவிட இன்னும் சில மணிநேரத்தில் விடிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு தடவித்தருகிறது மெதுவாக.

பால்யத்தில் இவளை அவிழ்த்துவிட்ட ஆட்டுப் பெட்டை என்று தான் அந்த தோட்டக்காரர் சொல்லியிருந்தார். ஒருவேளை அதுதான் நானோ என்றும் சந்தேகம். ஆட்டுக்கன்றுகளும், மாடுகளும் சேதப்படுத்தக் கூடாதென்று கச்சிதமாக அவர் கம்பி வேலி அரண் அமைத்துக் காத்த சோளத்தோட்டத்தில் அடிக்கடி சோளம் காணாமல் போகிறது. காலையில் செழித்து நின்ற மரவெள்ளிச் செடி மாலையில் வாடிச் சோர்ந்து விடுகின்றது. ஐயோ என்று பதறியடித்துக் கொண்டு தண்ணீரை அள்ளி வார்த்தால் துவண்டு வீழ்கிறது செடி. அதன் அடியில் கிழங்கைக் காணவில்லை. இதெல்லாம் யார் செய்யக்கூடும் என்று இரவு பகல் அலைந்த அவரது கண்ணில் ஒரு நாள் சிக்கிக் கொண்டாள் கையும் மெய்யுமாக. மணிக்கட்டை இறுக்கி முறுக்கிப் பிடித்தவர் இவள் வீட்டை அடைந்ததும் தான் விடுவித்தார். உம்மா, வாப்பா உம்மம்மா தம்பி தங்கைகள் எல்லார் முன்னும் நிறுத்தப்பட்டிருந்தாள். மரவள்ளியும், சோளமும் காணாமல்போகிற நீண்ட நாள் துயரத்தை அவர் விபரித்துக் கொண்டிருக்கும்போது காட்டுப்பள்ளி புறவளவில் காத்திருக்கும் கூட்டாளிகளைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். இந்நேரம் அவர்கள் கொள்ளிக் கம்புகளைப் பொறுக்கி எரிக்கத் தொடங்கியிருப்பார்கள். பப்பாளித் துண்டுகளாக தணல் கற்றைகள் மினுங்கிக் கொண்டிருக்கும். இந்த ஆளிடம் மாட்டிக்கொள்ளாதிருந்தால் கையில் இருக்கும் மரவள்ளிக் கிழங்குகள் தணலில் சுடுபட்டு இந்நேரம் வாயில் இருந்திருக்கும். மரவள்ளிக் கிழங்கை தணலில் வாட்டிச் சாப்பிடுகிற அனுபவம் அலாதியானது. யோசித்துக் கொண்டிருக்கும்போதே கையிலிருந்த மரவள்ளிக் கிழங்கை பிடுங்கிக் கொள்கிறார் உம்மா. இனியொருபோதும் இவள் இப்படிச் செய்யமாட்டாள் என்று எதன் பொருட்டோவான நம்பிக்கையில் அவருக்கு வாக்குறுதியளிக்கிறார். உம்மாவின் முகத்தில் நிறைந்திருந்த அப்பாவிக் கலையும் உம்மம்மா, ஒரு வயதான மனுஷி கெஞ்சுகிறாளே என்ற இயலாத மனமும் அவரைத் திரும்பி நடக்கச் செய்கிறது.

அவர் உம்மாவிடம் கேட்ட இன்னுமொரு கேள்வி ”ஒரு பொட்டப் புள்ளயெ இப்படியா வளர்ப்பீங்கள்” . ஒரு பொட்டப் பிள்ளை எப்படி இருக்கவேண்டும் என்று அப்போது கேட்டிருக்கவில்லை. அதனால் இன்னமும் அந்த சந்தேகம் இருக்கிறது.

ஒரு பொட்டப் புள்ளயெ இப்பிடியா வளர்ப்பீங்கள் என்ற கேள்வியை இவளைப் பெற்றதற்காக பலமுறை பலரால் கேட்க நேர்ந்திருக்கிறது தாய் தகப்பனுக்கு. அவர்கள் சொல்லித் தராமல்தான் மரத்தில் ஏறி மாங்காய் திருடுகிறாள். மாங்காயின் இனிப்பும் புளிப்புமான சுவையில் திருட்டு மாங்காய் திண்பதை மறந்து கொட்டையை வீசினால் அது வீட்டுக்காரன் தலையிலேயே விழுந்து விடுகிறது. மாங்காய் பறிபோன ஏமாற்றமும், சூப்பியெறியப்பட்ட மாங்கொட்டை தலையில் விழுந்த அவமானமும் சும்மா இருக்க விடாமல் பண்ணியதில் மரத்திலேயே அபயமாகி விடவேண்டியதாகிவிட்டது.

உம்மம்மாவுக்கு ஒரு முந்திரித் தோப்பு இருந்தது. ஓய்வுப் பொழுதில் பாதியை அந்த முந்திரித் தோப்பில்தான் கழித்தாள். முந்திரியின் கிளைகளில் தாவும்போது குரங்குக்கே பொறாமை வரும். அந்தக் கிளையில் இருந்து இந்தக் கிளைக்கு பாய்ந்து கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் ‘உன்னை ஒருத்தனும் ஏத்துக்கமாட்டான் பாரு’ என்று சபிக்கும் தோரணையில் நமட்டுச் சிரிப்புடன் உம்மம்மா சொல்ல பொருட்படுத்தாமல் இன்னொரு கிளைக்குத் தாவிக் கொண்டிருந்தாள். அந்த முந்திரித் தோப்பிற்குள் தான் அந்த ஆட்டுக்குட்டி உள்ளே வந்திருந்தது.

தம்பியும் தங்கைகளும் குற்றவுணர்வோடு இவள் பக்கமாக வந்து அமர்ந்தார்கள். கடைக்குட்டித் தங்கை வீங்கித் தடித்திருந்த இவளது கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்ணீர் அந்த தடிப்பில் வீழ்ந்தது. இளைய தங்கை கலைந்து கிடந்த கூந்தலைக் கோதிவிட்டாள். தம்பி கொஞ்சம் தள்ளியே நின்றான். காட்டிக் கொடுத்த குற்றவுணர்வுடன். அடிபட்டு வீழ்ந்த இடத்திலேயே கிடந்தாள் இவள். அதன் பாலைக் குடித்ததால் ஆட்டுப்பெட்டைக்குக் கோபம் வந்து காலால் உதைத்துவிட்டு ஓடியது நியாயம். இந்தப் பொம்பளைக்கு என்ன வந்தது என்ற கேள்வியும், இந்த சின்ன விஷயத்துக்கு இந்தளவுக்கு உம்மா தண்டித்திருக்க வேண்டாமே என்ற எண்ணமும் இவளுள் ஓடிக் கொண்டிருக்கும்போது கார் சத்தம் கேட்டது.

வாப்பாவின் கையிலிருந்த தேன்குழல் பார்சல் கடைக்குட்டி பர்ஸானாவின் கைக்கு மாறியிருக்க மேலுமொரு பார்சலும் கையில் இருந்தது. அது இவளுக்குத்தான் என்று தெரிந்தும் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுப் பிடிவாதமாக அங்கேயே அமர்ந்திருந்தாள். தரையிலே சம்மணமிட்டு தலைவிரிகோலமாகக கிடந்த இவளைப் பாரத்ததும் பதறிக்கொண்டு பக்கத்தே அமர்ந்த வாப்பாவைப் கண்டதும் விம்மிக்கொண்டு மடியில் சாய்ந்தாள்;. கைகளிலும் கால்களிலும் வீங்கிச்சிவத்திருந்த தண்டனையின் அடையாளங்களைக் கண்டதும் அவர் கண்களில் சிவப்பேறவும் உம்மா தொழுகை முடித்து வரவும் சரியாக இருந்தது.

ஏன் எதற்கு என்று விசாரணைகளை வாப்பா ஒருபோதும் நடத்துவது கிடையா. என்னதான் என்றாலும் தண்டிக்கக்கூடாது என்பதுதான் அவரது வாதம். ‘வாயால் பேசு கையால் பேசாதே’ என்பதுதான் வாப்பா உம்மாவுக்குத் தருகிற ஆலோசனை. அவரது கொள்கையில் அவர் எந்தளவுக்கு உறுதியென்றால் அவரது மீசையே பொசுங்கிப் போனபோதுகூடத் தண்டிக்கவில்லை. அது சுவாரசியமான கதை. அந்தக் கதைக்குப் பின்னர் வருவோம். இப்போது நடப்பதைப் பார்ப்போம்;. “இங்கப்பார் என்ட பிள்ளெகள் மேலெ கைவைக்கப்படாதென்டு செல்லியிருக்கேன். மாடு மரைக்கு அடிக்கிறாப்போல அடிச்சிருக்காய். மனுஷியாடி நீ. ச்சே” என்று தொழுகை முடித்து வந்த உம்மாவில் எரிந்து விழுந்தார். இவளைக் கைத்தாங்கலாக தூக்க இவளும் சற்று மன ஆறுதலுடன் உம்மாவை முறைத்துக் கொண்டு எழுந்தாள். உச்சபட்சமாக வாப்பாவால் இவ்வளவுதான் முடியும் என்பது முன்னரே தெரியும். உறைக்குறாப்போல் காரசாரமாகத் திட்டுவதற்கு அவருக்குத் தெரியாது. கன்னத்தில் அறைவது அடிப்பதெல்லாம் அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. உம்மாவுக்கும் தெரியும். இதுக்கு மேல் எதுவுமில்லை என்பது. ஆனாலும் வாப்பா ‘டி’ போட்டுப் பேசிவிட்டதற்காக உம்மா முகம் விறைத்துப்போனது. இனி அவ்வளவுதான் மூன்று நாளைக்கு உம்மா முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியாது. அடிப்பது, கன்னாபின்னாவென்று திட்டுவதெல்லாம் தெரியாத வாப்பா கோபத்தில் உம்மாவை டி போட்டுப் பேசுவதுண்டு. அது உம்மாவுக்குப் பெரிய கௌரவக் குறைவு. சில நாட்களுக்கு ‘இங்க வாங்க இதை வாப்பாக்கு குடுங்க. வாப்பாக்கிட்ட கேளுங்க’ என்பதாக உம்மாவின் சொல்லாடல் தொடரும். உம்மா சொல்வது வாப்பாவுக்கும், அவர் சொல்வது உம்மாவுக்கு காதில் கேட்பதாக இருந்தாலும் நாங் அடிபடுகிறவளாக எதிர்க்கேள்வி கேட்கிறவளாகத் தொடங்கிய வாழ்வு தனிமையைத்தான் பரிசளித்திருக்கின்றது. இப்படியொரு போர்க்குணம் எப்போதிருந்து எப்படி ஆரம்பமாகியிருக்கவேண்டும் என்று நினைவுச் சுவடுகளின் வழியே திரும்ப நடந்து பார்க்கிறாள். ஆறோ ஏழு வயதிலிருந்து ஆரம்பமாகியிருக்கலாம். ஹனீபா மௌலவி முட்டிக்கால்கள் சிவக்கச் சிவக்க பிரம்பால் அடித்தபோதிலிருந்து துவங்கியிருக்கலாம். குர்ஆன் மதரஸாவுக்குச் செல்லும்போது சிறுமியே என்றாலும் முட்டிக்காலை மறைக்கும் நீளமான சட்டை அணிந்தே செல்ல வேண்டும். அல்லது சட்டை குட்டையாக இருந்தால் கீழே காற்சட்டை அணியவேண்டும். இந்த நியதியை கேள்வியின்றி எல்லோரும் பின்பற்றும்போது இவளால் மட்டும் ஏன் முடியாமல் போனது? காற்சட்டையைக் கழற்றி உம்மாவுக்குத் தெரியாமல் புறம்வளவு வேலியில் செருகிவிட்டுச் சென்று ஏன் முட்டிக்கால் சிவக்க அடிபட்டாள். சிறுமியாக இருக்கிறபோது மட்டும்தான் குட்டைச் சட்டை அணிய அனுமதியுண்டு. வேறெப்போது அணிவதாம். காலையில் பள்ளிக்கூடம். மாலை குர்ஆன் வகுப்பு. முட்டிக்கால் தெரிகிற அழகான சட்டைகளைப் போட்டுக்கொண்டு எப்போது தெருவில் நடக்க முடியும்? இந்த அலாதியான அனுபவத்தை வேறெந்தப் பருவத்தில் காண்பது?

சட்டை அப்புறம் சைக்கிள் அப்புறம் பர்தா என்று எல்லாமே பிரச்சினை இவளுக்கு. ஊரில் முதன் முதலில் சைக்கிள் ஓட்டியவள் இவள்தான். ஆம்பிளைப் பசங்களுக்கே சைக்கிள் வாங்கித் தர யோசிக்கிற காலமது. அங்கே இங்கே போய் முட்டிக்குவாங்க பசங்கள் என்று ஆயிரம் முறை யோசித்து சைக்கிள் வாங்கித் தருவார்கள். அந்தத் தெருவுக்குப் போகக்கூடாது இந்தத் தெரு வழியாக வரக்கூடாதென்று ஏகப்பட்ட நிபந்தனைளும் கூடவே இருக்கும். ஸர்மிளா சிறுகதை-மோனிகாசிறுதும் யோசிக்காமல் எந்த நிபந்தனையுமில்லாமல் வாப்பா சைக்கிள் வாங்கித் தந்தார். சும்மாவே பட்டாம்பூச்சியளவு பரபரத்துத் திரிந்த இவளுக்குச் சைக்கிள் கிடைத்ததும் இறக்கைகளே வந்துவிட்டாற்போல பறக்க ஆரம்பித்துவிட்டாள். முட்டிக்கால் தெரிகிற குட்டைச் சட்டை அதே நிறத்தில் ரிபன் ரெட்டைச் ஜடை என்று இப்போது நினைக்கிற போது அந்தக் காலத்தில் ஊரின் தேவதையாக இருந்திருப்பாள் போல.

கிளசரியாக் கம்பினால் அடிவாங்கிய அன்று இரவு உறங்கும் வரை யாரோடும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அடிபட்ட களைப்பிலும் உம்மாவைக் காட்டிக்கொடுத்த திருப்தியிலும் வாப்பா கொண்டு வந்த பார்சலை மறந்தே விட்டாள். அது ‘சுல்தான் கேக்’; அதுபற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இவளைத் தவிர வீட்டில் யாரும் அதனைச் சாப்பிடப் போவதில்லை. எனவே, அது வைத்த இடத்தில் அப்படியே இருக்கும். சுல்தான் கேக் என்றால் அது ஒன்றும் மன்னன் சுல்தான் இவளுக்காக அனுப்பிய கேக் இல்லை. சாதாரண டேட்ஸ் கேக்தான். அதைச் சாப்பிடுவதற்கு பழகியது வாப்பாவின் அன்ரன் என்கின்ற நண்பரின் வீட்டில். அவர்கள் வீட்டுக்கு இவர்கள் சென்றிருந்த ஒரு பொழுது கிறிஸ்மஸ் முடிந்து சில நாட்கள் கடந்திருந்தது. கேக்கின் வாசனையை நுகர்ந்துவிட்டு யாரும் சாப்பிடவில்லை. உம்மா அதனைச் சாப்பிடவேண்டாம் என்று ஓரக்கண்ணால் காண்பித்த சமிக்ஞைக்கு அர்த்தமே புரியாமல் இவள் பாட்டில் சாப்பிட்டு முடித்தாள். பிறகுதான் தெரிந்தது அதில் “வையின்” கலந்திருந்தார்கள் என்று. வையினோ குயினோ அந்த சுவையை நாக்கு நாட் கணக்காக உணர்ந்தது. மனம் அதன் வாசனையை நுகர்ந்தது. முடிவாகத்தான் வாப்பாவிடம் கேட்டுத் தருவித்துச் சாப்பிட ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட கிறிஸ்மஸ் கேக் போன்ற ஒன்றைத்தான் ஊர் பேக்கரிகளில் சுல்தான் கேக் என்ற பெயரில் தயாரிக்கிறார்கள். ஆனால் அதில் வையின் சுவை வராது. எப்போதாவது வாப்பா கொழும்பு சென்று வரும்போது அசல் அன்ரன் மாமா வீட்டில் சாப்பிட்டது போன்ற வையின் கலந்து தயாரித்த கேக்கை வாங்கி வந்து தருவதுண்டு. வாப்பாதான் இவளுக்குச் சாப்பாட்டை ஊட்டிவிட்டார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர் மடியில் உறங்கிப்போனாள்.

ஹாஸ்பிடலும் கட்டிலும்போல தனிமை இவளைப் பயமுறுத்தியது கிடையாது முன்னெப்போதும். இங்கிருந்து தப்பித்துச் செல்வதுதான் தனிமையின் சுகானுபவத்திற்குள் மீளவும் இணைத்துக் கொள்ளத் தெரிந்த ஒரேயொரு வழி. இவளைப் பொருத்தவரையில் இவையெல்லாம் வியாதிகள் இல்லை. இவளைக் காப்பாற்றுகிற புத்துயிர்ப்பூட்டுகிற ஒளஷதடங்கள்.

இவளது விசித்திரக் குணாம்சங்களுக்கு ஏதாச்சுமொரு வியாதியின் பெயரைச் சூட்டிப்பார்க்க மருத்துவர்களுக்கும் இவளது நெருங்கிய சில நண்பர்களுக்கும்கூடப் பேராசை. மருத்துவ அறிக்கைகளுக்கு அமைவாக உடலிலும், உளத்திலும் ஒரு பாதிப்புமில்லை. பின் ஏன் இப்படி இருக்கிறாள் என்று ஆராய்கிறார்கள். இவளுக்குப் இப்போது என்ன பிரச்சினை? சிலபோது தான்; யார் என்பதை மறந்துவிடுகிறாள். சிலபோது நாட்கணக்காகப் பசியில்லாமலும் உறக்கமில்லாமலும் பிசாசுபோல விழித்துக் கிடக்கிறாள். சிலபோது உறங்கிவிடுகிறாள் நாட்கணக்காக.

சிறு உதட்டோர முறுவலுடன்“வீட்டுக்குப் போறேன்”.

“டாக்டர் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க. இப்ப போக முடியாது”

“இல்லை, யாரையும் காத்திருக்கப் பொறுமையில்லை”

அங்கிருந்த தனது உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறி ஹாஸ்பிடல் பில்லிங் கவுண்டரை நோக்கி நடந்தாள். நர்ஸ் இவளைப் பார்த்தபடியே நின்று கொண்டிருப்பதை மனக்கண்களால் உணர்ந்தபடியே.

ஸர்மிளா சிறுகதை- மோனிகா

கனவில் வீட்டு முற்றத்தில் ஆடுகள் நிரம்பியிருந்தன. அவற்றை சாய்த்துக் கொண்டு மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்று உம்மம்மாவின் முந்திரித் தோப்பிற்குள் விட்டாள். முந்திரி இலைகளைக் கண்டதும் குதூகலத்துடன் ஆடுகள் துள்ளித் துள்ளித் திண்ண ஆரம்பித்தன. சில ஆடுகள் முன்னங்கால்களை உயர்த்தி கிளைகளைத் தாழ்த்திப் பிடித்துக்கொண்டு திண்று கொண்டிருக்க ஏதோவொரு திசையில் உம்மம்மாவின் குரல் கேட்டது. “அடியே பயித்தியக்காரி என்னடி செய்றாய். அல்லாஹ்வே ஆட்டுக்கிளைகளைக் கொண்டுவந்து காய்க்கிற மரத்த நாசப்படுத்திறாளே..” இவள்; சிரித்துக் கொண்டே ஓட உம்மம்மா ஆடுகளை “ச்சுய் ச்சுய்” என்று துரத்திக் கொண்டிருந்தார். சுள்ளென்று வலியை உணர்ந்ததும் கனவு கலைந்து விழித்தாள். மங்கிய வெளிச்சத்தில் கையில் சின்னத் துணிப்பொட்டலமொன்றுடன் உம்மா குந்தியிருப்பதைப் பார்த்ததும் பதற்றத்துடன் எழுந்தாள்;. “என்ட தங்கமே கை காலெல்லாம் கன்றிப்போய் இருக்கே. அங்க இதெ வச்சா சரியாயிடும்மா. கண்ண மூடிப்படுத்துக்குங்க” என உம்மாவின் குரல் இரகசிய தொனியில் கெஞ்சியது. உம்மா சொன்னபடியே கண்ணை மூடிக்கொண்டு படுக்க, உப்பு மஞ்சள் கொருக்காப் புளிவைத்து அரைத்து நல்லெண்ணெய் விட்டு நெருப்பில் சூடாக்கிய மருந்துத் திரளையை துணியில் முடிந்து மெல்லிய சூற்றுடன் அடிகாயங்களில் ஒற்றிக் கொண்டிருந்தார். “ஏன்மா நீ இப்பிடி இருக்காய். பொம்பிளைப் பிள்ளெயென்டால் அடக்கமா இருக்கணும் தெரியுமா. பாரு நீ செய்யிற காரியத்துக்கெல்லாம் உம்மா என்னெத்தான் வளத்த முறெ சரியில்லென்டு எல்லாரும் குத்தம் சொல்லுறாங்க.” என்றதும் உம்மாவின் திரண்ட கண்ணீர்த்துளி மூடியிருந்த இவள் கண் இமைகளில் விழ கண்களைத் திறந்தாள். முதன் முறையாக இவளுக்குள் குற்றவுணர்வைப் பிறப்பித்த கண்ணீர் துளி அது. உம்மா இவளைத் தண்டித்துவிட்ட ஆத்திரத்தில் வாப்பாவிடம் திட்டு வாங்கித்தர காத்திருந்தது நினைவில் தோன்றி மனதைப் பிசைந்தது. அடிபட்ட இடங்களைத் தேடித்தேடி ஒத்தடம் போடுவதும் விரலால் அந்த இடத்தை நீவி விம்முவதுமாகவே இருந்தார் உம்மா.

ஞாபகங்களின் ஒளிப்பிழம்புகள் புரவியை விடவும் வேகமாக புறப்பட்டுக் கொண்டிருக்க இருப்புக் கொள்ள மாட்டாமல் வேகமாக நடந்தாள். வீட்டிக்குச் சென்றதும் கண்களை மூடிக்கொண்டு ஊஞ்சலில் ஆடுவாள். இந்த எண்ணம் பசியை விடவும் வேகமாகத் துரத்துவது போலிருந்தது.

-----------------------------------------------
படைப்பு: ஸர்மிளா ஸெய்யித்

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (17-Jan-16, 12:19 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : pilambu
பார்வை : 185

மேலே