சுமை

முகமூடி அணிந்திருக்கவில்லை அவன்.
கையில் கத்தி துப்பாக்கி
கூறிய ஆயுதம் என்று எதுவும்
வைத்திருக்கவில்லை.
எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க
பட்டப்பகலிலேயே அது நடந்தது.
நடுத்தர அளவில் நின்றிருந்த
பார ஊர்தி (லாரி) ஒன்றில்
ஆட்கள் கொண்டுவந்து
கட்டில், மெத்தை, கதிரை, நாற்காலி
அலமாரி, போன்ற வீட்டுத் தளபாடங்கள்
பாத்திரபண்டங்கள் என்று எதையும்
விட்டுவைக்கவில்லை
வீட்டிலுள்ள பொருட்களில் பாதியை
ஏற்றியிருந்தான்.
தங்க நகை சவரண் கணக்கிலும்
ரொக்கப்பணம் ஒருதொகையும் மற்றும்
புதிய வீட்டுப் பத்திரத்தையும் கைப்பற்றியிருந்தான்.
போதாக்குறைக்கு
வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்த
ஆட்டுக்குட்டிகளில்
இரண்டு மூன்றையும் நோட்டமிட்டிருந்தான் .
ஒரு நவீனக் கொள்ளைக்காரனைபோல்
எல்லாவற்றையும் வண்டியில்
துணிச்சலோடு ஏற்றிகொண்டு ,
வெட்கங்கெட்டத்தனமாய் புன்னகைத்த அவனிடம்
“மாப்பிள்ளை... பொண்ண பத்திரமா பாத்துக்கோங்க”
என்று கண்கலங்கி நின்ற மகளையும்
அவனோடு வேறு வண்டியில் ஏற்றி,
கண்கலங்கி வழியனுப்பி வைத்துவிட்டு
ஒரு சுமை குறைந்ததென்று வீட்டுக்குள் நுழைந்து
பெருமூச்சு விட்ட கணவனிடம்
காதில் சொன்னாள் மனைவி
சின்னவள் பெரியவளாகி விட்டாள் என்று.
*மெய்யன் நடராஜ்.