எனக்கு வேலை கிடைச்சிருக்கு

கல்லூரி வளாகத்துள் நடந்தப் பட்ட நேர்முகத் தேர்வில், தான் தேர்ந்தெடுக்கப் பட்டதையும், மாதச் சம்பளம் பதினைந்தாயிரத்தில் வேலை கிடைத்திருப்பதையும் நினைக்க நினைக்க அவள் உள்ளம் மகிழ்ச்சி என்னும் வெள்ளத்தால் நிரம்பிக் கொண்டிருந்தது. அந்த மகிழ்வை தனது பெற்றோர்களிடம் கூறும் பொழுது அதனால் அவர்களும் எத்தனை மகிழ்வடைவார்கள் ,தன்னுடைய தாயும், தந்தையும் தன்னை படிக்க வைப்பதற்காகப் பட்ட இடர்களையும்,இன்னல்களையும் ,இழப்புகளையும் தன்னால் மீட்டுத் தர இயலும் என்னும் நிலையினை நினைக்கும் போது ,அவளது உள்ளம் மகிழ்வால் திக்குமுக்காடியது. இதனை தனது பெற்றோர்களிடம் கூறும் போது அவர்கள் மகிழ்வு எப்படி இருக்கும்.
‘ ஏம்மா உமா ? உண்மையாகவா சொல்றே? ‘ என்று நம்பிக்கை இல்லாமல் கேட்ட உமாவின் தாய் லெட்சுமியின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றன.
‘ஏம்மா உன்கிட்டபோய் இப்படிப்பட்ட பொய்யினை நான் சொல்வேனா ?’ என்று நம்பிக்கை ஊட்டிய உமாவை கட்டி அணைத்துக்கொண்ட லெட்சுமி,
‘ஏங்க... இங்கே கொஞ்சம் வாங்களேன் ‘ என்று கொல்லைப்புரத்தில் ஏதோ வேலையாய் இருந்த கணவரை அழைத்தாள்.
‘என்னடி லெட்சுமி ? என்ன செய்தி ? ‘ என்று கேட்டுக்கொண்ட, அவசர அவசரமாக ஓடிவந்தார் வரதன்.
‘ஏங்க.ஏங்க ... நம்ப பொண்ணுக்கு...’ மகிழ்ச்சி அவளது தொண்டையினை அடைத்துக்கொள்ள , வார்த்தைகள் திக்குமுக்காடின. கண்களில் முட்டிக் கொண்டு நின்ற கண்ணீரைக் கண்டு , பதறிப்போன வரதன்,
‘என்னடி சொல்லுடி ? ஏம்மா உமா நீயாவது சொல்லித் தொலையேன் ‘ என்ற வரதனை ஒருவகை பதட்டமும்,பயமும் பற்றிக்கொண்டன என்றுதான் சொல்லவேண்டும்.
‘இருங்க..இருங்க... நானே சொல்லிடுறேன்...’ என்றவள், முந்தானையால் தனது கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
‘மகிழ்ச்சியில மனம் பொங்கிடுதுங்க.. பேச்சே வரமாட்டேங்குது. அதான்... ‘ என்று சற்று நிறுத்தியவள்,
‘நம்ப பொண்ணுக்கு வேலை கிடைச்சிருக்காம். மாதம் பதினைந்தாயிரம் சம்பளமாம். நம்பவே முடியலைங்க....’ என்று ஒருவாறு சொல்லி முடித்தாள்.
வரதனையும் அந்த மகிழ்வு பற்றிக்கொண்டது. மிதமிஞ்சிய மகிழ்வால் அவரது கண்களும், கண்ணீரால் நிறைந்து விட்டன.
‘ஏம்மா உண்மையா ? ‘ என்பது போல் உமாவைப் பார்க்க முடிந்ததே தவிர, அவருக்கும் வார்த்தைகள் தொண்டைக் குழிக்குமேல் வர மறுத்து விட்டன. தந்தையின் இக்கட்டான நிலையினைப் புரிந்து கொண்ட உமா,
‘உண்மை தாப்பா !’ என்றாள்.
‘ஏங்க நாம பட்ட வேதனைகளுக்கெல்லாம் விடிவு காலம் வந்துடுதுங்க ‘ என்ற லெட்சுமியின் குரலில் உண்மையான மகிழ்ச்சிப் பொங்கியது என்றுதான் சொல்லவேண்டும்.
‘ஆமா லெட்சுமி... ஆண் பிள்ளை இல்லையேன்னு எனக்குள் ஏற்பட்டிருந்த குறை இப்போ இருந்த இடம் தெரியாம போயிடுது லெட்சுமி...அந்தக் குறையை நம்ம பொண்ணு போக்கிட்டா... தன்னாலும் வேலைக்குப் போய் சம்பாதித்து தனது பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கமுடியுமுன்னு நம்ப பொண்ணு நிருபித்துக் காட்டப்போறத எண்ணறப்போ... உண்மையிலே ரொம்ப பெருமையாக இருக்குது லெட்சுமி.’ என்றார் வரதன்.
அப்போதுதான் கடைக்குப்போய் பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பி வந்த, உமாவின் தங்கை ரமா, உண்மைகளைத் தெரிந்து கொண்டு,
‘அக்கா ! உனக்கு வேலை கிடைச்சது எனக்கே வேலை கிடைச்சது போல, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குது தெரியுமா? நம்ம அம்மா,அப்பா பட்ட துயரங்களுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் வரப் போகுதுன்னு நினைக்கிறப்போ... ரொம்ப பெருமையாகவும் இருக்குது அக்கா ‘ என்ற ரமா , உமாவை கட்டி அணைத்துக் கொண்டாள்.
குடும்பமே தன்னால் இத்தனை மகிழ்ச்சிக் கடலில் குளிப்பதைக் கண்ட உமா, இந்த வேலை தனக்குக் கிடைப்பதற்காகப் பரிந்துரை செய்த கல்லூரி நிருவாகத்திற்கு தனது மனமார்ந்த நன்றியை மனதிற்குள்ளேயே கூறிக் கொண்டாள்.
அதற்குள் பேரூந்து நிறுத்தம் ஒன்று வரவே, நடத்துனர் விசில் ஊத, பேரூந்து, சட்டென நின்றது . பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு இறங்க, ஒரே சத்தமாக இருந்தது. இந்த சத்தத்தில் தன் சுய நினைவுக்கு வந்த உமா சுற்றும் முற்றும் பார்க்க , தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டதை உணர்ந்தாள்.அதற்குள் பேரூந்தில் இறங்க வேண்டிய பயணிகள் எல்லாம் இறங்கி விட, நடத்துனர் , தனது விசிலை எடுத்து ஊதத் தயாரானார். புரிந்து கொண்ட உமா ,நடந்துனரைக் கண்ணால் கெஞ்சுவதுபோல் நோக்க,
‘ஏம்மா.. பேரூந்து நிறுத்தம் வருவதற்கு முன்னாடியே எழுந்து வர வேண்டாமா? இப்போ பாரு உன்னால பேரூந்துக்கு நேரமாகு....’ என்று சற்று சத்தமாகக் கூறியவர்,
‘வர வர எல்லாம் பகலிலேயே கனவு காண ஆரம்பிச்சுடுதுங்க... எல்லாம் கலி காலம் ?’ என்று முணுமுணுத்துக் கொண்டார். இதனைக் கண்டு கொள்ளாத உமா,
‘மன்னிச்சிடுங்க... ‘ என்று தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டே இறங்கினாள்.
பேரூந்து நிறுத்தத்திலிருந்து தனது வீட்டிற்கு ஒரு பத்து நிமிடம் நடக்க வேண்டும். நடக்கத் தொடங்கினாள்.மனம் வேகமாக நடக்கத் தூண்டியது. ஆனால் அவளது கால்களில் மனம் பறந்த அளவுக்கு வேகமாக நடக்கச் சக்தி இல்லை. காலையில் இருந்தே அங்கும் ,இங்கும் நடந்து நடந்து கால்கள் வலிக்கத் தொடங்கி இருந்தன.
தனது கைப்பையினைத் துளாவிப் பார்த்தாள். கிட்டத்தட்ட ஒரு நூறு ரூபாய் தேறியது. போகும் வழியில் இருந்த இனிப்புக்கடையில் ஒரு கால் கிலோ லட்டு வாங்கிக் கொண்டு திரும்பிய போது,
‘ உமா... ஏண்டி உமா ‘ என்னும் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது. திரும்பிப் பார்த்தவள், திடுக்கிட்டாள்.
‘ஐய்யய்யோ... இந்த வாயாடி வனிதாவா ? மாட்டிக்கொண்டோமே ... பேச ஆரம்பித்தால் லேசில் விட மாட்டாளே... இவளிடமிருந்து எப்படி தப்பித்துச் செல்வது ‘ என்று எண்ணுவதற்குள், பக்கத்தில் வந்து விட்ட வனிதா,
‘ஏண்டி ..உமா.. எப்படி இருக்கே? இப்பெல்லாம் முன்னே மாதிரி உனை அடிக்கடி சந்திக்க முடியலையே.. என்னடி ஊரிலே இல்லையா ? உன்னைப் பார்க்காமா, பேசாமா என் மனசுக்கு எப்படியோ இருக்குடி... படிப்பு முடிஞ்சுடுது... இனிமே என்னடி பண்ணப்போறே ? வேலை தேடப்போறீயா ? இல்லை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையிலே செட்டில் ஆகப் போறீயா ?‘ என படபடவென்று பல கேள்விகளைக் கேட்டு உமாவைத் திணறடித்தாள்.
எப்போ வீட்டிற்குப் போவோம், எப்போ தனது மகிழ்ச்சியை தனது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வோம் என்று ஏங்கிக் கொண்டிருந்த உமாவால் அவளது எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லும் அளவுக்குப் பொறுமை இல்லை .அந்த மகிழ்வை இவளிடம் பகிர்ந்து கொள்ளவும் மனம் இடம் தரவில்லை. சற்று தவித்துப் போனாள் உமா. தன்னைத்தானே ஒருவாறு சமாளித்துக் கொண்ட உமா,
‘இல்லையடி வனிதா... கொஞ்சம் வேலையா இருந்ததாலே நேரம் கிடைக்கலை..அதான் உன்னையும் சந்திக்க முடியலை..எனக்கு இப்போ அவசரமான வேலை கொஞ்சம் இருக்கு..உன்னோட நின்று பேசுற அளவுக்கு எனக்கு நேரமில்லை.. மன்னிச்சிடு வனிதா.. இன்னொரு நாளைக்குப் பேசலாம்..வரட்டுமா ?’ என்று தனது இயல்புக்கு மாறாக படபடவென்று பேசிவிட்டு, அவளுடைய பதிலுக்குக் கூட காத்திருக்காமல் விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினாள்.
எப்போதுமே நின்று, நிதானித்து, நலம் விசாரித்துச் செல்லும் உமாவின் இன்றைய நடவடிக்கை, வனிதாவுக்கு சற்று விநோதமாகத் தெரிந்தது.
வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டுத் திண்ணையிலும் ஏறிவிட்டாள். வாசலுக்குள் நுழைய வேண்டியது தான் , அதற்குள் வீட்டிற்குள் இருந்து, ஒரு பெண் வேகமாக வெளியே வர, உமா இடித்து விடாமல் இருக்க, சுவர் ஓரமாக ஒதுங்கிக் கொண்டாள். வெளியே வந்தவள் வேறு யாருமல்ல. அவளுடைய் அத்தை தான். அதாவது அப்பாவின் அக்கா.உமா தான் அவளைப் பார்த்தாளே தவிர, அவள் இவள் நின்றதைக் கவனிக்கவில்லை. வந்தவள், வாசல் உள்ளே திரும்பி,
‘இங்கே பாருடா..உன்னை சின்ன வயதிலே தூக்கி வளர்த்த அக்கா சொல்றேன்.. கேட்டுக்கோ. உன் பொண்ணை என்றைக்கு ஆனாலும் என் பையனுக்குத் தான் கட்டிக் கொடுக்கணும்.அவனுக்காகவே பிறந்தவதான் உன் பொண்ணு உமா... அவா பிறந்தப்பவே நான் உனக்குச் சொல்லி இருக்கேன் .. உமா தான் என் மருமகான்னு...அப்படி மீறி அவா படிச்சுட்டா, வேலைக்குப் போறா அப்படி இப்படின்னு ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி, வேறு எங்காவது கட்டிக் கொடுக்கலாமுன்னு நினைச்சே.. நான் சும்மா இருக்கமாட்டேன்.. உன் பொண்ணு கல்யாணத்தையே நடக்க விடாம பண்ணிடுவேன்.. ஆமா கண்டிப்பா சொல்லிட்டேன் ‘ என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு , உமா நிற்பதைக் கூட கவனிக்காமல் விறுவிறுவென்று சென்று விட்டாள்.
அத்தையின் பேச்சு, உமாவின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டது. உள்ளத்தில் இதுவரைப் பொங்கி நின்ற மகிழ்ச்சி நுரை,தண்ணீரை ஊற்றியதைப் போல் அமுங்கிப் போனது. நுரைத்துக் கிடந்த மகிழ்ச்சிப் போய் , இனம் புரியாத வேதனை வந்து ஒட்டிக் கொள்வதை உணர்ந்தாள். கண்களில் கண்ணீர் அவளை அறியாமலே முட்டிக்கொண்டு எழுந்தது.
அதற்குள் வெளியே வந்த வரதன், கண்கலங்கி நின்ற உமாவைப் பார்த்து விட்டார். ஒரு கணம் அவருக்கே திக் கென்று ஆகிவிட்டது. இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தவித்துக் கிடந்த அவரது உள்ளத்தில் உமாவின் கண்களில் பொங்கி நின்ற கண்ணீர் மேலும் தவிக்கச் செய்தது . தனது அக்காவின் பேச்சை உமா நிச்சியம் கேட்டு இருக்கவேண்டும். அதனால் தான் அவளது கண்கள் கலங்கி இருக்கின்றள என்பதை உணர்ந்து கொண்ட வரதன், எதுவுமே நடவாதது போல் தன்னையும் ,தனது உணர்வுகளையும் மாற்றிக்கொண்டு,
‘வாம்மா..ஏன் வெளியிலேயே நின்னுட்டே.. ஏண்டி லெட்சுமி.. உமா வந்துட்டா பாரு..’ என்று தனது மனைவிக்கு எச்சரிக்கை செய்வது போல் கூறினார்.
சூழ்நிலையினை உணர்ந்த லெட்சுமியும் நடந்து முடிந்த நிகழ்ச்சியால் ஏற்பட்ட உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு,
‘வாடி உமா ‘ என்றாள்.
இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்த உமாவால்,தனது உள்ளத்தில் சற்றுமுன் விழுந்த பாரத்ததைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
‘என்னம்மா இதெல்லாம்....என்னால் தாங்கவே முடியலைம்மா..’ என்ற உமாவால் தனது அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
‘இதெல்லாம் உனக்குத் தெரியக்கூடாதுன்னு நினைச்சோம்.. இப்போ உனக்குத் தெரிந்துடுது. எங்களை மன்னிச்சுடும்மா. ஆனா ஒண்ணும்மா என் உயிரு இருக்கிற வரையில என் அக்கா பையனுக்கு உன்னை நான் கட்டிக் கொடுக்க மாட்டோம்மா.. ஏன்னா அவன் ஒரு முரடன், படிக்காதவன், குடிகாரன், ஊதாரி...நீ பயப்படாம இரும்மா.. உனக்குன்னு ஒரு நல்லவாழ்கையை அமைச்சிக் கொடுக்கிறது..என்னோட பொறுப்பு. உன்னோட விருப்பம் இல்லாம நான் எதுவம் செய்யமாட்டேம்மா என்னை நம்பு..’ என்று என்னென்னவோ சொல்லி அவளைச் சமாதானப் படுத்தினார்கள். வரதனும், லெட்சுமியும்.
கொஞ்சம் கொஞ்சமாக உமாவின் மனது சமாதானமடைந்தது. தன்னை யாரும் விரும்பத்தகாத இடத்தில் தள்ளிவிடமாட்டார்கள் என்னும் நம்பிக்கை உணர்வு மேலோங்கியது. தனது அத்தை செய்து விட்டுப் போன சவால், நிச்சியமாக முறியடிக்கப்பட்டுவிடும் என்று நம்பியபோது, மனதின் பாரம் குறையத் தொடங்கியது.
‘ அம்மா,அப்பா ! ஒரு நல்ல செய்தி....’ என்றாள் உமா. என்னவென்பது போல் இருவரும் உமாவின் முகத்தைப் பார்க்க,
‘எனக்கு வேலை கிடைச்சிருக்கு.. மாதம் பதினைந்தாயிரம் சம்பளம் ‘ என்றாள்.
வீட்டிற்கு வரும்போது இருந்த உற்சாகமும் ,மகிழ்வும் அவளது குரலில் இல்லை என்பது உண்மையாக இருந்தபோதும்,அந்த உற்சாகமும், மகிழ்வும் சற்று முன்பு நடந்த சம்பவத்தை மறக்கச் செய்து அவளது பெற்றோர் உள்ளத்தைப் பற்றிக் கொண்டது மட்டும் உண்மை. இதையெல்லாம் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த ரமா ‘அக்கா’ வென ஓடிவந்து உமாவை கட்டிக் கொள்ள, உமாவும் தனது மனதுக்குள் மகிழ்வும், உற்சாகமும் மெல்ல வந்து ஊறுவதை உணரத் தொடங்கினாள்.
********************************************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (25-Jan-16, 8:20 pm)
பார்வை : 210

மேலே