ஆறுதல்
வானம் வரண்டு விட, வாய்க்கால்கள் காய்ந்துவிட, வயல்வெளியெல்லாம் பாளம் பாளமாக வெடித்து மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தன. சுட்டெரிக்கும் வெயில் எல்லாவற்றையும் பொசுக்கிப் போட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆமாம் மரங்களில் பச்சையெல்லாம் காய்ந்து போய், மொட்டை மரங்களாக நின்று கொண்டிருந்தன. மனிதமனங்களை எல்லாம் மகிழ்வித்து ,சலசலவென தண்ணீரை எப்பொழுதும் வாரி வழங்கிக் கொண்டிருந்த மதகுகள் எல்லாம் மண் மூடிக்கிடந்தன. தாகத்திற்குத் தண்ணீர் தேடி பறவைகள் எல்லாம் பறந்து கொண்டிருந்தன.
என்றிந்த கோலங்கள் மாறும் என்று பார்த்துக் கொண்டிருந்த பாண்டியனின் மனம் வேதனை நெருப்பால் வெந்து வெந்து கொண்டு இருந்தது. சென்ற வருடம் செல்வாக்கோடு வாழ்ந்தவன், இன்று சொல்ல முடியாத துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறான். காய்ந்து கிடந்த வயல் வெளிகளைப் போல் ,அவனது வயிறும் காய்ந்துதான் கிடந்தது. நேற்றுக் காலையில் கொஞ்சம் கஞ்சி குடித்து ,வயிற்றை நனைத்துக் கொண்டவன்தான், அதன் பிறகு தண்ணீர் குடிக்கக் கூட மறந்து விட்டான். அத்தனை துயரத்தில் அவன் மூழ்கிக் கிடந்தான்.
வீட்டில் மனைவியும், பிள்ளைகளும் பட்டினி கிடக்கும் போது,இவனுக்கு மட்டும் பசி எங்கிருந்து வரும்.உழைப்பதற்கு உடம்பு இருக்கிறது. பட்டினியாய் கிடந்தாலும் உழைப்பதற்கு மனதில் உறுதி இருக்கிறது. ஆனால் வேலை ?.....
அவனுடைய மனைவி லெட்சுமி, சின்ன வயதில் விளையாட்டாகக் கற்றுக் கொண்ட ,பீடித் தொழில் இன்று ஓரளவு கை கொடுக்கிறது . இரண்டு பிள்ளைகளுக்கும் ஒருவேளை கஞ்சிக்கு வழி வகுக்கிறது . அதுவே உன்னைப்பிடி, என்னைப்பிடி என்றிருக்கும். பல நாட்கள் பாண்டியும், அவன் மனைவியும் அந்தக் கஞ்சி கூட பற்றாமல் , பிள்ளைகளுக்கு மட்டும் கொடுத்து விட்டு, காய்ந்து கிடந்த நாட்களும் உண்டு.
வானம் பெய்யாதா ? வளமை பொங்காதா ? வயிறெல்லாம் நிறையாதா ? என்று ஏங்கிக் கொண்டிருந்த ,பாண்டியனின் தோள் மேல் ஒரு கை விழுந்தது. திடுக்கின்றி திரும்பிப் பார்த்தான் . அவனைப் போலவே வாடிக்கிடந்த வேலன் நின்று கொண்டிருந்தான், ‘என்ன ? ‘ வென்பது போல் பாண்டி அவனைப் பார்த்தான். அவன் இவனையே பார்த்துக் கொண்டிருந்தானே தவிற , அவனால் பேச இயலவில்லை. கண்கள் கலங்கின. அவனும் சரியான உணவின்றி பட்டினி கிடக்கும் தன்னைப் போல் ஒருவன் தானே ? என்றுணர்ந்த பாண்டி,
‘ வேலா.... என்னடா ? சொல்லுடா ? ‘ என்றான்.
‘என்னத்தச் சொல்றது... பட்டினியா கிடக்கிற பிள்ளைகளைப் பார்த்தா நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்குடா... இப்படிச் சோறு கூட போட வக்கில்லாத அப்பனா இருக்கிறதுக்கு , செத்துடலாம் போல தோணுதடா..... ‘ என்ற வேலன் கண்கள் கலங்க, கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.
‘டே ..என்னடா பேச்சு பேசுறே.... நீ செத்துட்டா உன் பொண்டாட்டி ,பிள்ளைங்களோட பசி நீங்கிடுமாடா...
பைத்தியக் காரனாட்டம் பேசாதே..மனிதன் இயற்கையை எப்படியெல்லாமோ சீரழித்து விட்டான்.. இன்னும் சீரழித்துக் கொண்டும் இருக்கிறான்.. அதனாலே இப்போ இயற்கை மனிதனை சீரழித்து வேடிக்கை பார்க்குது.. அவ்வளவுதான்..’ எங்கெங்கோ அலைந்து பார்த்துட்டேன்.. ஒரு இடத்திலும் வேலை கிடைக்கலை.. இதுல வேடிக்கை என்னென்னா , வேலை கொடுத்தவனும், இன்றைக்கு வேலை தேடி அலைவதுதான்.. அப்படி இருக்கிறப்போ நமக்கு எங்கேப்பா வேலை கிடைக்கும் ‘ என்றான் பாண்டி.
‘பாண்டி , நா ஒரு யோசனை சொல்லவா..?’
‘சொல்லேண்டா.. என்ன தயக்கம் ?’
‘தயக்கம் இல்லை.. சொல்லறது உண்மையா இருக்குமாங்கிற சந்தேகம் தான்..’
‘என்னென்னு தான் சொல்லேன்...’
‘நம்ம தேவநாதன் அண்ணன் , ஒரு இடத்துக்குப் போனா வேலை கொடுப்பாங்கன்னு சொல்றாரு.ஆனா ஒரு வாரம், பத்து நாளுன்னு வீட்டுப் பக்கம் எட்டிக் கூட பார்க்கமுடியாதுன்னும் சொல்றாது.... அதான் யோசனையா இருக்குது.. பட்டினியாய் கிடந்தாலும் மனைவி, மக்களைப் பிரிந்து எப்படி பாண்டி ஒரு வாரம், பத்து நாளுன்னு கிடக்கிறது...,’ என்ற வேலனின் வார்த்தைகளில் புதைந்து கிடந்த ஒரு நம்பிக்கையும், அதே சமயம் குடும்ப பாசத்தின் காரணமாக , மனைவி மக்களைப் பிரியணுமே என்கிற வேதனையும் தெரிந்தது.
‘வேலா .. அப்படியெல்லாம் பார்த்தா ... எத்தனை நாளைக்குத்தான் குலைப் பட்டினியும், குற்றுயிருமாக மனைவி மக்களைச் சாகடிப்பது... கொஞ்சம் எண்ணிப் பார். வேலை கிடைக்குதுன்னா ,
2
இந்தச் சூழ்நிலையில் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு இருக்கிறது தப்பே இல்லை... பந்தமும் , பாசமும் கூட பசி எடுத்தா பறந்தே போயிடும்..வா . நீ சொல்ற இடத்துக்குப் போவோம். ஏதாவது வேலை கிடைக்குதான்னு பார்ப்போம்.’ என்ற பாண்டியின் வார்த்தைகள் , வேலனுக்குத் தைரியத்தை ஊட்டவே,,
இருவரும் வேலை கிடைக்கும் இடம் நோக்கி நடந்தார்கள்.
வேலன் குறிப்பிட்ட ஊர் பக்கம் இருவரும் வந்து விட்டார்கள். ஆனால் வீடுதான் எதுவென்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம் எப்படி கேட்பது என்ற தயக்கம் தான்.
அப்போது அவர்களுக்கு எதிரே வேகமாக ஒருவன் வந்து கொண்டிருந்தான். இவன் இந்த ஊர்காரனாகத்தான் இருப்பான். எனவே இவனிடம் கேட்டால், ஏதாவது தகவல் கிடைக்கும் என்று முடிவு செய்த பாண்டி,
‘அண்ணே... கொஞ்சம் நில்லுங்கண்ணே... ‘ என்றான்
அவசரமாகச் சென்றவன் நின்றான், என்னவென்பது போல் இவனைத் திரும்பிப் பார்த்தான்.
‘அண்ணே கோவிச்சுக்காதிங்க.... இங்கே காட்டுல வேலை செய்றதுக்கு ஆட்கள் எடுக்கிறவர் வீடு எங்கே இருக்குன்னு தெரிஞ்சா... கொஞ்சம் சொல்லுங்கண்ணே.... ‘ என்று மிகவும் பணிவோடு கேட்டான் பாண்டி.
மேலும் கீழும் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தான். மிகவும் பரிதாபமாக விழித்துக் கொண்டு நின்றார்கள். அவர்கள் முகத்தில் ஒட்டிக் கொண்டு இருந்த பசியின் உணர்வும், வேதனையும் தெரிந்தது.
‘நேரா போய் ,இடது பக்கம் திரும்பிப் போனீங்கின்னா... அந்தத் தெருவின் கடைசியில் ஒரு பெரிய இரும்புக் கதவு போட்ட மாடி வீடு இருக்கும் அங்கே போங்க ... ஆள் எடுக்கிறதைப் பத்திச் சொல்வாங்க ‘ என்றவர் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார்.
‘அண்ணே ரொம்ப நன்றி ‘ என்று சொன்ன வேலனின் வார்த்தைகளை, அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.
அவன் சொன்ன வழியிலே இருவரும் நடந்து வீட்டைக் கண்டு பிடித்தார்கள். வீட்டின் சுற்றுச் சுவரில் போடப்பட்டிருந்த ஒரு பெரிய இரும்புக் கதவின் முன்னால் நின்றார்கள். அந்தப் பெரிய இரும்புக் கதவில் ,உள்ளே இருந்து திறந்து பார்க்கிற மாதிரி , ஒருசின்னக் கதவு இருக்கவே, அதன் அருகில் சென்று மெல்ல தட்டினார்கள். சிறிது நேர தட்டலுக்குப் பின் ,கதவு மெல்ல திறக்க, அதன் வழியே ஒரு முகம் தெரிந்த்து.
‘யாருப்பா ? என்ன வேணும் உங்களுக்கு ?’ என்று கேட்ட அந்தக் குரலில் ஒரு அதிகாரத் தோரணை இருப்பதை உணர்ந்தார்கள்.
‘ஐயா ஒண்ணுமில்லையா .. இங்கே காட்டு வேலைக்கு ஆள் எடுக்கிறதா கேள்விப்பட்டோம்...அதான் கேட்டுட்டுப் போகலாமுன்னு வந்தோம் ‘ என்று தலையைச் சொறிந்து கொண்டே சொன்னான் வேலன்.
‘இருங்க வர்றேன் ‘ என்று அந்த முகம் அந்தச் சிறிய கதவை சாத்திவிட்டு மறைந்தது.
‘பாண்டி வேலை கிடைச்சுடுமா ? ‘ என்று சந்தேகத்தோடு கேட்டான் வேலன்.
‘கேட்டுப் பார்ப்போம்.. எல்லாம் நம்ம கையிலேயா இருக்கு...’ என்றான் பாண்டி.
சிறிது நேரத்தில், பெரிய இரும்புக் கேட் திறக்கப்பட, , இருவரையும் உள்ளே ஒருவர் அழைத்துச் சென்று, சாய்வு நாற்காலியில் படுத்துக் கிடந்த ஒரு முரட்டு ஆசாமியின் முன்னால் கொண்டு நிறுத்தினான்.
‘ஐயா.. இவங்கதான் வேலை கேட்டு வந்தவங்க...’என்றான் அழைத்துக் கொண்டு வந்தவன்.
‘ஐயா வணக்கம் ‘ என்றார்கள் இருவரும்.
‘வேலை கேட்டு வந்திருங்கீங்க ..நல்லது. உங்களுக்கு எந்த மாதிரியான வேலைகள் தெரியும்.
‘ஐயா எந்த வேலை கொடுத்தாலும் செய்றதுக்குத் தயாராக இருக்கோமுங்க...’
‘அப்படியா ! நல்லது.. காட்டுல போய் மரம் வெட்டணும்.. ஒரு வாரம் , பத்து நாளுன்னு காட்டுக்குள்ளே தங்கி இருக்கணும்...கூலி அவங்க அவங்க செய்ற வேலைக்குத் தகுந்த மாதிரி தரப்படும். சம்மதமுன்னா நாளைக்குச் சாயந்திரம் ஐந்து மணிக்கு வந்திடுங்க. லாரி வரும். அதிலேயே நீங்களும் போயிடலாம் ‘ என்றார்
‘சம்மதமுங்க.. நாளைக்குச் சாயந்திரம் கண்டிப்பா வந்திடுறோம்..’ என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.
‘ஏங்க நீங்க சொல்றத கேட்க நல்லாத்தான் இருக்கு...ஆனா காட்டுல போய் மரம் வெட்டணுமுன்னா ... அது அரசாங்கத்துக்காக வெட்டுறாங்களா இல்லை கடத்திப் போக வெட்டுறாங்களான்னு தெரியாம போறது நல்லது இல்லேன்னு படுது...’ என்றாள் பாண்டியின் மனைவி லெட்சுமி.
3
‘அதெல்லாம் நமக்கு முக்கியமாடி.. ஏதோ போனோமா வேலையைப் பார்த்தோமா? கூலியை வாங்கினோமான்னு வரவேண்டியது தான்.... நம்ம வயித்துக்கு நாம தானே உழைக்கணும்...எங்கூட வேலனும் வர்றான். வேலையை முடிச்சுட்டு வர்றப்போ கைநிறைய பணத்தோடு வரலாமுன்னு சொல்றான். போய்தான் பார்க்கலாமே..ஒருவேளை நம்ம வேதனைகள் இதோடு தீரலாமில்லையா ?’
என்று சொன்னபோது, அவளது மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், ஒருபுறம் ஏதோ ஒரு சஞ்சலமும் மனதை அரிக்கத்தான் செய்தது .
‘ஏம்மா... அப்பா மரம் வெட்டப் போயி ஒரு வாரம் ஆயிடுதே... எம்மோம்மா வருவாரு... அப்பா வந்துட்டார்ன்னா நம்ம வறுமை எல்லாம் பறந்துடும்... மூணு வேளையும், பசியாற சாப்பிடலாம் இல்லையாம்மா... ‘என்ற இளையமகனின் குரலில் இருந்த ஏக்கத்தை உணர்ந்தபோது லெட்சுமியின் உள்ளத்தை ஏதோ ஒரு உணர்வு சுள்ளெனக் குத்தியது.
‘பத்து நாள் ஆகுமுன்னு தானே சொல்லிட்டுப் போனாரு... எப்படியும் இரண்டு மூணு நாள்லே வந்திடுவாருடா....’ என்று ஆறுதலாகக் கூறினாள் லெட்சுமி.
அப்போது வெளியிலிருந்து வேகமாக ஓடி வந்த மூத்தவன்,
‘அம்மா ! அம்மா ! உனக்குச் செய்தி தெரியுமா ?’ என்று மூச்சி வாங்கிக்கொண்டே கேட்டவன், உடலில் ஒரு பதட்டம் இருப்பது தெரிந்தது
‘என்னடா ? என்ன செய்தி ? பதட்டப்படாம சொல்லு....’
‘அம்மா காட்டுக்கு மரம் வெட்டப் போன இருபது பேரை போலீசு சுட்டுக் கொன்னுடுதாம் ‘
‘என்னடா... என்ன சொல்றே ?’ என்றவளை பயமும்,பதட்டமும் பற்றிக் கொண்டன.
‘உண்மைதாம்மா டி.வி செய்தியில சொன்னாங்களாம்... பக்கத்துத் தெருவில பேசிக்கிறாங்க..’
இதனைக் கேட்டவுடன் உலகமே இருண்டது போன்று இருந்தது. லெட்சுமிக்கு. அந்த இருபது பேரில் தன் கணவன் பாண்டியனும் ஒருவனாக இருப்பானோ என்று எண்ணிய போது அவளது நெஞ்சை யாரோ பிடித்து அமுக்குவதுபோல் துடித்தாள். நிச்சியமா அப்படி இருக்கக் கூடாது என்று எல்லாக் கடவுள்களையும் மனதுக்குள் வேண்டிக்கொண்டாள் . விருட்டென எழுந்தவள் , பக்கத்துத் தெருவில் டி.வி இருக்கும் வீட்டை நோக்கி ஓடினாள். அம்மா ஓடுவதைக் கண்டதும் , மூத்த மகன் ஓட, இளையவனும் என்னவென்று எதுவும் புரியாமல் ‘ அம்மா! அம்மா ‘ என்று கத்திக் கொண்டே ஓடினான்.
லெட்சுமி போய் சேர்ந்தபோது டி.வி யிலே அந்தச் செய்திதான் முக்கியச் செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது.
‘காட்டுக்குள் செம்மரக்கட்டைகளை வெட்டிக் கடத்திய, கடத்தல்காரர்கள் இருபது பேர் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். உடல்கள் மருத்துவ பரிசோதனைக்காக அரசாங்க மருத்து மனைக்கு அனுப்பப் பட்டுள்ளன.’ என்ற செய்தியின் நடுவில் சற்று முன் கிடைத்த முக்கிய செய்தி என்று தலைப்பில் செய்தி வாசிக்கப்பட்டது....
‘சுட்டுக் கொல்லப்பட்ட இருபது பேரின் பெயர்கள்..........’ என்று படிக்கப்பட லெட்சுமியின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. அந்த இருபது பெயர்களில் பாண்டி, வேலன் இருவர் பெயர்களும் இருந்தன.வயிற்றுப் பசிக்காக , காட்டுவேலைக்குப் போனவர்கள் , பசி காணாத உலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
மனிதபிமானமில்லாமல் காட்டுமிராண்டித்தனமாகச் செயல்பட்ட காவல்துறையினைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.போராங்களைக் கண்டு பயந்து போன அரசாங்கம் நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும்,இறந்து போனவர்களின் குடும்பங்களுக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாயை குடும்ப நல நிதியாகக் கொடுப்பதாகவும் அறிவித்தது ஒரு சிறு ஆறுதல் என்றுதான் சொல்லவேண்டும்.
*************************************************