கொண்டாடப்படாத காதல்கள் --முஹம்மத் ஸர்பான்

இரு மனங்கள் ஓர் ஆயுளாகும்
உயிரின் அணுச்சேர்க்கை காதல் கருவறை
கண்களால் உணர்வுகள் பேசப்படும்
மெளனத்தில் கவிதைகள் வீசப்படும்
கண்ணீர் சிந்தும் தருண மெல்லாம்
அவனுக்கு அவளும்
அவளுக்கு அவனும்
ஈரம் துடைக்கும் கைக்குட்டை இமைகள்
துருப்பிடித்த ஆணிகள் கொங்ரீட் சுவரில்
அடிக்கப் படுவதை போல அவள் பூக்களை
தொட்டால் என் கைகளில் முட்கள் குத்தும்
நான் கவிதைகள் எழுதினால் என்னவள்
முகம் வெட்கத்தால் சிவக்கும்.
உண்மைக் காதலில் ஆணும் தாயாகிறான்
இதயக் கருவில் பேதை மனதை சுமந்தவனாக...,
பெண் என்பவள் தாய்மையின் பிறப்பிடம்
என்பதால் காதலனை மகனாக அணைக்கின்றாள்.
அவள் ஆடைகள் விலகியிருந்தும் கண்களை
மூடிக்கொண்டு காமத்திற்கு தீ வைக்கிறேன்
நான் முடமாக போகும் ஒரு நாள் வந்தால்
என் கழிவுகளை அள்ளி சுத்தம் செய்திருப்பாள்
தண்ணீர் துவைக்கும் பனிமலைகள் மேல்
எரிமலையின் செங்கதிர் துகள்கள் விழுவதை போல
காதல் கருவறை பிரசவிக்கும் முன் சாதீ எனும்
கொடுர ஆயுதத்தால் கொல்லப்படுகிறது இன்று வரை..,
இவன் அழுதால் அவளுக்கு வலிக்கும் என்பதால்
அழுகை மறைத்து கண்ணீரோடு சிரிக்கின்றான்.
இவள் அழுதால் அவன் இறந்து விடுவான்
என்பதால் அவளும் முள் மேல் புன்னகைத்து நிற்கின்றாள்
தூண்களில்லாத வானை போல தெய்வீகக்
காதல் நினைவுகள் இதயக் கோட்டை கட்டுகிறது
காதல் உலகில் பாயும் உதிரவலைகளால்
என்புகளின் தூண்களுக்கு உயிரால் வண்ணம் பூசப்படுகிறது
புழுதி படிந்த கூரை வழியே வானை பார்ப்பதை
போல அவன் கண்களில் அவளும் அவள் கண்களில்
அவனும் தனிமை சிறையில் தோன்றினாலும்
ஆயுள் எனும் தூக்கு மேடையில் மரணம் ஒன்றாய் வருகிறது
காதல் இலக்கணத்தை புரிந்த மனங்கள்
உடலின் நிழல் போல கைவிரல்களில் மோதிரம்
மாற்றி ஆனந்தக் கடலில் ஓடமாய் பயணிக்காமல்
துன்பக் கடலில் உயிரின் நினைவுகளால் கல் கட்டப்பட்டு
வீசப்பட்ட உடல்களாய் கரை சேர்க்கிறது.கடவுள்
எழுதிய சதியின் இலக்கணத்தை எந்த கவிஞன்
போராடி வளர் பிறையாய் காதலை வாழச் செய்வானோ?
வருடத்திலுள்ள ஒவ்வொரு நாட்களும் காதலர்
தினம் என்றால் அது பொய் ஆகிவிடும்.ஆனால்
நகரும் ஒவ்வொரு நொடியிலும் ஓராயிரம்
கொண்டாடப்படாத காதல்கள் தாஜ்மஹால்
முன்றலில் சமாதியாகிறது.