சிவன் ஒரு கொலைக்காரன்

சிவனின் அடியவராக மாறினாலும் மாறினார் காளமேகப் பெரும்
புலவர். சிவனின் நண்பராக மாறி விட்டார்.

நமது ஊரிலே ஒரு நிமிட யோசனையின்மையின் பயனாக கொலை செய்பவர்கள். பிறகு அதனை நினைத்து நினைத்தே அழுது கொண்டிருப்பர்.

திட்டமிட்டுக் கொலை செய்தவர்கள். அவர்களே கொலை ஆயுதத்தோடு காவல் நிலையம் சென்று கொலை செய்ததைச் சொல்லி சட்டத்திற்குக் கட்டுப்படுவர்.

சிலர் ஓடி மறைந்து கொள்வர். காலம் பார்த்து நீதிமன்றத்தில் சரணடைவர்.
சிலரோ காவற்றுறைக்கும் சமூகத்திற்கும் அஞ்சி எங்கேயாவது
காடுகளில் ஒளிந்து கொள்வர்.
அப்படித் தான் சிவ பெருமானும் என்று கருதுகின்றார் காள்மேகப்புலவர்.

திருச்செங்காட்டங்குடி திருத்தலத்திற்கு சென்ற அவர் நாட்டிற்குள்ளேயே பார்த்து பார்த்துப் பழகிய சிவ பெருமானை காட்டிற்குள் பார்த்தவுடன் ஒரு ஐயப்பாடு நேர்கிறது புலவருக்கு.

செய்வதையெல்லாம் செய்து விட்டு இப்படி காட்டிற்குள்ளே வந்து

உட்கார்ந்து இருப்பது நியாயமா என்று சிவ பெருமானிடம் கேட்கின்றார்.

நாவுக்கரசர் பொன்னம்பலத்தில் பாடுவாரே

ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கோர் ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவர்க்காய் என்று

தனது பக்தனுக்காக காலதேவனைக் கொன்றீர். அது ஒரு கொலைக் குற்றம்.

மன்மதனைத் தீக்கிரை ஆக்கினீர். அதுவும் ஒரு கொலை தான்.

உம்மையே தொழுது நின்றார்களே சிறுத் தொண்டனும் அவன் மனைவியும் அவர்கள் குழந்தையை கொன்று கறி சமைத்துக் கேட்டதானால்

அந்தக் கொலைக்கும் காரணம் நீர்தான்.

இப்போது தானே புரிகின்றது. நீர் காட்டிலே வந்து ஏன் இருக்கின்றீர் என்று. இத்தனை கொலை செய்த ஒருவர் நாட்டிலே எப்படி இருக்கமுடியும். சரியான ஆள் பெருமானே நீர் என்கின்றான்.

செய்யுள்

காலனையும் காமனையும் காட்டு சிறுத் தொண்டர் தரு
பாலனையும் கொன்ற பழிபோமோ -- சீலமுடன்
நாட்டிலே வீற்றிருந்த நாதரே நீர் திருச்செங்
காட்டிலே வீற்றிருந்தக் கால்.

***********

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (6-Feb-16, 12:47 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 129

சிறந்த நகைச்சுவைகள்

மேலே