தகப்பன் பிம்பம்

மகன் பேய்க் கதை கேட்பான்
நான் உடனே கதை சொல்லிவிடமுடியாது
இரண்டு கடைவாய் ஓரங்களிலும்
செயற்கைப் பல் வைத்து
கண் இமைகளின் உள் சிவப்பினை மடித்து
கைவிரல்களை விரித்து
கண்களை உருட்டி
கதையை ஆரம்பிக்க வேண்டும்,
அவனோ என் கைவிரல்கள் விரியும் முன்னமே
தன் இருகைகளாலும் கண்களை மூடிக்கொண்டு
கதை கேட்கத் துவங்குவான்
இதுவரை என் கதை சொல்லும் உடல்மொழியை
அவன் பார்த்ததேயில்லை
இருந்தும் ஒருவேளை அவன் கண்திறக்க நேர்ந்தால்
ஒரு தகப்பனின் உண்மை என்ற பிம்பம்
அவனுள் உடைந்து விடாதிருக்க
அடுத்தடுத்த நாட்களிலும் அப்படியே தொடர்கிறது
அவனின் பேய்க்கதை கோரிக்கையும்
என் கதை சொல்லும் வாடிக்கையும்.